காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி குணா என்ற குணசேகரன், 46. இவர் மீது, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், மணிமங்கலம், கூடுவஞ்சேரி, பாலுார் உள்ளிட்ட காவல் நிலையங்களில், 8 கொலை வழக்கு, 13 கொலை முயற்சி உட்பட 58 வழக்குகள் உள்ளன. நான்கு முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு காவல் படையினர், தலைமறைவான குணாவை வலை வீசி தேடினர். இதையடுத்து 2023 ஜன., 24 ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குணா சரணடைந்தார்.
பின், ஜாமினில் வெளியேவந்த அவர், பா.ஜ., வில் இணைந்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவராக பதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், குணாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார். அதன்படி, குணா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் மீண்டும் குணா ஜாமினில் வெளியே வந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி, மதுரமங்கலம் கிராமத்தில் நுாறு நாள் வேலை உறுதி திட்டதின் மக்கள் நலப்பணியாளாக உள்ள, அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 59, என்பவரை தாக்கினார்.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் மோகன் அளித்த புகாரையடுத்து, போலீசார் குணாவை இம்மாதம் 6ம் தேதி கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலுார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் பரிந்துரையின்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, குணாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, சுங்குவார்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாசில் அதற்காக ஆணையினை வேலுார் மத்திய சிறை அதிகரிகளிடம் நேற்று வழங்கி, 5வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குணாவை சிறையில் அடைத்தனர்
– பா.மணிகண்டன்