காற்று மாசுபாட்டால்…
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
-டாக்டர் எச்சரிக்கை
இந்தியாவில் 5 வயதிற்கு கீழான குழந்தைகளில் 464 பேர் நாள் ஒன்றுக்கு காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்-
அமெரிக்காவில் உள்ள Health Effects Institute, சமீபத்தில் வெளியிட்ட State of Global Air(SoGA)அறிக்கையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 5 வயதிற்கு கீழான 464 குழந்தைகள், காற்று மாசுபாட்டால் முன்கூட்டியே இறப்பதாக தகவல் வெளிவந்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2021ல்,அனைத்து வயதினரில் 2.1 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர் என்றும்,இரத்தகொதிப்புக்கு அடுத்தபடியாக பெரிய உயிர்கொல்லி நோயாக காற்று மாசுபாடு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக,சர்க்கரைநோய்,புகைபிடித்தல் போன்றவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை விட காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது.
உலக அளவில் 2021ல் 8.1 மில்லியன் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர். அதாவது இறந்தவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர்.
2021ல் இந்தியா,சைனாவில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 55% எனத் தெரியவந்துள்ளது. இந்தியா-2.1 மில்லியன் இறப்புகள்; சைனாவில் 2.3 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
தொற்றாநோய்களின் இறப்பிற்கு பெரும் பங்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது.
2021ல்,
மாரடைப்பு-40%
நுரையீரல் புற்றுநோய்-33%
சர்க்கரைநோய்-வகை2-20%
மூளை பாதிப்பு(Stroke)-41%
நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு(COPD)-70%
இறப்புகளுக்கு காற்று மாசுபாடே காரணமாக இருந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில்,இந்தியாவில் 38% சுகாதாரமாக வாழும் வருடங்கள் கண்புரை(Cataract)காரணமாக இழக்கப்பட்டுள்ளதுஎன்றும்,கண்புரையும் காற்று மாசுபாடு காரணமாக நிகழ முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்திய தொழிற்நிறுவனங்கள்+பிற(ர்) மீது எந்த நடவடிக்கையும் “Polluter Pays”-காற்று மாசுபாட்டை ஏற்படுத்துபவரே அதன் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில்,சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை? சட்டங்கள் யார் நலன்களைக் காக்க!? உள்ளது?
தலைநகர் சென்னையில், சூழல் பூங்கா!அமைந்துள்ள அடையாற்றில் சாக்கடை கழிவுநீர் கலந்து மீன்கள் இறந்து போனாலும்,அதைப்பற்றி கவலை கொள்ளாமல் தமிழக அரசு இருப்பதிலிருந்து சூழல் பிரச்சனையில் அரசின் அக்கறையை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் சாக்கடை கழிவுநீர் அடையாற்றில் நேரிடையாக கலப்பது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.
இருப்பினும்,தமிழக அரசு மழுப்பலான பதிலையே கூறி வருகிறது.
காற்று மாசுபாட்டை, சூழலைக் காப்பதில் தமிழக அரசு தவறும் போது மக்களின் சுகாதாரத்தை அரசால் எப்படி சட்டப்படி பேணிகாக்க முடியும்?
ஜனநாயக சக்திகள் விழித்துக் கொண்டு அரசிற்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே சிறிதளவாவது மாற்றம் ஏற்படும்.
– மரு.வீ.புகழேந்தி.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply