எடப்பாடி பழனிச்சாமிக்கு இது போராட்ட காலம்தான். முதல்வர் பதவியில் இருந்து இறங்கிய சொற்ப மாதங்களுக்குள் பல முனை தாக்குதல்களுக்குள் சிக்கி அதில் இருந்து மீள வழி தெரியாமல் சிக்குண்டு கிடக்கிறார். ஒரு பிரச்னையில் இருந்து மீள்வதற்குள் அடுத்த பிரச்னை நெருக்கடி கொடுப்பது வாலு போய் கத்தி வந்த கதையாக மாறிவிடுகிறது.
ஒரு பக்கத்தில் கொடநாடு வழக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தொய்வு இல்லாமல் இந்த வழக்கு தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்ததில் இருந்து மூன்று ஆண்டுகளாக மூச்சு கூட விடாத இவ்வழக்கு இப்போது பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வழக்கில் புலன் விசாரணை நடந்து வரும் நிலையில், இச்சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சாலை விபத்தில் இறந்த வழக்கையும் மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கும் தொடர்பு இருக்கலாம் என அவரையும், கனகராஜின் உறவினராக சேலம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் என்பவரையும் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரது வரவு செலவு கணக்குகளை கையாண்டதின் மூலமாக அதிமுகவிற்குள் அதிகார மையமாக வலம் வந்த இளங்கோவன் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு, இதுவரை திரைமறைவில் இருந்த இளங்கோவனின் முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
வெளி உலகிற்கு பெயரளவிற்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தாலும், அதிமுகவிற்குள்ளும், ஆட்சி அதிகாரத்திற்குள்ளும் இபிஎஸ்-க்கும், ஓபிஎஸ்-க்கும் மிக நெருக்கமாக இருந்து கொண்டு காண்டிராக்ட்கள், பணியிட மாற்றங்கள், புதிய நியமனங்கள் ஆகியவற்றில் அதிகார பீடத்திற்கு சரியாக கமிஷன் வருகிறதா என்பதை கண்காணித்து வந்தவர் இவர்தான்.
இபிஎஸ் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களை டீல் செய்தவரும், தேர்தல்களில் சில மாவட்டங்களில் வேட்பாளர்களை இறுதி செய்தவரும் இவர்தான் என்பது இதுவரை வெளிக்கு வராத உண்மை. கொங்கு மண்டல தேர்தல் பொறுப்புகளை கண்காணிக்க இவரைத்தான் எடப்பாடி பழனிச்சாமி நியமித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு சசிகலா எப்படியோ, அப்படித்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு இளங்கோவனும் என்கிறார்கள் விவரம் தெரிந்த அதிமுக முன்னோடிகள். அம்மா, சின்னம்மா என்ற கதையில் ஜெயலலிதா, சசிகலாவை தலைகுப்புற விழுந்து வணங்குவது போல ஐயா, சின்னய்யா என்ற ரீதியில் எடப்பாடிக்கு அடுத்ததாக இளங்கோவனையும் கும்பிட்டு வலம் வந்த அதிமுக தலைகள் பல இருக்கிறதாம்.
அதிமுகவில் மட்டுமல்ல திமுகவில் பல மூத்த தலைவர்களோடு இன்னமும் தொடர்பில் இருப்பவர் என்ற சங்கதியும் விசாரணைகளில் வெளிப்பட்டிருக்கிறது. பண மதிப்பிழப்பின் போது பல திமுக நிர்வாகிகளுக்கு பழைய பணத்திற்கு புதிய பணம் மாற்றிக் கொடுக்கும் பொறுப்பை துணிந்து ஏற்று திமுகவினரிடமும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொ்ண்டிருந்தாராம்.
இத்தனை செல்வாக்கு மிக்க இளங்கோவன் தொடர்புடைய 27 இடங்களில் நடந்த ரெய்டில் 21.2 கிலோ தங்கம், 10 கார்கள் உள்பட பல பொருட்களும் ரூ.29 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினாலும், இவையெல்லாம் மிகச் சொற்பம்தான் என்ற கிசுகிசுப்பும் வலம் வருகிறது. 2014 – 2020 காலத்தில் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய பெயரிலும் மகன் பெயரிலும் இளங்கோவன் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரராக வாழ்க்கையை தொடங்கி அதிமுகவின் அதிகார மையமாக மாறியது வரை இளங்கோவனின் அசுர வளர்ச்சியும், பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்குவிப்புகளும் அதிமுக அடிமட்ட தொண்டர்களுக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொடநாடு விவகாரம், இளங்கோவன் ரெய்டு, உட்கட்சி பூசல், ஓபிஎஸ் உடன் பனிப்போர், திமுக எதிர்ப்பு அரசியல் என்பதையெல்லாம் தாண்டி தற்போது சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் விவகாரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தீரா தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
Leave a Reply