பாவ புண்ணியத்தை பேசக்கூடிய மண் இது. இது ஆன்மீக மண். இந்த ஆன்மீக பூமியை சிதைப்பதற்கு திகாகவும், திமுகவும் மகாவிஷ்ணு போன்றவர்களை தவறாக சித்தரித்தால் பாஜக குரல் கொடுக்கும். -வேலூர் இப்ராகிம் பரபரப்பு பேட்டி அளித்தார்.
பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மதுரை வில்லாபுரம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம் கூறுகையில்:
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த
காலத்தில் இஸ்லாமியருக்கும் இந்து மதத்தினருக்கும் இருந்த நல்லிணக்கம் சில பிரிவினைவாத சக்திகளால் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி வந்த நேரத்தில் மீண்டும் அந்த உணர்வோடு எங்கள் தொப்புள் கொடி சொந்தங்களான இந்துக்களின் விழாக்களில் நாங்கள் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் இருக்கும் இணக்கத்தை யாராலும் பிரிக்க முடியாது.
சென்னையில் பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு:
அனைத்து மதத்தினரின் நம்பிக்கையை மதிப்பது பாஜகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் கடவுள் மறுப்பு கொள்கையை ஆணித்தனமாக பேசக்கூடிய திகவும், திமுகவும் இந்து மதத்தை இழிவு படுத்துவதில் மிக கவனமாக உள்ளனர். மகாவிஷ்ணு பேசியதையும், அவரது நடவடிக்கையும் இரண்டு விதமாக பார்க்கிறேன். மாற்றுத்திறனாளியிடம் அவர் பேசியிருப்பது நிச்சயமாக ஏற்க முடியாது. அதே நேரத்தில் அவர் சொன்ன பாவம் புண்ணியம் என்பது இந்து மதத்தில் மட்டும் இருப்பது போல பிற மதத்தைச் சேர்ந்த மாணவர்களை தவறாக வழி நடத்துவது போலவும், அறிவியலுக்கு எதிராக அவர் பேசியது போல பிம்பப்படுத்தப்படுகிறது. பாவ புண்ணியத்துக்கு பயந்து தான் மக்கள் நேர்மையோடு நடந்து கொள்கிறார்கள். பாவ புண்ணியத்தை பேசக்கூடிய மண் இது. இது ஆன்மீக மண். இந்த ஆன்மீக பூமியை சிதைப்பதற்கு திகாகவும், திமுகவும் மகாவிஷ்ணு போன்றவர்களை தவறாக சித்தரித்தால் பாஜக குரல் கொடுக்கும். மீண்டும் சொல்கிறேன் அவருடைய பேச்சுக்களில் பல கருத்துக்கள் உடன்பாடு இல்லாவிட்டாலும் மையக்கருத்து இரண்டு விதத்தை சொல்கிறது. திருக்குறள், குர்ஆன், பைபிள், நாலடியார், திருமூலர் என அனைத்தையும் இழுத்து அவர் பேசும்பொழுது வேறு எதைப் பேச வேண்டும் என நினைக்கிறீர்கள். பெரியாரைப் பற்றி தான் பேச வேண்டுமா. அதைப் பேசி கடவுள் நம்பிக்கையை அறுத்துவிட்டு பாவ புண்ணியத்தை பேசாமல் ஐரோப்பிய கலாச்சாரத்தைப் போல பாரத கலாச்சாரத்தை சீரழிக்க நினைத்தால் பாஜக பார்த்துக் கொண்டிருக்காது. நிச்சயமாக களத்தில் இறங்கி போராடுவோம்.
வினேஷ் போகத் காங்கிரஸில் சேர்ந்தது குறித்த கேள்விக்கு:
எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் அரசியல் கட்சியில் சேர்வது அவர்களுக்கு ஜனநாயகம் கொடுத்துள்ள உரிமை. அதற்காக அவர் காங்கிரஸிலும் இணையலாம், பாஜகவிலும் இணையலாம். ஆனால் பாஜகவில் இணைந்தால் வேறு விதமாக பேசுவார்கள். எங்களைப் பொறுத்தவரை அனைத்து வீரர்களும் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் அதற்காக பாரத பிரதமர் கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து ஒலிம்பிக்கிலும் சரி, ஆசிய போட்டிகளில் சரி அனைத்திலும் அதிக பதக்கத்தை நமது பாரதம் குவித்து இருக்கிறது. அதனால் அவர் எந்த கட்சியில் இருந்தாலும் தேசத்தின் வளர்ச்சிக்காக அவர் பாடு பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஆர்ட்டிகள் 370 குறித்த கேள்விக்கு:
காங்கிரஸ் கடந்த காலத்தில் செய்த தேச துரோகத்தை, மக்களைப் பிளவு படுத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவித்த ஒரு மோசமான செயலை மீண்டும் காஷ்மீரில் கொண்டு வருவோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சி பருக் அப்துல்லா பேசுவதும், காங்கிரஸ் வாய் மூடி மௌனம் காப்பதும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல இந்த நாட்டின் பாரத தாயின் பிள்ளை அனைவரும் எதிர்க்க வேண்டும். ஆர்டிகள் 370 என்பது நிலையான சட்டம் இல்லை தற்காலிக சட்டம் என்று அந்த சட்டமே சொல்கிறது. ஆனால் 60 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக, பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை காஷ்மீரில் பரப்பக்கூடிய யாரையும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த நிலை மாறி இன்று காஷ்மீர் மாநிலம் பாதுகாப்பாக இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் எந்தவித கலவரமும் இல்லை இது காங்கிரசுக்கும், தேசிய மாநாட்டு கட்சிக்கும் பிடிக்காது ஏனென்றால் அவர்கள் பாகிஸ்தானுடன் உறவு கொண்டாடுபவர்கள். நமது பகைவர் யார், நண்பர் யார் என்பது பாஜகவிற்கு தெரியும். பாகிஸ்தான் பொருத்தவரை நம்மோடு எப்போதும் பகையோடு இருக்கக்கூடியவரிடத்தில் நாங்கள் நேசம் பாராட்ட தயாராக இல்லை. எங்கள் எல்லையையும், மக்களையும் பயங்கரவாத பக்கம் இழுத்துச் செல்லக் கூடியவர்களை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். ஆட்சியை விட தேசம் முக்கியம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என , வேலு இப்ராகிம் கூறினார்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply