Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டவர் மீது போலி சாதிச் சான்றிதழ் புகார்..!

ராணி

ராணிப்பேட்டை சர்ச்சை

பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் இன மக்களைப் போல சாதிச் சான்று வாங்கி சலுகைகளை அனுபவித்து வருவோர் மீதும், அதற்குத் துணை போகும் அதிகாரிகள் மீதும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி வலியுறுத்தியுள்ளது.

தனித்தொகுதி என்பது சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கோ நடக்கும் தேர்தல்களில், சில குறிப்பிட்ட தொகுதிகள் தாழ்த்தபட்ட பழங்குடியின பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டு, அத்தொகுதியில் அவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவதாகும்.

இவ்வாறு ஒதுக்கப்படும் தலித்களுக்கான தனித்தொகுதி இட ஒதுக்கீடு முறையை தலித் அல்லாதோர் சிலர் தானும் ஒரு தலித் தான் என்று போலி சான்றிதழ்களை வாங்கி, தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வருவதும், பஞ்சமி நிலங்களை அனுபவித்து வருவதும் அரசு வழங்கி வரும் தலித்களுக்கான சலுகைகளை அனுபவித்து வருவதும் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் மோசடி ஆகும்.

இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது முதல் கட்டமாக வாலாஜா, ஆற்காடு, திமிரி போன்ற ஊராட்சி ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்டமாக அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் போன்ற ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்றது.

முதல் கட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தூர் ஊராட்சி தனி பஞ்சாயத்து (அ) ரிசர்வு ஊராட்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் மட்டுமே நிற்க வேண்டும்.

இதனடிப்படையில், ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளர்களாக சாத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பைச் சேர்ந்த சேட்டு என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து சாதி இந்துக்கள் பகுதியில் வாழும் வீரப்பா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வீரப்பா மீது கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி மக்கள் குறைதீர்வு மனுநாளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாத்தூர் சேட்டு புகார் அளித்தார். அந்தப் புகாரில், ”நான் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் கிராம ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருகிறேன்.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

இந்தநிலையில், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட வீரப்பா என்பவர் ஆதிதிராவிடர் என்று போலியாக சான்று வாங்கி  ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரியவந்துள்ளது.

அவர் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் இல்லை. மேலும், அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். எஸ்சி மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் போலி சான்று கொடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். இவர்  மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட்டதைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.  என்னைப் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித்  பகுஜன் அகாடி கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவியிடம் கருத்து கேட்டபோது, ”ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர், பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிற்கவேண்டிய சாத்தூர் தனிப் பஞ்சாயத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த வீரப்பா    பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் போல் போலி சான்று வாங்கி மனுத் தாக்கல் செய்து போட்டியிட்டிருக்கிறார்.

இது கண்டிக்கத்தக்கது. சாத்தூர் கிராமத்தில் அவரை குறித்து நாங்கள் விசாரித்தபோது அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஏதோ ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் போல சான்று வாங்கி வந்து அதன் அடிப்படையில் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில்  பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் போல் போலி சான்று  வாங்கி, சாத்தூர் பஞ்சாயத்து தேர்தலில் நின்றிருக்கிறார்.

இவர் சாதி சான்றுக்கு ஆன்லைனில் பதிவு செய்தபோது, அந்தக் கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் இவரின் மனுவை நிராகரிக்கிறார் என்பதும் தெரியவருகிறது.  இவர் எந்த வகையில் சாதி சான்று வாங்கினார் என்பது மர்மமாக உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி மாநில தலைவர் எம்.தங்கராஜ் நம்மிடம், ”தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தலித் பழங்குடியினர் பட்டியல் இனத்தைச் சாராத மாற்று சமூகத்தினர் போலியாக ஆதி திராவிடர் என்றும் பழங்குடியினர் என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்றும் போலி சான்றிதழ்களை வாங்கி மறைமுகமாக  பட்டியலின மக்களின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறனர்.

இந்தியா முழுவதும் காலம் காலமாக ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மக்கள், உடுக்க உடை, உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அன்றாடம் உழைத்து, பிழைத்து  வருகின்றனர். இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசு கொடுத்த சலுகைகளைக்கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த விளிம்பு நிலை மக்களுக்கு அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நின்று போட்டியிடுவதற்கு எப்பொழுதோ கிடைக்கும் ஒரு வாய்ப்பையும் கூட,  சில சமூக விரோதிகள், பசுத்தோல் போர்த்திய புலிகள் சட்டத்துக்குப் புறம்பாக தன்னை ஒரு ஆதி திராவிடர் என்றும், பழங்குடியினர் என்றும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், சாதி சான்றிதழ் வாங்கி  இந்த மக்களின் அரசியல் உரிமைகளை தட்டிப் பறிப்பதும், பஞ்சமி நிலங்களை அனுபவித்து வருவதும், எந்த விதத்தில் நியாயம்? இது போன்ற சமூக விரோதிகளை வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், இதுபோன்று போலி சான்று வழங்குவதற்கு அரசு அதிகாரிகளும் துணை போகிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. அந்தவகையில் சாத்தூர் ஊராட்சியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த வீரப்பா என்பவர் தன்னை ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்று சான்று வாங்கி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார். இவர் மீது மாவட்ட ஆட்சியரும், துறை சார்ந்த அதிகாரிகளும் விசாரணை செய்து இவரின் சாதி சான்றிதழை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு இதுபோன்று போலி சான்று வாங்கி சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட்டு வரும்  நபர்கள் மீதும், துணைபோகும் அரசு அதிகாரிகளின் மீதும்  விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வஞ்சித் பகுஜன் அங்காடி கட்சி வலியுறுத்துகிறது” என்றார்.

இதுகுறித்து வீரப்பா நம்மிடம், ”நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவன் அல்ல நான் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்தவன்” என்றார். அதோடு, ”நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவன் என்று சான்று வாங்கவில்லை நான் ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்த போது அந்த மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எங்களுக்கு கொட்டா என்று சான்று வழங்கி இருக்கின்றனர்.

அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் கொட்டா என்கிற  பட்டியல் இனத்தைச் சேர்ந்த சாதி சான்றிதழ் வாங்கித்தான் பட்டியல் இன மக்களுக்கான சாத்தூர் தனி பஞ்சாயத்தில் நின்று போட்டியிட்டேன். ஏற்கெனவே, இதே சான்றிதழை வைத்து தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன்.

கூட்டுறவு வங்கியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறேன். என்னைப் போன்றே சென்னையில் கொட்டா பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் தனித்தொகுதி பஞ்சாயத்துகளில் ஐந்து இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதற்கான சான்றையும் நான் சொல்ல முடியும்.
நான் சாத்தூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்தபோது தனி பஞ்சாயத்தில் நிற்பதற்கான என்னுடைய சாதி சான்றிதழ் வழங்கியபோது எல்லாமே சரியாக இருக்கிறது நீங்கள் தைரியமாக நின்று போட்டியிடுங்கள் என்று அதிகாரிகள் என்னை உற்சாகப்படுத்தினர். அதனால் என் மீது விசாரணை வைத்தாலும் அதனை சந்திக்க தயார் என்னிடம் ஆதாரம் உள்ளது” என்றார் வீரப்பா.

இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் எவ்வாறான தீர்வைத் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.