இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, சென்ற வாரம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியாவும் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளதால், இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று, இத்தாலி தலைநகர் ரோம் சென்று மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சென்றனர்.
இதனை தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டபடி போப் பிரான்சிஸை சந்திக்க கிறிஸ்தவர்களின் புனித நகரமான வாடிகனுக்கு சென்ற மோடிக்கு, போப் பிரான்சிஸ் சிறப்பான வரவேற்பு கொடுத்தார். போப்பை மோடி சந்திப்பது முதல் முறையாகும்.
பருவநிலை மாறுபாடு, கொரோனா பரவல், பயங்கரவாத ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, அமைதி மற்றும் சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து போப்பிடம் மோடி பேசினார். சுமார் இருபது நிமிடங்கள் திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது.
வெள்ளியால் செய்யப்பட்ட பிரத்யேக மெழுகுவர்த்தி ஸ்டேண்டை, போப்புக்கு மோடி பரிசளித்தார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகள், யுக்திகள், இலக்குகள் குறித்து விவரிக்கும் புத்தகம் ஒன்றையும் போப்புக்கு மோடி வழங்கினார்.
2019ஆம் ஆண்டில் அபுதாபியில் போப், அல் அசார் கிராண்ட் இமாம் ஆகிய இருவரும் கையெழுத்திட்ட சகோதரத்துவ நல்லிணக்க ஒப்பந்தத்தின் வெண்கல நினைவுத் தகட்டை, மோடிக்கு போப் பரிசளித்தார்.
இந்தியா வருமாறு மோடி அழைத்ததை போப் சம்மதித்ததாக,
ரோம் நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.
போப்பை சந்திக்கும் ஐந்தாவது இந்தியப் பிரதமர் மோடியாவார்.
1955ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த நேருவும், 1981ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, இரண்டாவது போப் ஜான் பாலை சந்தித்து பேசினர். 1997ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ராலும், 2000ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயும் அப்போதைய போப்பை சந்தித்து பேசினர்.
1964ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நற்கருணை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு வருகை புரிந்தார் போப் பால். அவரைத் தொடர்ந்து போப் ஜான் பால் 1986ஆம் ஆண்டிலும், 1999ஆம் ஆண்டும் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
போப்கள் இந்திய வருகையின்போது, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் போன்ற ஹிந்துத்துவ அமைப்புகள், முகம் சுழிக்கின்ற வகையில் கடும் எதிர்ப்புகளை வெளிபடுத்தினர்.
இந்நிலையில், ஃபாதர்களை பாவாடைகள் என்று கேவலமாக விளிக்கும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்பினரின் பேரன்பிற்குறிய மோடி, வாடிகனில் போப்பை கட்டித்தழுவி மகிழ்ந்து, இந்தியாவிற்கு வருகைதர போப்பை அழைத்திருக்கிறார்.
ஒடிஸா மாநிலத்தில் 1999ஆம் ஆண்டில், ஹிந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள்ளைச் சார்ந்த தாரா சிங் தலைமையிலான வெறியர்கள், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஃபாதர் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், அவரது இரு மகன்களான பிலிப், திமோதி ஆகியோரையும், அவர்கள் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரோடு எரித்துக் கொன்றனர்.
தேசிய பாதுகாப்பு முகமையால் பொய் வழக்குப் பதியப்பட்டு மஹாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்ட ஃபாதர் ஸ்டேன் ஸ்வாமி, பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு நெடும் சட்டப்போராட்டத்தின் விளைவாக, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார். ஸ்டேன் ஸ்வாமி உயிர் நீத்தார் என்பதைவிட, அரச பயங்கரவாதத்தினரால் கொலை செய்யப்பட்டார் என்பதே சரி.
இப்படியாக நாடு முழுவதும்
பல ஃபாதர்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளனர்.
மோடியின் அழைப்பை ஏற்று போப் பிரான்ஸிஸ் இந்தியா வருகை தந்தால், கிறிஸ்தவர்கள் தங்களின் மத ஒடுக்குமுறைகளை அடக்குமுறைகளை வேதனைகளை, உயிருக்கு உத்தரவாதமற்ற நிலைமைகளை, குறிப்பாக, இந்தியாவில் கொடுங்கோலர்களாக செயல்படும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பயங்கரவாதங்கள் குறித்து போப்பை சந்தித்து வெளிபடுத்த, பொது மேடை அமைத்துத்தர, மோடிக்கு மனமும் திரானியும் இருக்கிறதா…? பொறுத்திருந்து பார்ப்போம்…!
– சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி
Leave a Reply