Save 20% off! Join our newsletter and get 20% off right away!

திருவண்ணாமலை நகராட்சி தலைவராகப் போவது யார்?

ஊரக நகர்புற தேர்தலில் ஆன்மீக நகர் திருவண்ணாமலை நகராட்சியில் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போவது யார்? ஆன்மீக நகரம் உஷ்ணமாகி கிடக்கிறது காரணம் இல்லாமல் இல்லை. ஆளுங்கட்சி என்பதால் திமுகவில் முப்பத்தி ஒன்பது வார்டுகளிலும் கடுமையான போட்டி இருப்பதை மறுக்க முடியாது. வேட்பாளர் தேர்வை வார்டுகளில் உள்ள ஒட்டுமொத்த திமுகவினரின் ஒப்புதலோடு பத்து பேர் கொண்ட குழு தேர்வு செய்யட்டும் யாருக்கும் பண உதவி செய்ய முடியாது என்று மந்திரி எ.வ.வேலு சொல்லிவிட்டார் ஒவ்வொரு கவுன்சிலரும் இருபது லட்சம் முதல் நாற்பது லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் வெற்றியை எட்டிப்பிடிக்க, அதன்பிறகு நான்கு கோடி முதல் ஐந்து கோடிவரை செலவு பண்ணும் வாய்ப்பு உள்ளவர்கள் நகரமன்ற தலைவராகலாம் என்கிற நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எங்களுக்கும் கவுன்சிலர் சீட்டு வேண்டும் என்று உரிமை குரல் எழுப்பறாங்க.

முதலில் கவுன்சிலராக ஜெயிக்க வேண்டும் அதன்பிறகு நகரமன்ற தலைவருக்கு பணமூட்டைகளோடு தயாராக வேண்டும் அந்த வகையில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் மைத்துனர் ஆர்.செல்வம் நாலுகோடி கட்டணுமா? அஞ்சி கோடி கட்டணுமா? சொல்லுங்க நான் போட்டிக்கு தயார் என்கிறார். மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி பைனான்ஸ் வைத்திருக்கிறார் இவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜி (எ) விஜயராஜ் ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்ணுகிறார் விஜியும் போட்டியில் முன்னாடி நிற்கிறார். அரசு வழக்கறிஞரும் நகர பொருளாளருமான சீனுவாசன் திமுகவினர், சொந்தபந்தங்கள் உசுப்பேத்த நான் ரெடி என்கிறார். இவர்களுடன் நான் நகர செயலாளராக இருக்கிறேன் நான் இல்லாம எப்படி என்று கேட்டுக் கொண்டே கியூவில் நிற்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் ஏற்கனவே மூன்றுமுறை வாய்ப்பு கொடுத்தீங்க இன்னொரு முறை வாய்ப்பு கொடுங்க என்கிறார். கவுன்சிலர் வேட்பாளர்களையும் தலைவர் வேட்பாளர்களையும் மந்திரி எ.வ.வேலு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் அதிமுக மாவட்ட செயலாளர் என்று திருவண்ணாமலையில் யாராவது சொன்னால்தான் தெரியும் கட்சியோட நிலவரம் அப்படி இருக்கு பெரும்பான்மையான வார்டுகளுக்கு கவுன்சிலர் வேட்பாளர்களை பேப்பர்ல விளம்பரம் கொடுத்துதான் தேடி பிடிக்கணும் அப்படி கஷ்டப்பட்டு நிறுத்தினாலும், அவங்க திமுகவோட கைகோர்க்க தயாரா இருக்காங்க அதையும் தாண்டி கவுன்சிலரும் நானே தலைவரும் நானே என்று சொல்லிகிட்டு அதிமுகவில் நாலுபேர் நகரத்தில சுத்திகிட்டு இருக்காங்க. இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பர்குணகுமார் பைனான்ஸ் வச்சிருக்கார் அதனால ஆசைப்படறார் இளைஞரணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன் காண்ட்ராக்டர் இவருக்கு நகரில் ஆதரவாளர்கள் அதிகம். இவர் கவுன்சிலரா ஜெயிக்கலாம் தலைவராக முடியுமா என்கின்றனர். மறைந்த அதிமுக விஐபி கராத்தே பாண்டுவின் மனைவி ஹேமா பாண்டுவை அவருடைய வாரிசுகள் களமிறக்குகின்றனர். மாவட்டம் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர் என்பதால் வந்த தைரியம் போல! அதிமுகவின் நிலவரம் இப்படி இருக்க அவர்களின் கூட்டணி கட்சியான பாஜகவினர் நாங்களும் நிற்போம் தெரியுமில்ல என்று வார்டுகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். நிலவரம் என்னவோ திமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. மற்றவர்கள் சத்தம் கேட்கவில்லை என்பதுதான் உண்மை.