கன்னடத் திரையுலகின் பிரபல நடிகரும் வீரப்பனால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவருமான ராஜ்குமாருக்கு சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என்ற மூன்று மகன்களில், சிவராஜ்குமாரும் புனித் ராஜ்குமாரும் கன்னட திரை உலகின் பிரதான நடிகர்கள்.
17.03.1975ல் சென்னையில் பிறந்த புனித் ராஜ்குமார், தந்தை ராஜ்குமாரின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதுவும் ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே
பிரேமத கனிகே, ஆரத்தி ஆகிய கன்னட படங்களில் நடித்து, தனது திறமையை வெளிபடுத்தினார்.
பெட்டத ஹ§ என்ற படத்தித்தில் நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். 2002ல் அப்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
நாற்பத்தொன்பது படங்களில் நடித்துள்ள புனித ராஜ்குமார், மத்திய மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இறுதியாக இவர் நடித்த யுவரத்னா திரைப்படம், கடந்த ஏப்ரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்,
பெங்களூருவின் தசாசிவநகரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் புனித் ராஜ்குமார் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவரை வசந்தநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு நின்றுவிட்டது. இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை.
நாற்பத்தாறு வயதேயான புனித் ராஜ்குமார் இறந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி, பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலை நோக்கி,
கொட்டும் மழையையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பெங்களூரு மட்டுமின்றி சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை கர்நாடக மாநிலம் முழுவதிலுமிருந்தும் வந்த மக்கள், விடிய விடிய நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி, கண்ணீர்விட்டுக் கதறினர்.
கட்டுக்கடங்காத மாபெரும் மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் பணியில், ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
புனித் ராஜ்குமார், சிறந்த நடிகர் என்று மட்டுமே தெரிந்திருந்த நிலையில், அவர் இப்பேற்பட்டவரா என்று ஆச்சரியப்படும் வகையில் வாழ்ந்தது, அவரது இறப்பிற்கு பிறகுதான் உலகிற்கு வெளிச்சமாகியிருக்கிறது.
மைசூரில் சக்தி தர்மா என்ற சேவை அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் ஏழை எளியவர்கள் பயனடையும் வகையில், தனது சொந்த செலவில் இலவசமாக நாற்பத்தெட்டு பள்ளிகளையும், இருபத்தாறு ஆதரவற்றோர் இல்லங்களையும், பதினாறு முதியோர் இல்லங்களையும், ஆயிரத்தி எண்ணூறுக்கும் மேலதிகமான மாணவ, மாணவியருக்கு கல்வியையும், பத்தொன்பது பசு பாதுகாப்பு கோசாலைகளையும் ஏற்படுத்தி சப்தமில்லாமல் சேவையாற்றிய புனித் ராஜ்குமார்,
இறந்தும் தனது இரு கண்களை தானமாக வழங்கி, மாமனிதனாகிருக்கிறார்.
புனித் ராஜ்குமார் மறைவை தாங்கிடாமல், லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது, அவர் வெறும் சினிமாவில் நடித்ததற்காக மட்டுமல்ல,
திரையில் நடிக்கிறோம் என்ற பெயரில், கோடி கோடியாக சம்பாதித்து ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் எண்ணற்ற டூப்ளிகேட் ஸ்டார்கள் மத்தியில், நிஜத்தில் சூப்பர் ஸ்டாராக மக்களின் பேரன்பு நாயகனாக புனித் ராஜ்குமார் வாழ்ந்தார் என்பதன் அடையாம்.
ஒட்டுமொத்த மக்களை தன்பால் கொண்டுள்ள புனித் ராஜ்குமார் இறக்கவில்லை, மக்களை நேசித்து வாழ்ந்ததன் மூலம் விதையாகியிருக்கிறார்.
– சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி
Leave a Reply