புதுக்கோட்டை மாநகர செயலாளர் யார்? கே.என்.நேரு – மகேஷ்பொய்யாமொழி ஆதரவாளரா…? ரோட்டில் இறங்கி போராடும் திமுக உடன் பிறப்புகள்…

புதுக்கோட்டையில் திமுக நகரச் செயலாளர் என்றால் யார் என்றே தெரியாத காலகட்டத்தில் திமுகவின் விசுவாசம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரும், அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளருமான லைட் ஹவுஸ் செந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகர செயலாளராக பொறுப்பேற்றார்.

அதன் பிறகு தான் திமுகவில் நகர செயலாளர் பதவிக்கான மதிப்பும் மரியாதையும் கூடியது.

செந்தில், அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளர் என்பதால் திமுகவினர் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவராக விளங்கினார்.

இதன் காரணமாக செந்தில் மனைவி திலகவதி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை நகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, புதுக்கோட்டை நகராட்சியின் தலைவராகவும், தற்போது புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்றார்.

மேலும் மாநகர செயலாளர் செந்தில், புதுக்கோட்டை திமுக நிர்வாகிகளை தாண்டி, அமைச்சர் நேரு கொடுக்கும் அசைன்மென்ட்களை கணக்கச்சிதமாக செய்து முடிப்பதில் வல்லவராக இருந்து வந்தார்.

ஒருபுறம் கணவர் செந்தில் புதுக்கோட்டை மாநகர செயலாளர், மறுபுறம் மனைவி திலகவதி புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையோடு இருந்து வந்தனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி மாநகர செயலாளர் செந்தில் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார்.

இவரது மறைவு புதுக்கோட்டை அரசியலில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் பதவியை யார் பிடிப்பது என்ற போட்டி புதுக்கோட்டை திமுகவினரிடையே நிலவி வருகிறது.

இதில் தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நான் போட்டியிடும் கடைசி தேர்தல் இதுதான். இனிமேல் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறி தான் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருமயம் தொகுதியில் போட்டியிட்டார்.

அதன் பிறகு சிறிது காலம் கழித்து, தனது மகன் அண்ணாமலைக்கு மருத்துவர் அணியில் பொறுப்பு வாங்கி கொடுத்து அரசியல் களத்தில் இறக்கினார்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி அதே திருமயம் தொகுதியில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது மகனும், புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளருமான அண்ணாமலைக்கு புதுக்கோட்டை மாநகர செயலாளர் பதவி பெற்றுத் தர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தனது ஆதரவாளரான மாநகர் மன்ற உறுப்பினருக்கும்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் அவரது நெருக்கமான இரண்டு மாநகர் மன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கும்,

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தனது ஆதரவாளருக்கும் மாநகர செயலாளர் பதவி வழங்க வேண்டும் என போட்டி போட்டனர்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது ஆதரவாளரான முன்னாள் நகர செயலாளருக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கெல்லாம் மத்தியில் முன்னாள் கொறடாவும், திமுக மூத்த நிர்வாகியுமான பெரியண்ணனின் மகனான பெரியண்ணன் அரசு, முன்னாள் மாவட்ட செயலாளராகவும், முன்னாள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

அவர் தற்போது எந்த பொறுப்பும் இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாநகர செயலாளர் பதவி காலியாக உள்ள நிலையில், தனக்கு அந்த பதவி கிடைக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களை வைத்து, சின்னவரிடம் அழுத்தம் கொடுத்ததாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி மறைந்த மாநகரச் செயலாளர் செந்தில் திருவுருவப்படத் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் நேரு, தடாலடியாக திமுக மாநகர செயலாளராக மறைந்த செந்தில் மகனும், தற்போதைய நகர இளைஞரணி அமைப்பாளருமான கணேசுக்கு அந்தப் பொறுப்பை வழங்க உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட உடன்பிறப்புகள் மறைந்த மாநகரச் செயலாளர் செந்தில் மகனுக்கு மாநகரச் செயலாளர் பதவி வழங்குவதில் தங்களுக்கு முரண்பாடு இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் புதுக்கோட்டை புதிய திமுக மாநகர செயலாளர் மறைந்த செந்தில் மகன் கணேஷ் தேர்வு செய்யப்படவுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மேலும் கணேஷ் முதலமைச்சரை சந்தித்து புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளராக பதவியேற்பார் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், தலைமையின் குடும்பத்திற்கு செல்வாக்கு மிக்கவராக இருந்து வரும்  எம் எம் அப்துல்லாவின் ஆதரவாளர் ராஜேஷ் என்பவரை தலைமை கடந்த 12-ஆம் தேதி மாநகர பொறுப்பாளராக அறிவித்தது. இவர் புதுக்கோட்டை திமுக தொண்டரணி பொறுப்பில் இருந்து வருகிறார்.

மாவட்டத்தில் ரகுபதி மற்றும் மெய்யநாதன் இரண்டு அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு மாநகராட்சி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைமையிடம் மல்லு கட்டிக் கொண்டிருந்த நிலையில், தலைமை எம் எம் அப்துல்லாவின் தீவிர ஆதரவாக இருக்கும் ராஜேஷை மாநகர பொறுப்பாளராக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி திமுக சார்பில் புதுக்கோட்டை, திலகர் திடலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய அரசு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது மாநகர பொறுப்பாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து கூட்டத்திலிருந்து ஒரு பிரிவினர் கூட்டத்தில் கலாட்டா செய்ததோடு அங்கிருந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் ஒரு குழுவினர் கூட்டம் நடக்கும் மண்டபம் முன்பாக திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்று முடியும் வரை அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த போது, 30க்கும் மேற்பட்ட திமுக வட்டச் செயலாளர்கள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், முற்றுகையிட்டவர்களை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வட்ட செயலாளர்கள் மாவட்ட திமுக அலுவலகம் வந்த நிலையில், மாவட்ட செயலாளர் வராததால் திமுக அலுவலகம் முன்பாக திமுக வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளிடம் மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் திமுக தலைமைக்கு இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருவரும் உறுதி அளித்ததை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திமுக நிர்வாகிகள் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாநகராட்சியில் 42 வார்டுகள் உள்ள நிலையில் மூன்று வட்டச் செயலாளர்கள் ராஜேஷிற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். மீதமுள்ள வட்டச் செயலாளர்கள் ராஜேசை மாற்ற வேண்டும் என்று தலைமைக்கு எழுத்துப்பூர்வமாக மனுவும், நேரிலும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

 பழம்பெரும் கட்சியான திமுகவில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், இதுபோன்ற அனுபவம் இல்லாத நபரை மாநகர பொறுப்பாளராக ஆக்கினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதி திமுக வசம் கிடைக்காது என எச்சரித்தும் உள்ளனர்.

மேலும் அனுபவசாலிகள் பலர் இருக்க புதிய வரை மாநகர பொறுப்பாளராக ஆக்கினால் நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள தயாராகவும் இல்லை. அவருக்கு ஆதரவாக வேலை செய்யப் போவதும் இல்லை என்றும் தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளனர்.

எப்படியும் மாநகர பொறுப்பாளர் மாற்றம் செய்யப்படுவார் என்று திமுகவினர் காத்திருக்கும் நிலையில், மனுவை பெற்றுக் கொண்ட தலைமையோ, இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் நபரை மாநகர பொறுப்பாளராக நியமித்ததில் ஆச்சரியத்திலும், புது நபரை நியமிப்பதில் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது.

ஏனென்றால் முன்னாள் மாநகர செயலாளராக இருந்த செந்திலை நியமித்ததில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கேஎன் நேருக்கு பெரும் பங்கு இருந்தது.

இப்போது புதிய மாநகர பொறுப்பாளராக ராஜேஷ் நியமித்ததில் திருச்சியைச் சேர்ந்த மற்றொரு அமைதியான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

– சாமிநாதன் மாரிமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *