Save 20% off! Join our newsletter and get 20% off right away!

மண் கொள்ளை… மணல் கொள்ளை… தடுக்கச் செல்லும் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு..!

ஆத்தூர் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உள்ளனர். இரண்டு அமைச்சர்கள் உள்ள இந்த மாவட்டத்தில், மண் மற்றும் மணல் கொள்ளை அரசு அதிகாரிகள் துணையுடன் இரவு பகலாக படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதனை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பாத்துறை அருகே தொப்பம்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, கண்மாய் உள்ளது. சிறுமலை அடிவாரப் பகுதியில் பெய்யும் மழை நீர் இந்தக் கண்மாய்க்கு வந்தவுடன், இந்தப் பகுதியில் உள்ள தொப்பம்பட்டி, அம்பாத்துறை, ஜாதிகவுண்டம்பட்டி, சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, முருகன்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த கண்மாய் உள்ளது.

இந்தநிலையில், இந்தக் கண்மாயில் இரவு பகலாக ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களை வைத்து, மண் கொள்ளை பட்டப்பகலில் நடைபெற்று வந்தது. தகவல் அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதனைத் தடுத்து நிறுத்தச் சென்றனர். அவர்கள் தடுக்கச் சென்றபோது, மண் கொள்ளையர்கள் 40-க்கும் மேற்பட்ட குண்டர்கள், அடியாட்களை வைத்து விவசாயிகளை மிரட்டி உள்ளனர். திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இந்த மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். மண் கடத்தலைத் தடுக்கச் சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி சொல்லித்தான் மண் அள்ளி வருவதாகக் கூறியுள்ளனர். அதையும் மீறி லாரிகளை மறித்து தடுத்து நிறுத்திய, விவசாயிகள் மீது போலீஸார் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், மண் கடத்தலை தடுக்கச் சென்ற விவசாயிகள் தொப்பம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன்,  மற்றும் முருகன் உட்பட சிலர் மீது அம்பாத்துறை இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால், விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் மற்றும் மணல் கொள்ளை சர்வசாதாரணமாக இரவு பகல் நேரங்களில் நடைபெற்று வருகிறது. இதேபோல் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைரோடு, அணைப்பட்டி, விளாம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மூலமாக ஏரி, குளம் கண்மாய் ஆறு போன்ற பகுதிகளில் 24 மணி நேரமும் மண் மற்றும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதால், அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் கனிம வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவித்து வருகின்றனர். அதேபோல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைரோடு, செம்பட்டி பகுதிகளில் உள்ள குளம் மற்றும் கண்மாய்களிலும் அணைப்பட்டி வைகை ஆற்றிலும் இரவு பகலாக டிப்பர் லாரிகளில் ஜேசிபி ஹிட்டாச்சி போன்ற இராட்சத இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து கனிமவளங்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

வைகையாற்றில் திருடப்படும் மணல் ஒரு லாரி சுமார் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரத்துக்கும், ஒரு யூனிட் 3000 முதல் 5000 வரை விலை நிர்ணயித்து நிலக்கோட்டை பகுதியில் இருந்து, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, போன்ற மாவட்டங்களுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இது தொடர்பாக  இப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி ஊராட்சி செயலாளர், வட்டாட்சியர் என அனைவருக்கும் தெரிந்தே கனிமவள கொள்ளை தாராளமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக, மாவட்ட கனிம அதிகாரியைத் தொடர்பு கொண்டால், அவர் தேனி மாவட்டத்தில் அல்லது வேறு பகுதியிலோ இருப்பதாகவே கூறி வருகிறார். இவர் இதுவரை எந்த ஒரு மணல் லாரிகளையும் பிடித்தது கிடையாது.
அவரிடம் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறினால், அருகிலுள்ள காவல்துறைக்கு தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து விடுகிறார்.  காவல்துறைக்கு தெரிவித்தால், நீங்கள் கனிமவளத்துறை அதிகாரிகளிடம்  தெரிவியுங்கள் என்றும், கனிமவளத்துறை அதிகாரிக்கு தெரிவித்தால், வட்டாட்சியரிடம் தெரிவியுங்கள்  என்றும் கூறிவருகின்றனர். இப்படி தொடர்ந்து அரசு அதிகாரிகள் தகவல் சொல்பவர்களை இழுத்தடித்து வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து 24 மணி நேரமும் வைகையாறு சிறுமலை அடிவாரம் பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் அரசு புறம் போக்கு கண்மாய்கள் போன்றவற்றில் கனிமவள கொள்ளை நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, மண்வளம் கெட்டுவிடுகிறது.

இதேபோல் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி உள்ள தொகுதியான ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழக்கணுது ஊராட்சிக்குட்பட்ட கிட்டைய்யகவுண்டன்பட்டி குளத்தில் அரசு அனுமதி இன்றி இரவு பகலாக கனரக வாகனங்களை வைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இதனை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இங்கு மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் வைத்துள்ள கனிமவள அதிகாரியின் கையொப்பம் கொண்ட ஒப்புகைச்சீட்டை பார்த்தால், அது வேறு பகுதியில் இருக்கக்கூடிய குளத்தின் பெயரை வைத்துக்கொண்டு இந்தப் பகுதியில் இரவு பகலாக கனரக வாகனங்களை வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டத்து சாலைகளுக்கு செல்லும் தார் சாலைகளில் மணல் திருட்டில் ஈடுபடும் கனரக வாகனங்கள் செல்வதால், சாலையும் சேதமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தநிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய இந்தக் கிராமக் குளத்திலிருந்து அந்த மணல் திருடும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு கனிமவளக் கொள்ளையைத் தடுத்து கனிமவளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.