அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரில் அமைச்சர் தனது பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து, ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணி வீடு, அவரது உறவினர்களின் பெங்களூரு, சென்னை உட்பட 35 இடங்களில் சோதனை நடத்தியதில், 623 (சுமார் 5 கிலோ) சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 34 லட்சம் ரொக்கப்பணம், 7 கிலோ வெள்ளி, 1 லட்சத்தி 80 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர், செல்போன், லேப்டான், ஹாட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புள்ள 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கணக்கில் வராத 13 லட்சம் ரொக்கம், நிறுவனங்களின் பணபரிவர்த்தனைகள், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ஹார்டிஸ்க், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்,
எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி) – கூட்டு சதி, 420 – மோசடி, 409 – நம்பிக்கை மோசடி, 109 – அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதகமாக செயல்படுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது பெயரிலும், அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும், தம்பி சேகர் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயரிலும், தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து, அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூர் உட்பட 26 இடங்களில் சோதனை நடத்தி, ரூ.25,56,000 ரொக்கம், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து, வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சராக இருந்தபோதுள்ள வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தனர். இதனடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா புகழ் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள வீடு, அவரது உதவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 29 இடங்களில் சோதனை செய்தனர். மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை நடத்தினர்.
முதல் தகவல் அறிக்கையில், ஏ-1 ஆக குற்றம்சாட்டப்பட்டவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஏ-2வாக இணைக்கப்பட்டிருப்பவர் அவரது மனைவி ரம்யா. இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988, இந்திய தண்டனைச் சட்டம், 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 1988 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த வழக்குகள் போடப்பட்டது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக 01.04.2016 முதல் 31.03.2021 வரை இருந்த காலத்தில் சி.விஜயபாஸ்கர் பெயரிலும், அவரது மனைவி ரம்யாவின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 736 ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. 6.5 கோடி ரூபாய்க்கு (7 டிப்பர் லாரிகள், 10 டிரான்ஸிட் மிக்சர்கள், ஒரு ஜேசிபி) அசையும் சொத்துக்களை குவித்ததாகவும், கணக்கில் வராத வருமானம் மூலம் 53 லட்சம் ரூபாய்க்கு பிஎம்டபிள்யு கார் வாங்கியதாகவும், சென்னையில் ரூ.14 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும், பல்வேறு நிறுவனங்களில் 28 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்திருப்பதாகவும், 40 லட்சம் மதிப்பில் 85 சவரன் நகையை கணக்கில் வராமல் குவித்ததாகவும் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.99 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களை கணக்கில் வராத வகையில் வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
அன்னை தெரசா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையை தொடங்கி முறைகேடாக பணம் வாங்கியதாகவும், அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாகவும் இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அன்னை தெரசா பெயரில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என 14 கல்வி நிலையங்களை சி.விஜயபாஸ்கர் நடத்தி வருவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து இவருக்கு சொந்தமான 14 கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது ரூ.6 கோடியே 41 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் கணக்கு காண்பித்துள்ளார். செலவு கணக்கு செய்தாக ரூ.34 கோடி கணக்கு காண்பித்துள்ளார். ஆனால் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது 58 கோடியே 64 லட்சத்து 25 ஆயிரத்து 887 ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். மீதமுள்ள 27 கோடி ரூபாய் வரையிலான சொத்து எப்படி வாங்கப்பட்டது என்ற கணக்கு இல்லாத காரணத்தால் இந்த ரெய்டு நடப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், ஐந்தரை லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவணியும் 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகளும் கண்டறியப்பட்டது.
இளங்கோவனுக்கு தொடர்புடைய சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி, சேலம் என 36 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள் மற்றும் 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள நகை கடையில் நடத்திய சோதனையில், 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள், இருப்பை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார பீடத்திலிருந்த இருக்கின்றவர்கள் மீது இத்தகைய சோதனைகளும் வழக்குகளும் அடுத்தடுத்து குவியும் என்பதும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதும் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்ற வேளையில்,
தனக்கு கீழ் பணிபுரியும் காவல் நிலைய எழுத்தர் (station writer) முதல் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரை யார் யார் எவ்வளவு கையூட்டு பெறுகின்றனர் என்ற பட்டியலை, தனது சுற்றறிக்கையின் மூலம் வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ்.
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வெர்பிகேஷன் சான்று வழங்க 500 முதல் 1000, நில மோசடி, பண மோசடி குறித்து விசாரிக்க 1000, தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விவகாரத்துக்கு 1000, கள்ளச்சந்தையில் மது விற்கும் சந்து கடைக்கு 200, முதல் தகவல் அறிக்கை நகலை வழங்க 100 ரூபாயும்,
சிவில் மோசடிக்கு 20000 முதல் 100000வரை, தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விவகாரத்துக்கு 5000, மணல் கொள்ளைக்கு 3000, பறிமுதல் செய்த வாகனங்களை திருப்பி கொடுக்க 1500, விபத்து வழக்கில் ஜாமீன் வழங்க 5000, குட்கா பொருள் விற்றால் 2000 ஆயிரம் ரூபாயும்.
லாட்ஜிகளுக்கு தலா 2000 ஆயிரம், பியூட்டி ஸ்பாகளுக்கு 5000, கிரானைட் குவாரி மற்றும் போக்குவரத்துக்கு 10000, மணல் கொள்ளைக்கு 20000, அனுமதி இல்லாமல் நடக்கும் பார்களுக்கு தலா 2000, கள்ளச்சந்தையில் மது விற்கும் ஒரு கடைக்கு தலா 10000முதல் 60000ரூபாய் லஞ்சம் வாங்குவதாகவும்,
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கையும் விடுத்துள்ளார் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபினவ்.
எஸ்.பி. ஸ்ரீஅபினவ் வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபி கந்தசாமி, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வாயும் திறக்கவில்லை.
ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரே தனக்கு கீழுள்ளவர்கள் நீக்கமற வாங்கும் லஞ்சப்பட்டியலை வெளியிடுகிறார் என்றால், லஞ்ச ஒழிப்புத்துறை என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஊழலற்ற நல்லாட்சி நடத்துவதாகக் கூறும் தமிழக முதல்வர் ஸ்டாலினும்,
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபி கந்தசாமியும், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார மையத்தில் இருந்தவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பதிவு செய்வதில் காட்டும் முனைப்பை போல,
லஞ்சம் பெறும் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதும், அவர்கள் குவித்து வைத்துள்ள சொத்துக்கள் மீதும், உரியவகையில் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் மீது எடுக்கப்படும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள், அரசியல் பழிவாங்கப்படும் நடவடிக்கைகளாக மட்டுமே பொதுவெளியில் பார்க்கப்படும்.
எனவே, லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நேர்மையான முறையில், பாரபட்சமற்ற நடவடிக்கைகள் எடுப்பார்கள் என நம்புவோம்.
அவ்வாறு இல்லையெனில், காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என, சட்டசபையில் தனது வேதனையை வெளிபடுத்திய முத்துவேல் கருணாநிதியின் சொல், மீண்டும் உறுதிபடும்.
– பூமொழி
எழுத்தாளர்
மனித உரிமை ஆர்வலர்
Leave a Reply