Save 20% off! Join our newsletter and get 20% off right away!

வேலூர் மாவட்ட திமுகவில் விரிசல்?மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைகளே மணம் வீசுது….

மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா சொன்னது உலகத் தமிழர்கள் யாராலும் மறக்க முடியாத பொன்மொழி.  
இது எப்போது சொன்னது என்று பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். வேலூரில் 1960-களில் நகராட்சி சேர்மனாக (பின்னர் எம்எல்ஏவும் கூட) இருந்த மா.பா.சாரதியின் ஏற்பாட்டில், கோட்டை வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையைத் திறக்க அண்ணா அழைக்கப்பட்டார். காந்தி சிலையை அண்ணா திறப்பதா என்று அப்போது காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர். இந்த விழாவில் பங்கேற்றபோதுதான், காந்தி சிலையைத் திறக்க எனக்கு ஏன் எதிர்ப்பு. மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதுபோல்,  காந்தி சிலையைத் திறக்க எனக்கும் உரிமை உண்டு என்றார்.
வரலாற்று சிறப்புமிக்க அண்ணாவின் பேச்சு வேலூரை திமுகவின் கோட்டையாக உருவாக்கியது. இந்தக் கோட்டையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
மா.பா.சாரதி, தோப்பூர் திருவேங்கடம், வி.எம்.தேவராஜ் போன்ற ஜம்பாவன்கள் வேலூரை திமுகவின் கோட்டையாக்கி அழகு பார்த்தனர். ஆனால், தற்போது மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களேதான் திமுகவில் கோலோச்சி வருகின்றனர் என்றே திமுக தொண்டர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
மதிமுகவில் சிலகாலம் வாசம் செய்த  ஏ.பி.நந்தகுமார் திமுக ஆட்சிக்கு வந்ததும் வந்துவிட்டார். அமைச்சர் துரைமுருகனுக்கு விசுவாசத் தொண்டனாய் இருந்த பிரபல காண்டராக்டராகி, மாவட்ட செயலாளரானவுடன் அவரையே எதிர்க்கும் அளவுக்கு குருவை விஞ்சிய சி்ஷ்யனாகிவிட்டார்.
துரைமுருகனையும், அவருடைய மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்தையும் சந்திக்கும் திமுகவினரை பிளாக் லிஸ்டில் போட்டு வைத்திருக்கும் நந்தகுமார்,  அவர்களை நேரம் பார்த்து கழட்டிவிடுகிறார்.
எம்.பி. தேர்தலின்போதே தனது ஆதரவாளர்களை வைத்து செக் வைத்த ஏ.பி.நந்தகுமார் பல காண்டிராக்டுகளை பெற்று, கதிர்ஆனந்துக்கு தேர்தல் பணியாற்றினார் என்று வெளிப்படையாக திமுகவினர் பேசுகின்றனர்.
 நந்தகுமாரின் ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் செய்யும் பப்ளிசிட்டி, தனி ஆவர்த்தனம், ஏ.பி.என். பிரதர்ஸ் என்ற பெயரில் செய்யும் அட்டகாசம், காண்டிராக்டுகள்  அதிமுகவினருக்கு தாரை வார்ப்பு, சொத்துகள் குவிப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றுதலில் அத்துமீறல், மணல் திருட்டு, கட்டப் பஞ்சாயத்து, ஜாதி அரசியல் என்று பல்வேறு முறைகேடுகள் குறித்து நந்தகுமார் மீது புகார்கள் பறந்தாலும்,  துரைமுருகனால் கூட நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நந்தகுமாரின் செல்வாக்கு கொடி கட்டி பறக்கிறது.
வேலூர் மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளில் காட்பாடியில் துரைமுருகன், அணைக்கட்டில் நந்தகுமார் எம்எல்ஏக்கள். வேலூர் எம்எல்ஏ ப.கார்த்திகேயனும், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயனும், வேலூர் மேயர் சுஜாதா ஆனந்தகுமாரும் கூட சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. காரணம் ஏ.பி.நந்தகுமார் போடும் முட்டுக்கட்டைகள்தான்.
துரைமுருகனுக்கும் நந்தகுமாருக்கும் பனிப்போர் என்று சொல்லிக் கொண்டாலும்,  காண்டிராக்டுகளோ, பண விஷயமோ, பதவி பங்கீடுகளோ வந்தால் இருவர் மட்டும் ரகசியமாய் சந்தித்து கூடி பேசி மற்றவர்களை கழட்டி விட்டுவிடுவார்கள் என்கின்றனர் மூத்த முன்னோடிகள்.
டெபாசிட் கூட வாங்க முடியாத என்று நினைத்த திமுக வேட்பாளர்கள் பலர் எம்.பி. தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டில் ஜெயித்துவிட்டார்கள் என்று கதிர் ஆனந்தை நேரடியாகவே தனது ஆதரவாளர்களிடம் சொல்கிறார் நந்தகுமார்.
மேயர் சுஜாதாவுக்கு எதிராக, காட்பாடி கவுன்சிலர்களும், நந்தகுமாரின் ஆதரவு கவுன்சிலர்களும் அளிக்கும் நெருக்கடிக்கு அளவே இல்லை.
வேலூர் மாவட்டத்தில் நகராட்சி, ஒன்றிய சேர்மன்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை என்கின்றனர்.  ஒவ்வொரு சேர்மனுக்கு மாதம்தோறும் டார்கெட் வைத்து வசூலித்துவிடுகிறார் நந்தகுமார்.
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் எஸ்.செளந்திரராஜன் முன்னிலையில், திமுக மாவட்ட துணை செயலாளர் கம் கவுன்சிலர் ஜி.எஸ்.அரசும், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் கம் கவுன்சிலர் குடியாத்தம் குகன் அடித்துகொண்ட கதை மாவட்டமே சிரி்க்கிறது.  என் பெயரை சொல்லி மணல் கடத்துகிறார் குகன் என்று அரசுவும்,  ஊரை கெடுப்பது யார் என்று குகனும் வாட்ஸ் அப்பில் பதிவுகளை மாறிமாறி போடுகின்றனர்.
திமுகவில் இரண்டு முறை நீக்கப்பட்டவரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் சொன்னவருமான குடியாத்தம் குமரனுக்கு மாதம்தோறும் ஒவ்வொரு சேர்மனும் கப்பம் கட்ட சொல்லி நந்தகுமார் உத்தரவு என்கிறார்கள். துரைமுருகனை சகட்டு மேனிக்கு பேசம் குமரன், பாமக நிறுவனர் ராமதாஸை அவரை எவரும் செய்யகூடாத அளவுக்கு யூ டியூப்பில் பேசியும்விட்டார். அவருக்கு அறிவுரை சொல்ல சென்ற அவரது உறவினர்களும் பாமக நிர்வாகிகளுமான வக்கீல் குமார், சேங்குன்றம் மணிகண்டன் மீதேபொய் வழக்குகளை குமரன் கொடுக்க,  குமரனோ துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வர வழிவகை செய்துவிட்டார் நந்தகுமார்.
துரைமுருகனை விமர்சனம் செய்த குமரன் அமைச்சர் ரேஞ்சில் போலீஸ் பாதுகாப்போடு வருவதை திமுகவினரே ரசிக்கவில்லை.
மொத்தத்தில், கோட்டை மாவட்டத்தில் விரிசல்தான்.  அடைக்காவிட்டால், அம்புட்டும் அவுட்..

– ஏகன்அநேகன்