அதிகாரத்தையும் பணத்தையும் காட்டி சேலம் மாவட்டத்தை வளைத்த அதிமுக, அதே அதிகாரத்தையும் பணத்தையும் காட்டி பதிலுக்கு வளைக்க ஆரம்பித்திருக்கிறது ஆளுங்கட்சியான திமுக! முதலில் ஒன்றியக்குழு தலைவர்களை குறி வைத்திருக்கிறார்கள். பனமரத்துப்பட்டி, ஆத்தூர், கெங்கவள்ளி, சேலம், அயோத்தியாபட்டினம் உள்ளிட்ட ஐந்து அதிமுக தலைவர் பதவிகளை பறிக்கும் வேலையில் தீவிரமாகிவிட்டனர். எடப்பாடி எம்எல்ஏவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியும், சேலம் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான புத்திர கவுண்டன்பாளையம் இளங்கோவனும் தங்கள் கட்சியின் ஒன்றியக்குழு தலைவர்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இதில் உச்சகட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனமரத்துபட்டி யூனியன் விவகாரம். பதின்மூன்று கவுன்சிலர்களை கொண்ட யூனியனில், பாமக உள்பட அதிமுக கவுன்சிலர்கள் ஏழு பேர், திமுக தரப்பில் கம்யூனிஸ்ட் உள்பட ஆறு பேர், இதில் யூனியன் சேர்மன் ஜெகநாதன், வைஸ் சேர்மன் பாரப்பட்டி குமார் கொரோனா தருணத்தில் குமார் உடல்நலமில்லாமல் இறந்துவிட, குமாரின் உடன்பிறந்த தம்பியும் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளருமான பாரப்பட்டி சுரேஷ் இடைத்தேர்தலில் நிற்க, பதிலுக்கு அண்ணன் மனைவி பேபியும் நிற்க, மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆதரவில் சுரேஷ் வேட்பாளரானார். ஒரு கோடியை செலவு பண்ணி கவுன்சிலராக வென்றவர், பனமரத்துப்பட்டி யூனியன் அதிகாரிகளுக்கு போனை போட்டு, இனிமே என்னை கேட்காம எதையும் செய்யாதீங்க கூடிய சீக்கிரமே நான்தான் யூனியன் சேர்மனா வரப்போறேன் என்ற தகவலை சொன்ன கையோடு, அதிமுக தரப்பில் இருந்து இரண்டு கவுன்சிலர்களை இழுக்கும் வேலையில் பிஸியானார்.
பாமக கவுன்சிலர் ராஜேஸ்வரி தரப்பை திமுக மாவட்ட செயலாளர் சிவலிங்கம் வீட்டில் வைத்து இருபத்தி ஐந்துலட்சம் செலவு செய்து ஆதரவை வாங்க, விஷயம் தெரிந்து எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வைத்து அதிமுகவுக்கே உங்க ஆதரவு தொடரனும்னு லட்சங்களை செலவு செய்ய, ஒத்துகிட்டு இரண்டு தரப்புக்கும் கையெழுத்து போட்டிருக்கிறார். பணம் கைமாறிய விஷயத்தை பாட்டாளி சொந்தங்களே சேலம் மாவட்டம் முழுவதும் வாட்ஸ்அப்ல செய்தி பரப்பிட்டாங்க. அதிமுக கவுன்சில் பொன்னுசாமி தரப்புக்கு இருபத்தி ஐந்துலட்சம் கைமாற, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார் பாரப்பட்டி சுரேஷ். அதிமுக சேர்மன் ஜெகநாதன் கோர்டுக்குபோய் தடை வாங்க, தடையை உடைத்துவிட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தயாரா நிற்குது பாரப்பட்டி சுரேஷ் தரப்பு! வீரபாண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோன்மணி, பாரப்பட்டி சுரேஷ் தன் சித்தப்பா மகன் என்பதால், சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கிறார். மார்கழி மாதம் என்பதால், தள்ளிப்போகும் நம்பிக்கையில்லா தீர்மானம் தை பிறந்தவுடன் எல்லாம் சுமூகமாக முடிந்துவிடும் என்கிறது பாரப்பட்டி சுரேஷ் தரப்பு அதற்குள் தங்களுக்கு சரியாக வராத அதிகாரிகளை மாற்றும் பணி நடக்குது. மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி மற்றும் சேலம் மாவட்ட பொறுப்பாளரான மந்திரி நேருவுடன் எப்பொழுதும் சுரேஷ்குமார் அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருப்பதால் மந்திரி காரில் முதல் ஆளாக ஏறி உட்கார்ந்து கொள்வதால், கலெக்டர் கார்மேகம், ஐ.ஜி. நஜ்மல்ஹோடா ஆகியோர் முகம் சுளிக்கின்றனர். காரணம் சுரேஷ்குமார் மீது இருக்கும் வம்பு வழக்குகள்தான், இதெல்லாம் எப்படி மந்திரி நேருவுக்கு தெரியாம போச்சி? என்று அதிகாரிகள் தரப்பில் முனுமுனுக்கின்றனர். இன்னொரு பக்கம் ஒன்றிய துணை செயலாளர் குள்ளம்பட்டி லதாராஜா நான் சீனியர் நான்தான் சேர்மன் ஆகனும் என்கிறார். அதிமுக பொன்னுசாமியும், பாமக ராஜேஸ்வரியும் எனக்குத்தான் வைஸ் சேர்மன் பதவி என்று இப்போதே குரலை உயர்த்துகின்றனர். காட்டூர் சங்கர் அப்படீனா வைஸ் சேர்மன் பதவி எனக்கில்லையா? என்று சோகமாகிறார். ஆக, அதிமுக ஜெகநாதன் சேர்மன் பதவி இழப்பது உறுதியாகிவிட்டது.
– இமயவரம்பன்
Leave a Reply