காஞ்சிபுரம்-
ரடிகளின் கொட்டத்தை அடுக்குமா காவல்துறை?
காஞ்சி மாவட்டத்தில் ரவுடிகளால் ஏற்படும் குற்றங்களை குறைக்க, போலீசார் முயற்சி எடுத்து வரும் நிலையில்,
பிரபல ரவுடிகளின் செயல்பாடுகளால் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் , காஞ்சியில் இருந்து பயந்து தப்பித்து ஓடிய ரவுடிகள் வடமாநிலங்களில் பதுங்கியுள்ளதாக தகவல் வந்த நிலையில் அவர்களை விரைந்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், தொழிற்சாலை மிகுந்த மாவட்டம் மட்டுமல்லாமல், ஆன்மிக நகரமாகவும் உள்ளது. பொருளாதார ரீதியில் முக்கிய இடத்தை பெற்றுள்ள இந்த மாவட்டத்தை, சட்டம் – ஒழுங்கு விவகாரத்திலும் பிரச்னையின்றி வைத்துக் கொள்ள, போலீசார் முயற்சிக்கின்றனர். ஆனால், போலீசார் நடவடிக்கைக்கு எதிராக, ரவுடிகளின் செயல்பாடுகளால், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தபடி உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2023ல், 34 கொலைகள் நடந்ததாகவும், 2024ல் அவை, 20ஆக குறைந்ததாகவும் போலீசார் தெரிவித்த நிலையில், 2025ம் ஆண்டு துவங்கியது முதல், முக்கிய ரவுடிகளின் செயல்பாடுகள் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடியாக வலம் வந்த வசூல்ராஜா கொலை வழக்கில், பிரபல ரவுடி தியாகு என்ற தியாகராஜன் முக்கிய குற்றவாளியாக, போலீசார் சேர்த்துள்ளனர். தியாகு மீது எட்டு கொலை, கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில், நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன் தியாகு வெளிவந்த நிலையில், வசூல்ராஜா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக, போலீசார் தெரிவிக்கின்றனர். அதனால், தியாகுவை தேடும் பணியில், போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.
அதேபோல், பிரபல மறைந்த ரவுடி ஸ்ரீதரின் உறவினர் தணிகா மற்றும் ஸ்ரீதரின் ஓட்டுனர் தினேஷ் ஆகிய இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என, தலா 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தினேஷ் மற்றும் தணிகா ஆகிய இருவருக்கும் இடையே, நீண்ட காலமாக, யார் அடுத்த ஸ்ரீதர் என்பதில் பிரச்னை துவங்கி, ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இருவரும் தனித்தனியே ரவுடிகள் படையே வைத்துள்ளனர். துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி ஆகிய ஆயுதங்களோடு வலம் வரும் அவர்கள், காஞ்சிபுரத்தில் கட்டப்பஞ்சாயத்து, கொலை உள்ளிட்ட ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தின் பிரதான ரவுடியாக திகழும் தியாகு, தணிகா, தினேஷ் ஆகியோர் சிறையில் இல்லாமல் வெளியே இருப்பதால், வேறு ஏதாவது குற்ற சம்பவங்கள் நடக்குமோ என, போலீசார் நெருக்கடி நிலையில் இருக்கின்றனர்அதனால் அவர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர போலீசார் முயற்சிக்கின்றனர். மேற்கண்ட மூவரின் கூட்டாளிகள், உறவினர்களை பிடித்து, அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை கேட்டு வருகின்றனர். முக்கிய ரவுடிகளான மூவரும், வட மாநிலங்களில் பதுங்கியிருப்பதாகவும், விரைவில் அவர்களை பிடித்து வரவுள்ளதாகவும், போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டார பகுதியில் படப்பை குணா, பெரிய ரவுடியாக வலம் வருகிறார். அவர் மீது, எட்டு கொலை வழக்கு, 13 கொலை முயற்சி உட்பட 58 வழக்குகள் உள்ளன. நான்கு முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் அவரை கண்காணித்து வந்த நிலையில், மக்கள் நலப்பணியாளரை தாக்கிய வழக்கில் ஐந்தாவது முறையாக குண்டர் சட்டத்தில், சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்தாலும், கொலை முயற்சி, தாக்குதல் நடத்துவது, மிரட்டல் போன்ற சம்பவங்கள், மாவட்டம் முழுதும் தொடர்ந்து நடக்கின்றன. இது, போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
அதனால், படப்பை குணா, தியாகு, தணிகா, தினேஷ் ஆகிய ரவுடிகளின் கூட்டாளிகள், அவர்களுக்கு கீழ் வேலை செய்வோரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு பிரதான ரவுடிகள் மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நிலையில் உள்ள 147 ரவுடிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
வசூல்ராஜா கொலை வழக்கில், பொய்யாக்குளம் தியாகுவின் செயல்பாடுகள் எந்த அளவு இருந்துள்ளது என, தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், தினேஷ், தணிகா ஆகியோர் ஊருக்குள் வருவதில்லை. அவர்களின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
– பா.மணிகண்டன்