ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது ட்ரெண்டை தேடிப்பிடித்து அறிமுகம் செய்வது பாமகவின் நீண்டகாலப்பழக்கம். ஒரு கட்டத்தில் ரஜினி சிகரெட் பிடிக்கும் விவகாரத்தையே வைரலாக்கி இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆன கட்சியும் கூட. அதன்பிறகு மத்திய அமைச்சராகி சிகரெட் மற்றும் பீடி அட்டைகளில் கேன்சர் விழிப்புணர்வு படங்களை அச்சிட வைத்ததெல்லாம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அன்புமணிக்கு பாராட்டை பெற்றுத்தந்தது.
அதே சமயம் அன்புமணி தலையெடுக்கும் சமயங்களிலெல்லாம் கூட்டணி அமைப்பதிலோ, பத்திரிகையாளர் கூட்டங்களில் எதையாவது மாட்டிக் கொள்வதிலோவென ஏதோவொரு இடியாப்ப சிக்கல் தொற்றிக் கொள்ள, ராமதாஸ் அரசியல் தந்திரம் அவரது மகனுக்கு வாய்க்காதோ? என்றெல்லாம் கட்சியினரை பீதி தொற்றிக் கொள்வதுவும், அதன்பின்னர் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி”, “நான் முதல்வரானால்” என்றெல்லாம் ஏதாவது ஒரு கான்செப்ட்-ஐ பிடித்து கட்சியினரை கவர்வதும் சமீப காலத்தைய அவரது டிரெண்ட்.
பாமக ஒரு சாதிக்கட்சி, அக்கட்சியால் மாநில அளவில் பெரிய இடத்தை பெற முடியாததற்கு அதுவே காரணம் என்றெல்லாம் அன்புமணி காதில் சிலர் ஓதவே, சாதிய வட்டத்தை தாண்டி சாதிக்க வேண்டும் என பாமகவில் வன்னியர்களின் ஆதிக்கத்தை களையெடுக்க அன்புமணி முயற்சி செய்தும், மருத்துவர் ராமதாஸை மீறி அதில் வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம் வன்னியர் சங்கமே பாமகவின் அஸ்திவாரம் என்பதை மருத்துவர் ராமதாஸ் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை.
கடந்த தேர்தல்களில் அன்புமணி தலைமையில் மேற்கொண்ட கூட்டணி பல்டிக்களும் பெரிய அளவில் கட்சியின் வளர்ச்சிக்கோ, வெற்றிக்கோ பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இறுதியாக நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் வகுத்த வியூகமே போட்டியிட்ட 23 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு வெற்றி வாய்ப்பை தேடித்தந்திருக்கிறது. எப்படியாவது தனது மகனை கட்சியின் ஒற்றைத் தலைமையாக நிலைநிறுத்திட வேண்டும். எப்படியாவது தமிழக முதல்வர் இருக்கையில் அமர வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக ராமதாஸ் மேற்கொள்ளும் பிரயத் தனங்கள் அநேகம். அதன் அடுத்த பரிமாணமே தற்போது மேற்கொள்ளவிருக்கும் புதிய அதிரடி வியூகம்.
இனி வரும் தேர்தல்களில் பாமக தலைமையில்தான் கூட்டணி. யார் வேண்டுமானாலும் பாமகவுடன் வந்து இணைந்து கொள்ளலாம் என்பதே மருத்துவர் ராமதாசின் தற்போதைய புதிய அறிவிப்பு. அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன்தான் இனி கூட்டணி என்பதுதான் அந்த நிலைப்பாடு.
இதற்காக முதலில் கட்சிக்கட்டமைப்பை அதற்கேற்றாற்போல வடிவமைக்க ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறாராம். சீனியர், ஜூனியர் என்று பாகுபாடின்றி அன்புமணியின் கட்டளைகளை ஏற்று நடக்கும் விதிகள் தைலாபுரம் தோட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். கட்சியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்பிக்க நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்த கட்சித்தலைமை திட்டமிட்டிருக்கிறதாம்.
இதன் முன் ஆயத்தமாக பொதுக்குழுவின் ஒப்புதலோடு கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பதவியை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநில துணை பொதுச் செயலாளர்கள் என்ற பதவியை அகற்றியுள்ளார் ராமதாஸ். திமுக, அதிமுகவைப் போல மாவட்ட செயலாளர்களுக்கே இனி முழு அதிகாரமும் வழங்கப்படுகிறது. புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை மாநில தலைவர் ஜி.கே.மணி விரைவில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் எத்தனை பேர் மாவட்ட செயலாளர்களாக அதே பதவியில் தொடருவார்கள்? எத்தனை பேருக்கு பதவி காலியாகும்? என்பது கட்சியினரை பரபரக்க வைத்துள்ளது.
இதுதவிர்த்து வன்னியர் சங்க ஆதிக்கத்தையும் கட்சியில் கட்டுப்படுத்தவும் திட்டங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. வன்னியர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களை கட்சியிலும், கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களை வன்னியர் சங்க பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவை அனைத்தும் அன்புமணியின் “மாஸ்டர் ப்ளான்” என்றே கூறப்படுகிறது.
அதே சமயம் அன்புமணியின் கட்டளைகளையும், தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரங்களில் அவரை முன்னிறுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்களை கட்சிப் பொறுப்புகளில் அமர்த்தவும் ராமதாஸ் திட்டமிட்டு, இதற்காக சில சீனியர்களுக்கு கல்தா கொடுக்கவும் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் இதில் பல தகவல்களை கட்சித்தலைமை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் பாமகவில் அடுத்தடுத்த மாற்றங்கள் பல நிர்வாகிகளை கிலியாக்கியுள்ளது.
ஆரம்ப காலம் முதலே திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்து வந்த பாமக படிப்படியான தற்போதைய மாற்றங்களால் முழுக்க முழுக்க திராவிடக்கட்சியாகவே மாற்றம் காண தொடங்கியிருக்கிறது பாமக.
Leave a Reply