Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மாசி மகம்… மகத்தான பலன்களை பெற்றுத் தரும் மாசி மகம்.. அன்று என்ன செய்யலாம்?..

மாசி மகம்…
மகத்தான பலன்களை பெற்றுத் தரும்
மாசி மகம்.. அன்று என்ன செய்யலாம்?..

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளை மாசி மகம் என கொண்டாடுகிறோம். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது மிகவும் சிறப்பான நாளாகும். மாசி மக நாளானது கடலாடும் விழா என்றும், தீர்த்தமாடும் விழா என்றும் அழைக்கப்படுகிறது.

‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை ‘மாசி மகம்’ என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

இந்த வருடம் மாசி மகம் மார்ச் 12 (புதன்கிழமை) அன்று வருகிறது. இந்த நாளில் புண்ணிய நதிகள், கோவில் குளம், கடல் என எங்கு சென்று புனித நீராடினாலும் அது மகத்தான பலனை தருவதுடன், நம்முடைய பல ஜென்ம பாவத்தை போக்கக் கூடிய அற்புதமான நாளாகும்.

சிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள் :

மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.

உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாள் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்று தான்.

இந்நாள் முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம் தான்.

சிவபெருமான் வருணனிற்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளிலேயாகும். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசி மகம்.

பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது.

எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசி மகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வதும் நன்மை தரும்.

பெண்களுக்கு மிக உரிய தினம்:

✨இத்தினம் பெண்களுக்கு மிக உகந்த தினமாகும்.

✨இந்நாளில் பெண்கள் தங்கள் தாலி கயிற்றை மாற்றிக் கொண்டால் கணவரின் ஆரோக்கியமும், ஆயுள் பலமும் அதிகரிக்கும்.

✨இந்நாள் முப்பெரும் கடவுள்களுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால், பெண்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

மாசி மகம் ஏன் இவ்வளவு சிறப்பு?

🙏பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தலத்தில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு. மாசி மகம், மகா மகம் என்றாலே நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். கும்பகோணம் இத்தகைய சிறப்பு பெற்றுள்ளதற்கு ஒரு புராண வரலாறும் கூறப்படுகிறது.

🙏முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பிரம்மா, உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடுமே என அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டார்.

🙏பல புண்ணிய தலங்களிலிருந்து மண், அமுதம், அனைத்து ஜீவராசிகளின் ஜீவ வித்துக்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு கும்பத்தில் வைத்து, அதை மங்கலப் பொருட்களால் அலங்கரித்து, அதன் நான்கு புறங்களிலும் வேத ஆகமங்களை வைத்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து மேருமலையில் வைத்துவிடும்படி, சிவபெருமான் பிரம்மனிடம் கூறினார். பிரம்மனும் அவ்வாறே செய்தார்.

🙏பிரளயம் வந்தபோது அனைத்தும் வெள்ளத்தில் சிக்கி அழிந்தன. அமுதம் நிறைந்த குடத்தை வெள்ளம் உருட்டிச் சென்றது. அக்குடம் ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்றது. அந்த இடம்தான் கும்பகோணம்.

🙏சிவபெருமான் வேடன் உருவங்கொண்டு, அக்கும்பத்தின்மீது அம்பெய்து அதை உடையச் செய்தார். குடம் உடைந்து அமுதம் வழிந்து எட்டுத் திசைகளிலும் பரவியது. குடத்தை அலங்கரித்திருந்த பொருட்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்து லிங்கங்களாகக் காட்சி அளித்தன. அதன் பிறகு பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் சம்மதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவதி நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்தார். ஒன்பதாவது நாள் மேரு மலையைப்போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்தார். பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதி உலா வரச் செய்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசிமக விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில்தான் மாசிமக விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

🙏இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

மாசி மக விரதம் :

✨மாசி மகத்தன்று விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

✨நீராடிய பின்னர் விரதம் இருந்து சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

✨முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை உணவு சாப்பிட்டும் விரதத்தை கடைபிடிக்கலாம்.

✨மாசி மகத்தில் புனித நீராட முடியாதவர்களும், கோயிலுக்கு செல்ல முடியாதவர்களும் மாசி மக புராணத்தை படிக்கவோ அல்லது கேட்கவோ செய்யலாம்.

✨அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகள் செய்தாலும் இறைவனை மனதில் நினைத்து ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும்.

மாசி மகத்தில் நீராடுதல் :

மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு என எந்த நீர்நிலைகளாக இருந்தாலும் அதில் புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக ஐதீகம் உள்ளது.

அது மட்டுமின்றி மாசி மகத்தன்று புனித நீராடினால், ஏழு ஜென்ம பாவங்களையும்க அடியோடு போக்கும் என்பது ஐதீகம்.

பலன்கள் :

✨மாசி மகத்தன்று குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

✨மாசி மக நாளில் புனித நீராடி இறைவனை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

✨உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் மாசி மக நாளில் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

✨மாசி மாதத்தில் பெண்கள் புது மாங்கல்ய சரடு கட்டிக் கொள்வது மிகவும் சிறப்பானது.

✨மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டால் இன்பமும், வெற்றியும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

✨ஆகவே, இந்த சிறப்பு மிக்க மாசி மக நாளில் புனித நீராடி, வழிபாடு செய்து மகிழுங்கள்..!!

– மணிகண்டன்