Save 20% off! Join our newsletter and get 20% off right away!

னவரி 5 பதவி முடியுதுஎன்ன செய்யப் போகிறார்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்?

ஊராட்சி மன்றத் தலைவர் என்றாலே எம்எல்ஏ, மந்திரிகளுக்கு இணையாக காரில் வந்து இறங்கி நிற்க வேண்டும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிப் போய் விட்டது. அவர்களது ஐந்தாண்டு கால பதவி வரும் 5.1.2025ஆம் நாளுடன் நிறைவடைகிறது. அதற்குப் பிறகு எப்போது தேர்தல் என்ற அறிவிப்பு இதுவரை அரசிடமிருந்து வெளிவரவில்லை. 5ஆம் தேதிக்குப் பிறகு ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் என்றால் அந்தந்தக் கிராம மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருபவர் என்றுதான் பொருள். அதிலும் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவற்றில் தன்னிறைவு கண்டு விட்டாலே ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும். அப்படி கடந்த ஐந்தாண்டுகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்த அனைவருக்கும் நல்ல பெயர் கிடைத்து விட்டதா? அவர்கள் இனி வரும் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியுமா? பெண் தலைவராக இருந்த ஊராட்சியில் கணவரின் தலையீடு இல்லாமல் தானே சுயமாக ஆட்சி அதிகார நிர்வாகம் செய்தாரா? இப்படி சில கேள்விகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் முன் வைத்தோம்.
பெண்கள் தலைவராக இருக்கும் ஊராட்சியில் அவரது தொலை பேசி எண்ணைக்கூட அவரது கணவர்தான் பயன் படுத்தி வந்திருக்கிறார். அல்லது பெண் தலைவரின் போன் நம்பருக்கு ஊருக்குள் உள்ள பெண்கள்கூட போன் செய்து பேச முடியாது என்ற நிலைதான் பல ஊர்களிலும் இப்போதுவரை இருந்து வந்திருக்கிறது. அண்மைக் காலமாக ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஒரு நூறுரூபாய் கூட ஊராட்சிப் பணத்தை எடுத்துச் செலவு செய்ய முடியவில்லை, ஒவ்வொரு செலவுக்கும் அது குறித்த தொலைபேசி எண்ணுகளுக்கு ஓடிபி வந்து அவற்றைச் சரி பார்த்துச் செலவு கணக்கு எழுதுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது? தலைவர் பொறுப்புக்கு ஏன் வந்தோம் என்று இருக்கிறது என்று கடந்த இரண்டாண்டுகளாகப் புலம்பி வந்த ஊராட்சி மன்றத் தலைவர்களைச் சந்திக்க முடிந்தது. அப்படிப் பட்டவர்கள் மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவராக ஆசைப்படுகிறார்களா? அவர்கள் மக்கள் பணிகளை, ஊருக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்து நிறைவு பெறச் செய்திருக்கிறார்களா? என்ற பல கேள்விகளுடன்தான் பலரையும் சந்தித்தோம்.
அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள பூங்குடி என்ற கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் அருணாதேவி சிவக்குமார் என்பவர் கூறுகையில் நான் ஊராட்சி மன்றத் தலைவர் ஆன பிறகு இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் எனது ஊராட்சியில் சுதந்திர தினவிழா கிராமசபைக் கூட்டம் நடத்தியிருக்கிறோம் என்பதில் எனது கிராமத்துக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறோம். உலகப் பிரச்சினையில் சிக்குண்ட வேங்கைவயல் கிராமத்திற்கும் பூங்குடிக்கும் இடையில் புதிய சாலை போட்டிருக்கிறோம். போதுமான அளவிற்கு குடிதண்ணீர் வசதிகளும் போக்குவரத்துக்காக இரண்டு நகரப் பேருந்துகளையும் எங்கள் கிராமப் பகுதிகளுக்கு வரச் செய்திருக்கிறோம்.
ஏற்கனவே பொது வார்டாக இருந்தபோது பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகி இருக்கிறார்கள். கடந்த முறை பெண்களுக்கு ஒதுக்கியதில் நான் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். மறுபடியும் தேர்தல் வரும்போது நின்று வெல்வேன். ஒரு வேளை ஆண்களுக்கு ஒதுக்கினால் எனது கணவர் தேர்தல் களம் காண்பார். அந்தளவுக்கு எங்கள் பூங்குடி ஊராட்சியை வளர்த்திருக்கிறோம் என்றார்.
மாங்கனாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி ராமதாஸ் கூறுகையில் எங்கள் ஊராட்சியை காயாம்பட்டி என்ற பெயருடன்தான் இருந்தது. உண்மையில் அந்த ஊர் புதுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள வடவாளம் ஊராட்சியில் இருக்கிறது. அதை மாற்றிவிட்டு திருவரங்குளம் ஒன்றியம் மாங்கனாம்பட்டி என்ற பெயரில்தான் இருக்க வேண்டும் என்பது கடந்த அறுபது ஆண்டுகாலக் கோரிக்கையாக இருந்தது. அது இப்போது எனது காலத்தில் நிறைவேறி இருக்கிறது. அரசு கெசட்டிலும் மாற்றி விட்டோம். அந்த ஒரு சாதனை செய்த திருப்தியே போதும்.
இளைஞர்களின் பெரும் எதிர் பார்ப்பாக இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை இரண்டு முறை நடத்தி சாதனை செய்திருக்கிறோம். ஊருக்கென்று எந்த பிற வருமானமும் கிடையாது என்ற நிலையில் அரசிடமிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டு அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கஜா புயல் வந்தபோதும்சரி, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சரி நிறைய கொடையாளர்களைக் கொண்டு வந்து அவர்கள் மூலம் மக்களின் பாதிப்புத் தேவைகளை நிறைவு செய்து கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற செயல்களால் கிராம மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்திருக்கிறோம். அதனால் தேர்தல் எப்போது வைத்தாலும் நின்று வெற்றி பெறுவோம் என்றார்.
குளமங்கலம் தெற்கு ஊராட்சி மன்றத்தில் நான்கு முறை ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பை நிறைவு செய்திருக்கும் ரஞ்சித்குமார் ஒரு முதுகலைப் பட்டதாரி. மூன்றுமுறை ஊராட்சி மன்றத் தலைவர் ஆகி நான்காவது முறை தேர்தல் களம் கண்டபோது நிறைய வேட்பாளர்கள் களத்தில் இறங்கினார்கள். அதாவது போட்டி கொஞ்சம் கடுமையாக இருந்தது.
ரஞ்சித்குமார் வாக்குகள் சேகரிக்க களத்தில் இறங்கவில்லை. அவரது தொலைபேசி எண்களை ஊருக்குள் உள்ள அனைவரும் கடந்த காலங்களில் வைத்திருப்பார்கள். அதைப்போலவே அவரும் அனைவரது தொலைபேசி எண்களையும் சேகரித்து வைத்திருந்தார். தொலைபேசியில் மட்டுமே வாக்குகள் சேகரித்தார். அதுவும் கடந்த மூன்று முறை நான் தலைவராக இருந்தபோது எனது செயல்பாடுகள் திருப்தியாக இருந்தால் மட்டும் எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி விட்டு முடித்துக் கொண்டார். தேர்தல் முடிவு மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாங்கிய மொத்த வாக்குகளைவிட பல மடங்கு பெற்று வெற்றிவாகை சூடினார்.
இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டபோது எங்கள் ஊருக்குச் செய்ய வேண்டிய பணிகள் என்பது இன்னும் இரண்டாண்டுகளுக்கு எதுவும் தேவைப்படாது. அந்தளவுக்கு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கி வைத்திருக்கிறோம். அது கிராம மக்களின் ஒத்துழைப்போடுதான் சாதித்திருக்கிறோம். ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பு என்று ஒன்று இருந்தாலும் அரசு ஊழியர்களை வைத்து நிர்வாகம் செய்தாலும் இரண்டாண்டுகளுக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறது. தேர்தல் எப்போது நடக்கிறதோ அப்போது நடக்கட்டும். எனது சேவை இந்த ஊருக்குத் தேவை என்றால் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். தேவையில்லை என்று மக்கள் நினைத்தால் அந்த முடிவையும் நாம் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து ஊர் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம் என்று பெருமகிழ்வோடு கூறினார். ஊருக்குள் உள்ள பள்ளி மாணவர்களைக் கேட்டால்கூட எங்க தலைவர் ரஞ்சித்குமார் என்று பெருமையோடு சொல்லும் குரல்களை நிறையக் கேட்க முடிகிறது.
வேப்பங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கத்திடம் (கடந்த காலத்தில் அவரது மனைவி ஒருமுறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது அவர் தலைவர்) கேட்டபோது தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பொற்பனைக்கோட்டை எங்கள் ஊரில் இருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது. ஊரை நிர்வாகம் செய்ய ஊராட்சி மன்றத் தலைவர் அவசியம் தேவை என்பதை அரசு மக்களுக்கு நன்கு உணர்த்தி இருக்கிறது.
திட்டம் தீட்டுவதும் நிதி ஒதுக்குவதும் அரசின் பணியாக இருக்கலாம். ஆனால் அதை மக்களின் தேவையறிந்து செயலாற்றுவது ஊராட்சி மன்றத் தலைவராகத்தான் இருக்க முடியும். கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப்போலவே மற்ற பிரச்சினைகளுக்கு அது காவல்துறை, வருவாய்த்துறை, நிர்வாகத்துறை சார்ந்ததாக இருக்கலாம். அதைச் சரியாகச் செய்வதற்கு நல்ல ஊராட்சி மன்றத் தலைவர்தான் என்பதை அரசுத்துறைகள் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது. அந்த வகையில் குற்றச் செயல்கள் நடைபெறாத வண்ணமும் அரசு செய்ய வேண்டிய சில பணிகளை நான் ஏற்றுக் கொண்டும் மக்கள் குறைகளைத் தீர்த்து வைத்திருக்கிறேன். ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை கடந்த தலைவர் பொறுப்புக்கான காலங்களில் மற்றவர்கள் உணரும் வகையில் செய்து முடித்திருக்கிறேன். இனி ஊராட்சி மன்றத் தலைவருக்கு 99-சதவீதமும் போட்டியிட மாட்டேன். ஊருக்காக வாழ்ந்து விட்டேன். இனி எனது பிள்ளைகளைப் படிக்க வைக்க குடும்பத்திற்காக உழைக்க வேண்டியிருக்கிறது என்றார்.
செரியலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜியாவுதீன். இளம்பட்டதாரி, சுறுசுறுப்பானவர் என்ற காரணத்தால் நிறைய எதிர் பார்ப்பு ஊருக்குள் இருந்தது. அதற்கேற்ப அவர் சிறுபான்மை என்பதால் சில நேரங்களில் எதிர்ப்புகளும் இருந்தன. அவற்றையெல்லாம் ஊடக வெளிச்சத்தாலும் தனது சாதுரியமான செயல்பாடுகளாலும் படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டார். ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்புக்கு வந்து சேவைகள் செய்ததால் தனது தொழிலைக் கவனிக்க முடியாமல் போனது என்ற வருத்தம் இருந்தாலும் மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்புக்கு வந்து சேவைகள் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இவருக்கு இருக்கிறது.
குளவாய்ப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தமிழரசன். முதுகலைப் பட்டதாரி. அந்த ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பு பட்டியலினத்துக்கு ஒதுக்கப் பட்டதால் அந்த இனத்தவர் போட்டியிட்டதில் திமுக காரரான இவர் வெற்றிபெற்றார் என்பதைவிட இவரை இயக்கியவர்களால் வெற்றி பெற வைக்கப் பட்டவர். இந்த ஊருக்குள் முக்குலத்தோரின் அதிகாரம் சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் அவர்களுக்குள் இருக்கும் பிரிவினைகளில் யாருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்ததோ அவர்களால் இயக்கப் பட்டவர் வெற்றி பெற்றார் என்று சொல்லலாம்.
தமிழரசனால் பள்ளியில் சுதந்திரதின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க முடியவில்லை. தடுக்கப் பட்டார். தமிழக அளவில் பேசு பொருளானது. தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளானது. கடைசியில் பள்ளி விழாக்களில் ஊராட்சி மன்றத் தலைவர் கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு இருக்கிறது என்றால் அவர்தான் வந்து ஏற்ற வேண்டும் என்ற சட்டம் வேண்டியதில்லை. பள்ளியின் தலைமையாசிரிரே ஏற்றி வைக்கலாம் என்ற தீர்ப்பின்படி தமிழரசனுக்கு அந்த அதிகாரம்கூட இல்லாமல் வைக்கப் பட்டிருக்கிறார்.
அண்மையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது யாரோ ஒருவர் கம்பெனி வைத்திருப்பதாகவும் ஊருக்குள் வீணாகிக் கிடக்கும் குப்பைத் தொட்டிகளைச் சரி செய்து தருவதாகவும் சொன்னதன் பேரில் இவரும் எதற்கோ போனில் சம்மதித்து வைக்க, பேசியவர் வந்து எடுத்துச் சென்று விட, தமிழரசனுக்கு எதிர்த் தரப்பினர் இவர் குப்பைத் தொட்டிகளைக்கூட விற்று விட்டார் என்று புயலைக் கிளப்ப, இப்போது காணாமல் போன எண்ணிக்கையில் குப்பைத் தொட்டிகளை புதிதாக வாங்கி வைத்து விட்டு பணி நிறைவு செய்யக் காத்திருக்கிறார். குப்பைத் தொட்டிகளை இவர் இல்லாத நேரத்தில் ஏற்றிச் சென்றவர் செல் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருக்கிறது. ஆனாலும் இந்தப் பிரச்சினையை முடித்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக சபதமேற்றிருக்கிறார்.
குழிபிறை ஊராட்சி மன்றத் தலைவர் அழகப்பன். புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் இருந்தாலும் செட்டிநாட்டுக் கட்டமைப்புகளைக் கொண்ட அழகிய கிராமம். பல தரப்பட்டவர்கள் இருந்தாலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து நிற்கும் கிராமம். மதுபானக்கடைக்குத் தடைபோட்டிருக்கும் கிராம நிர்வாகம் கொண்ட ஊர். ஊராட்சி மன்றத் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், வந்திருக்கிறார்கள். யார் ஆட்சி செய்தபோதும் மதுபானக் கடைக்கு நோ சொல்லி விட்டார்கள். யாரும் குடித்து விட்டு ஊருக்குள் வர முடியாது என்ற கட்டுப்பாடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. அதனால் சண்டை சச்சரவுகள் கிடையாது. திருவிழாக்கள் கூட அமைதியாக நடக்கும். குடிபோதையால் சாலை விபத்துகள் கிடையாது. காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவானதில்லை.
இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் உலக நாடுகளில் எல்லாம் இருக்கிறார்கள். ஊர் வளர்ச்சிக்கு அரசு வழங்கும் நிதியைவிட அதிகம் தேவைப்படும் பணிகளுக்கு ஊருக்குள் ஆளாளுக்கு நிதி போட்டு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அது குளம் வெட்டுவதாக இருக்கட்டும், மருத்துவ மனை ஏற்படுத்திக் கொள்வதாக இருக்கட்டும், கல்விக் கூடங்கள் ஏற்படுத்துவதாக இருக்கட்டும், அதற்காகவே நிதியகம் அமைத்து செயல் படுத்தி வருகிறார்கள். மன்னர்கள் காலத்து அரண்மனைகளைப் போல வீடுகளும் இதைவிட ஊரைக் கட்டமைக்க முடியுமா என்ற கேள்வியுடன் வியக்க வைக்கும் ஊராக இருக்கிறது.
ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் அழகப்பன் (இவருக்கு கோடீஸ்வரன் அழகப்பன் என்றொரு பெயர் உண்டு.) கூறுகையில் எனது தேவைக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறேன். எங்கள் ஊர் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரிக் கிராமமாக இருந்து வருகிறது. இதற்காக எங்களது முன்னோர்களும் உழைத்திருக்கிறார்கள். இப்போதுள்ளவர்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்கால நலன் கருதி இன்றைய இளைஞர்களும் நல்ல புரிதல்களோடு இருக்கிறார்கள். நானும் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும்போது பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். யார் இந்த ஊருக்கு ஊராட்சி மன்றத் தலைவராக வந்தாலும் ஏற்கனவே இருக்கும் மாண்பு குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்றார் தன்னடக்கத்தோடு.
இவையெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் உள்ள கிராமங்களில் சிலவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். இதைத்தாண்டி தமிழ்நாட்டின் மற்ற கிராமங்கள் இருந்துவிட முடியாது. அவற்றிற்கெல்லாம் தீர்வு கண்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களது சாதனைகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
ஜனவரி 5ஆம் நாள் கலைக்கப்படும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு மறுபடியும் எப்போது தேர்தல் வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலையில் இப்போதுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுரையில் இடம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களின் சாதனைகளைவிட கூடுதலாகச் செய்தவர்கள் இருந்தால் வெற்றியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. குறைவாக இருந்தால் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அளிக்கப் படும் வாக்குக்கு நிர்ணயிக்கப் படும் தொகை நான்கு இலக்கத்தில் இருந்து ஐந்து இலக்கமாக மாறினால் வியப்பேதும் இல்லை.
– ம.மு.கண்ணன்
படங்கள்: சு.க.கதிரவன்.