தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கினாலும், அந்த நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க நிதியை மக்களிடமே பெற்று வருகிறது என்பதுதான் உண்மை.
எப்படி என்றால் இருக்கவே இருக்கு டாஸ்மார்க். அதன் மூலம் கிடைக்கும் பணம் தான் நலத்திட்டம் வழங்குவதற்கு உண்டான நிதி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டத்தட்ட வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மது போதைக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகளும், தனியார் மதுபான விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
மதுபானம் மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் புதுக்கோட்டை மாவட்டம் போதையால் சீரழியும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை – அறந்தாங்கி சாலையில் குரும்பூர் ஒத்தக்கடை என்னும் இடத்தில் கடந்த 4-ஆம் தேதி நள்ளிரவு போதையில் இருந்த இளைஞர்கள் 5-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் இருந்த கடைகளில் உள்ள பேனர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதோடு அந்த வழியாக சென்ற வாகனங்களையும் அடித்து மிரட்டி விரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த கொடூரமான வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில், அந்தப் பகுதி இளைஞர்களிடம் கஞ்சா மற்றும் மது பழக்கம் அதிகரித்து விட்டதாகவும் இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இது போன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இதுபோன்ற போதையில் இருக்கும் இளைஞர்களிடம் சாமானிய பொதுமக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களின் நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஆகிவிடும், இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருவதாகவும் அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மது, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதையால் சீரழியும் இளைஞர்களை தமிழக அரசும் சரி, காவல் துறையும் கண்டு கொள்வதே இல்லை.
போதையால் இளைஞர்கள் சீரழியக் கூடாது என்று விளம்பரம் செய்யும் அதே தமிழக அரசு தான். டாஸ்மாக் கடை நடத்துவதோடு, கூடவே தனியார் மதுபான விடுதிகளுக்கும் அனுமதி அளித்து வருகிறது.
எனவே பொதுமக்களின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசும், காவல்துறையும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை இருக்கிறது.
எது எப்படியோ காவல்துறை நினைத்தால் மட்டும் இது போன்ற சம்பவங்களை தடுத்து விட முடியாது. இளைஞர்களையும் அடுத்த தலைமுறையினரையும் காக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பொதுமக்களும் நிம்மதியாக வாழ்வார்கள் என்பதே நம் கருத்து. நம் கருத்து மட்டும் அல்ல பொது மக்களின் கருத்தும் அதுவே.
- சாமிநாதன் மாரிமுத்து
