சமயபுரம் மாரியம்மன்…
பச்சை பட்டினி விரதம் இருக்க காரணம்?
அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும்,உலக நன்மைக்காகவும்,தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள்,தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் பச்சைப் பட்டினி விரதம் இருக்கிறார் சமயபுரம் #மாரியம்மன்.
மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பாகும்.
இந்த ஆண்டு பச்சைப்பட்டினி விரதத்தை கடந்த ஞாயிறு முதல் தொடங்கியுள்ளார் சமயபுரம் மாரியம்மன்.
அம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களிலும் அம்மனுக்கு நைவேத்தியமாக துள்ளு மாவு,நீர்மோர்,பானகம் மற்றும் இளநீர் மட்டுமே படைக்கப்படுகிறது.தாளிகை நைவேத்தியத்தை தவிர்த்து விடுகின்றனர்.
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.ஒட்டு மொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடமானது தான் #சமயபுரம் ஆகும்.சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இத்தலம்.
ஸ்ரீரங்கநாதனின் தங்கை சமயபுரம் மாரியம்மன்.ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப்போலவே சுயம்பு வடிவானவள்.12 ராசிகள் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் எந்திரங்களாக அடக்கி அருள்பாலிப்பது சமயபுரத்தாளின் சிறப்பு.
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரங்களையும் நவ சர்ப்பங்களாக தரித்து அருள்பாலிக்கிறார்.எனவே தான் அம்மனை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.ராகு கேது தோஷங்கள் நீங்கும்.
அம்மனை அமாவாசை,பவுர்ணமி தினங்களிலும் கிரகண காலங்களிலும் வணங்கினால் உச்ச பலன் கிடைக்கும்.
மயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூச்சொரிதல் விழா பிரசித்தி பெற்றதாகும்.
8 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது,பூச்சொரிதல் விழா நடைபெறும்.அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு,முதல் பூவாக ஸ்ரீரங்கம் #ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது.
புராண கதை
தேவர்களை இம்சித்த மகிஷாசூரனை,புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் தவமிருந்து வதம் செய்தார் அன்னை #ஆதிபராசக்தி.
மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும்,தன் கோபம் தணியவும் சோழ வள நாட்டின் தலைநகர் திருச்சிக்கு நேர் வடக்கே காவிரி வடகரையில் வேம்பு காட்டில் கவுமாரி என்று பெயர் பூண்டு,சிவப்பு நிறம் கொண்டு மஞ்சள் ஆடை தரித்து,உடல் முழுவதும் வாசனை புஷ்பங்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருந்து பல ஆண்டு காலம் தவம் செய்து,அதன் பயனாக சாந்த சொரூபிணியாக சர்வரட்சகியாகி மாரியம்மன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன்,கோவிலில் ஆண்டு தோறும் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார்.
ௐ சக்தி பராசக்தி
சர்வம் #சக்திமயம்
– மணிகண்டன்
Leave a Reply