நாமக்கல்- கூடுதல் தொகுதிகள் கேட்டு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை… ஈ.ஆர். ஈஸ்வரன்…

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும்….கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்  பேட்டி அளித்தார்.

 நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம், மக்களவை உறுப்பினர் வி. எஸ்.மாதேஸ்வரன் பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவு விழா நாமக்கல்லில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்…

வரும் 2026 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் எங்களது கட்சி சார்பில் நடைபெற உள்ளது. முதல் மாவட்டமாக நாமக்கல்லில் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது. அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும்போது தான் தெரிவிக்க முடியும். மத்திய அரசு விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பது ஏற்புடையதல்ல. தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்தாலும், முழுமையாக அந்த வரி விதிப்பதை நிறுத்தி விட வேண்டும். கூட்டுறவுத்துறை வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகளை பாதிக்கும் சிபில் ஸ்கோர் முறையை அகற்ற வேண்டும்.

 எந்த ஆட்சியாக இருந்தாலும் குற்றமே நடக்காமல் இருக்காது, நடந்த குற்றத்திற்கு நடவடிக்கைகளை எடுத்து வேகப்படுத்தி வருகின்றார்கள், குற்றம் நடந்தாலே ஆட்சி மீது குற்றம் கூறுவார்கள்,  காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஆட்சி என்ற என்ற பேச்சு தான் உள்ளது.  கூட்டணி ஆட்சிக்கு அதிமுக ஒப்புக் கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் வளர்ச்சி பாதிக்கும்,  நிலையான ஆட்சி தான் அமைய வேண்டும் என்பது கொமதேக விருப்பம் என்றார்.

  • கௌரி சங்கர்