தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் என ஜூலை 22-ஆம் தேதி காலையில் இருந்தே பரபரப்பானது. கலைஞர் டி.வி.யிலும் செய்தி ஓடியது. திமுகவினர் பரபரப்படைந்தனர். துணை முதல்வராகிறார் உதயநிதி என்றும் துரைமுருகன், கே.என்.நேரு, ஆர்.காந்தி, கணேசன், மனோ தங்கராஜ் மற்றும் சிலர் கழற்றிவிடப்பட்டு, ஆவடி நாசர், டாக்டர் எழிலன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி.செழியன் போன்றோர் புதியதாக சேர்க்கப்படலாம் என்றும் சோஷியல் மீடியாவில் பதிவுகள் தூள் கிளப்பின.
டிவிட்டரில் ராஜேந்திரன் என்பவரோ, அமைச்சரவையில் மாற்றமில்லை என்று பதிவிட்டார். தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸடாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு தகவல் தெரியாதே என்றார். இதன்பிறகு பரபரப்பு ஓய்ந்தது.
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகக் கூட்டம் அன்றுதான். அந்த செய்தியை மறக்கடிக்கவே, அமைச்சரவை மாற்றம் என்று வதந்தியை கிளப்பினார்கள் என்கிறார்கள். இருக்குமோ…
——————-
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மாற்றமா…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பேற்றவுடன் எம்.பி. தேர்தலைச் சந்தித்தும்விட்டார். கே.எஸ்.அழகிரியால் நியமிக்கப்பட்ட பல மாவட்ட தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்று கூற, மாற்றம் செய்யவும் மேலிடம் பச்சைக் கொடி காட்டிவிட்டது. இதன்படி, மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்.
திமுகவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம், கூடுதலாக மாவட்டங்கள் பிரிப்பு என்று பேச்சு அடிபடுவதால், அதற்கேற்ப காங்கிரஸிலும் மாவட்டங்களைப் பிரித்தால், தேர்தல் பணி சரியாக இருக்கு் என்று செல்வபெருந்தகைக்கு கதர்சட்டை தலைவர்கள் ஐடியா சொல்லியிருக்கிறார்கள். அதற்காகவே வெயிட்டிங் என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.
——————-
யாரையும் மாற்ற மாட்டாங்களா…
அதிமுகவில் யார் எப்போது பதவியில் இருப்பார்- எப்போது நீக்கப்படுவார் என்று ஜெயலலிதா இருந்தநிலை மாறிவிட்டது. முன்னணித் தலைவர்கள், அமைச்சர்களே நடுங்கினர். ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது. 10 ஆண்டுகளாக, பெரும்பாலான நிர்வாகிகள் அப்படியே தொடர்கிறார்கள். மாற்றம் வரும் என்கிறார்களே தவிர ஒன்றையும் காணோம்.
ஐவர் குழு, மூவர் குழு, நால்வர் குழு என்று பல குழுக்களை ஜெயலலிதா அமைத்தபோது, அவற்றில் இடம்பெற்றிருந்தவர் இன்றைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கிளை செயலாளரை கூட மாற்ற யோசிக்கிறார் அவர்.
தலைமைக் கழகத்தில் புகார் பெட்டி வைத்தால், தினமும் பல லாரிகளில் மனுக்கள் சேரும் என்கின்றனர் அதிமுகவினர். வைத்துப் பாருங்களேன் அப்படி நடக்குமா
——————-
கவுன்சிலர்கள் குறை சொல்வதா..
கவுன்சிலர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையை மையப்படுத்தி இது அவர் பேசியிருக்க, ஒட்டுமொத்த கவுன்சிலர்களையே பேசியதுபோலாகிவிட்டது. நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட்சிக் குழு கவுன்சிலர்களே செலவிட்ட தொகையை கூட எடுக்க முடியவில்லையே என்று புலம்பி வருகின்றனர். அள்ளி அள்ளி வாரி சுருட்டும் சேர்மன்கள் தங்களுக்கு கிள்ளியே கொடுக்கிறார்கள் என்று கவுன்சிலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
கோவை, திருநெல்வேலி மேயர்களை மாற்றியது போல், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் சேர்மன்களை மாற்ற வேண்டும் என்கின்றனர் கவுன்சிலர்கள். மாநகராட்சிகளை போல மண்டல சேர்மன்களையாவது ஏற்படுத்த வேண்டும் என்று சேர்மன் பதவி கிடைக்காமல் ஏமாந்த கவுன்சிலர்களின நப்பாசையாக இருக்கிறது.
– ஏகன்அநேகன்
Leave a Reply