ஒன்றிய கவுன்சிலராக ஆரம்பித்த பொதுவாழ்க்கை ஒன்றிய செயலாளராக உயர்ந்து, கடந்த முறை இராணிப்பேட்டை காந்தி, திருவண்ணாமலை எ.வ.வேலு தயவில் திமுகவில் சீட் வாங்கி எ.வ.வேலு தயவில் பொருளாதார ஆதரவை பெற்று திருப்பத்தூர் எம்எல்ஏவாக ஆகிவிட்டார் மாடப்பள்ளி அண்ணாதுரையின் இளைய மகன் நல்லதம்பி! இந்த பெயர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வைத்ததாம். அண்ணாதுரைக்கு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது ஆசை! ஆனால் கடைசிவரை நிறைவேறவில்லை. அப்பாவின் ஆசையை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு கடந்த ஐந்து வருடங்களை தனக்கு பிடித்த மாதிரி எம்எல்ஏவாக இருந்து பார்த்துவிட்டார். ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மாவட்ட மந்திரி கே.சி.வீரமணியுடன் இரகசிய நெருக்கம் கொண்டு காண்ட்ராக்ட் வேலைகளையும், பல விருப்ப கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொண்டார். எதிர்கட்சி எம்எல்ஏ என்றாலும், பொருளாதாரத்தில் திருப்தியாக உயர்ந்தார். திருப்பத்தூர் தொகுதி திமுகவில் நான்கு கோஷ்டிகள் எந்த கோஷ்டியிலும் நல்லதம்பியை திமுகவினர் சேர்க்காததால், ஒரு புதிய கோஷ்டியை உருவாக்கி அதற்கு தானே தலைவனாகவும் ஆகிவிட்டார். விளைவு கோஷ்டிகளும் வளர்ந்தது, நல்லதம்பியும் எல்லா வகையிலும் வளர்ந்தார் ஆனால் திமுகவும் நிர்வாகிகளும் ஏமாந்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் உதயமானதில் நல்லதம்பியின் முயற்சியை மறைக்க முடியாது. இந்த விஷயத்தில் எம்எல்ஏவுக்கு நல்ல பெயர் என்கின்றனர். கொரோனா காலத்தில் தொகுதியில் அடிக்கடி தலையைக் காட்டியவர் அதன்பிறகு அமைதியாகிவிட்டார். தொகுதியில் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்திக்கு பஞ்சமில்லை. ஆனாலும் இரண்டாவது முறையாக சீட் கேட்டார். முதல் முறை ஆதரித்த இராணிப்பேட்டை காந்தி இரண்டாவது முறை ஆதரிக்கவில்லை. எ.வ.வேலுவின் தயவில் மீண்டும் சீட் கிடைத்து, எதிர்தரப்பில் நின்றவர் பலவீனமான அதிருப்தி வேட்பாளர் என்பதால், நல்லதம்பி இரண்டாவது முறையாக பாஸ் பண்ணிவிட்டார். திமுக ஆளுங்கட்சி ஆனதால், நல்லதம்பிக்கு ஆசைகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. எ.வ.வேலுவையே அப்பா அம்மாவாக பார்க்க ஆரம்பித்தவர், அப்பா என்றே கூப்பிடவும் செய்தார். கோரிக்கைகளோடு எல்லா துறைகளுக்கும் விசிட் போயிகிட்டு இருக்கார் ஓட்டு போட்டவர்களுக்கும், வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் நன்றி சொல்வதைவிட நான் இரண்டாவது முறை எம்எல்ஏ சீனியர் ஆயிட்டேன் அதனால, எனக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டும். இல்லாட்டி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதலியார் சமுதாயத்தை சேர்ந்த எனக்கு மந்திரி சபையில் வாய்ப்பு கொடுங்க இரண்டில் எந்த கோரிக்கையை நிறைவேற்றினாலும் சரி என்று எ.வ.வேலு பின்னாடியே சுத்திகிட்டு இருக்கிறார். நல்லதம்பியே காண்ட்ராக்டர் என்பதால், எல்லா வேலைகளையும் இவரே எடுத்துக்கறார் கட்சியினருக்கு கொடுப்பதில்லை என்கிற வருத்தம் திமுக நிர்வாகிகள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. ஊரில் இருந்தால் எம்எல்ஏ அலுவலகம் பக்கம் வருவார் பார்க்கலாம் இல்லாட்டி இவருடைய உதவியாளர் விவேகானந்தனை கூப்பிட்டால், உரிய பதில் சொல்லுவார். நல்லதம்பி கவனம் முழுவதும், மந்திரி இல்லாட்டி மாவட்ட செயலாளர் என்று மனசு முழுக்க முனகிக்கொண்டே இருப்பதால், வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை. இதில நூறுநாள் இல்ல ஐந்து வருடம் ஆனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை என்கிறார் நல்லதம்பியின் உறவினர் ஒருவர்.
திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்எல்ஏவின் நூறுநாள் சாதனை
