கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் சுப்ரமணியபுரம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் நான்கு பேரை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் ஒன்று கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ரயிலில் சிக்கி பள்ளி வேன் சுக்கு நூறானது, இதில் பள்ளி வேனில் பயணம் செய்த ஓட்டுநர் சங்கர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் நான்கு பேர் பயணம் செய்த நிலையில், கடலூர் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், சின்ன காட்டு சாலை கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி என்பவரது மகள் சாருமதி சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் இரண்டு பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, செழியன் என்ற மாணவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதனால் கடலூர் அருகே ரயில்- பள்ளி வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் போது அந்த ஊரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்சார கம்பி பட்டதில் அவர் தூக்கி எறியப்பட்டு கடலூர் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அனுப்பப்பட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், ரயில்வே கேட் திறந்திருந்ததால், வேனை ஒட்டியதாக ஓட்டுநர் சங்கர் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் ரயில்வே துறை அதிகாரிகளும், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு கெட் கீப்பராக பணிபுரிந்த பங்கிங் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரயில்வே போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் கேட் கிப்பர் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாகவும், அவர் தொடர்ந்து அலட்சியமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் முள் செடிகள் மண்டியிருந்ததால் ரயில் வருவது தெரியாது, இது தொடர்பாக அதிகாரிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர், ஓட்டுநர் மற்றும் விபத்தில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வரும் நபர் என அனைவரையும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்த ஆறுதல் கூறினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை போதி உபகரணங்கள் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு த் தொகை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மருத்துவமனை மற்றும் வீடுகளில் நேரில் சென்று ஆறுதல் கூறி இழப்பீடுத் தொகைக்கான காசோலையினை வழங்கினார். இந்த நிகழ்வை உதாரணமாகக் கொண்டு இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்தார்.
ரயில் பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முருகன் லட்சுமணன்