நாமக்கல்-
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ50 லட்சத்தை இழந்தவர்…
குடும்பத்துடன் தற்கொலை.
நாமக்கல் மாவட்டம், பெரியமணலியைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவி, பிரினிதிராஜ் என்ற மகள், மற்றும் ஒன்றரை வயதில் பிரினீஷ்ராஜ் என்ற மகனும் இருந்தனர்.அவர்கள் குடும்பத்துடன் நாமக்கல் சேலம் ரோட்டில், பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 4 தேதி மதியம் வரை பிரேம் ராஜின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் உள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.
அப்போது மோகனப்பிரியா, மகன் பிரனிஷ் மற்றும் மகள் பிரனிதி ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் இருப்பினும், போலீசார் வந்தபோது பிரேம் ராஜ் வீட்டில் இல்லை. பிரேம் ராஜ் ஒரு ‘தற்கொலைக் குறிப்பை’ எழுதிவைத்தார்.அதிகாரிகள் வீட்டை சோதனையிட்டபோது, பாதிக்கப்பட்ட பிரேம் ராஜ் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தைக் கண்டனர்.
அந்தக் கடிதத்தில், ‘கடந்த பத்து நாட்களாக ஆன்லைன் மோசடி மூலம் பிரேம் ராஜ் என்ற நான் ரூ. 50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளேன். இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள எனக்கு தைரியம் இல்லை. எனவே, நாங்கள் நான்கு பேரும் எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். தயவுசெய்து எங்களை மன்னியுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.கடிதத்தின் இறுதியில், நான்கு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், அவர்களின் பெற்றோரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தச் சூழலில் குழந்தைகள், தாய் உள்பட மூவர் உயிரிழந்த நிலையில் கணவர் பிரேம்ராஜை காவல்துறை தொடர்பு கொண்டனர். அப்போது அவரது கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, அவரைக் கண்டுபிடிக்க நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் இரண்டு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று அதிகாலை, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அமராவதி பாலம் அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து பிரேம்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது பிரேம்ராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மோகளப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகளின் சடலங்கள், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தரியில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
-கௌரிசங்கர்
Leave a Reply