Save 20% off! Join our newsletter and get 20% off right away!

காஞ்சிபுரம்-ஏரி, கால்வாய் சீரமைப்பு பணிக்கு,நிதி ஒதுக்காததால் அதிகாரிகள் புலம்பல்…

தமிழகத்திலேயே அதிக ஏரிகள் கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பதால், ‘ஏரிகள் மாவட்டம்’ என்ற பெயர் இந்த மாவட்டத்திற்கு உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன.

இதன் வாயிலாக, 12.3 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். மேலும், 1.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியும். ஏரி பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர்.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஏரிகள் உள்ள நிலையில், ஏரியின் கரை, கலங்கள், மதகு, கால்வாய்களை சீரமைத்து, விவசாயத்திற்கு தயாராக வைத்திருக்க போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், நீர்வளத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.

கடந்த ஆண்டுகளில், மாகரல் ஏரியை சீரமைக்க 2.70 கோடி ரூபாயும், காஞ்சிபுரம் தாலுகாவில், 17 ஏரிகளை சீரமைக்க 11.8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி மிக குறைவு என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டம் முழுதும் சீரமைக்கப்பட வேண்டிய பல்வேறு ஏரிகளின் நிலைமையும், கால்வாயும் பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன.

பாலாற்றில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் வரை செல்லும் கம்ப கால்வாயின் தடுப்பு சுவர்களிலும், கரைகளிலும் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளன.

தாமல், தென்னேரி உள்ளிட்ட பெரிய ஏரிகளின் வரத்து கால்வாய்கள் மணல் கரைகள் கொண்ட கால்வாயாக உள்ளன. இந்த கால்வாய்களை, கான்கிரீட் கால்வாயாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செடிகள் வளர்ந்து காணப்படும் கால்வாய்களை, பொக்லைன் மூலம் சீரமைத்து கொடுக்க நிதி ஒதுக்கீடு இல்லை என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் கால்வாயின் பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், செய்யாற்றில் சேதமான வெங்கச்சேரி அணைக்கட்டு சீரமைக்க தேவையான, 12 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

மேலும், பாலாற்றின் குறுக்கே வெங்கடாவரம் அருகேயும், வெங்குடி பகுதியிலும் தடுப்பணை கட்ட பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பழையசீவரம் பாலாறு தடுப்பணையில் சேகரமாகியுள்ள மணலை அகற்ற, 3.3 கோடி ரூபாய் நிதி கேட்டு, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்காததால், தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை அகற்ற முடியாத நிலை தொடர்கிறது.

இதேபோல, பல்வேறு திட்ட பணிகளுக்கும், ஏரி, கால்வாய்களை சீரமைக்கவும் நிதி ஒதுக்கப்படவில்லை என, நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு திட்ட பணிகளுக்கு, 200 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி தேவை எனவும், கடந்தாண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயலின்போது ஏற்பட்ட ஏரி பாதிப்புகளுக்கும் போதிய நிதி கிடைக்கவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போதிய நிதி இருந்தால் மட்டுமே, விவசாயிகள் கேட்கும் பணிகளை, ஏரிகளில் மேற்கொள்ள முடியும் என, விவசாயிகளுக்கு அதிகாரிகள் பதில் கூறி சமாளிக்கின்றனர்.

– பா.மணிகண்டன்