ஒரு தலைவர் அல்லது பிரபலம் மீது ஏதேனும் வெறுப்பு ஏற்பட்டாலோ அல்லது சர்ச்சை கிளப்பினாலோ அதற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறும் .இன்னும் சொல்வதென்றால் கறுப்புக்கொடி, மறியல் இப்படித்தான் கேள்விப்பட்டுள்ளோம். தமிழக அரசியலைப் பொறுத்தவரை மிகப்பெரிய தலைவர்கள் ஜாம்பவான்கள் கோலோச்சி இருந்தனர். அப்போதெல்லாம் வார்த்தை போர் நடக்கும் உண்ணாவிரதம், கறுப்புக்கொடி என்று பரபரப்பாக இருக்கும். அதே நேரத்தில் வெளிநாடுகளில் புகழ்பெற்றவர்களின் மீது செருப்பு, கழிவுகள் வீசும் கலாச்சாரம் இன்னும் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவர் செய்யும் செயலை அப்படியே பின்பற்றி பலரும் இதுபோன்ற நிகழ்வுகளை செய்து வருவதைப் பார்க்கிறோம் .இது ஒரு
பேஷனாகி விட்டது. சரி எதற்கு இந்த பீடிகை என்று நினைக்க வேண்டாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருடன் சென்றனர். அப்போது எடப்பாடி கார் மீது ஒரு செருப்பு விர்ரென பறந்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு வந்த சசிகலா, தினகரன் ஆதரவாளர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் நடந்த ஒரு சம்பவம் எனலாம். தமிழகத்தில் பெரியார்,காமராஜர், ராஜாஜி , அண்ணா ,கலைஞர் , எம் ஜி ஆர்., இப்படி தலைவர்கள் இருந்தனர். அப்போதெல்லாம் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் எதுவும் நடந்ததில்லை. எம்ஜி ஆர் ஆட்சியில் தாமரைக்கனி சட்டமன்ற உறுப்பினர்தான் இதுபோன்ற அதிரடிகளில் இற ங்கி உள்ளார். இந்த கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி என்றால் ஜெயலலிதா ஆட்சிக்காலம்தான். காரணம் அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைந்து இருந்தது. யாரும் எதிர்த்துப் பேசினால் இதுபோன்ற வன்முறையை அக் கட்சியினர் நடத்தினர்.
சந்திரலேகா, சுப்பிரமணியன் சாமி, மீது செருப்பு, ஆசிட் வீச்சு,முட்டை வீச்சு என்றெல்லாம் வன்முறைகள் நடந்தன. அப்புறம் பலரும் அவமானப்படுத்தப்பட்டனர். விமான நிலையம் வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிமுகவினரால் விரட்டப்பட்டார். இப்படி யார்மீதாவது வெறுப்பை காட்டவும் எதிர்ப்பை காட்டவும் விசித்திரமாகக் கட்சியினர் நடந்துகொள்வது வேதனை தரும் செயல். இதை முளையிலேயே கிள்ளாமல் விட்டதால் மீண்டும் அதே பாணியைச் சிலர் கையில் எடுத்துள்ளனர். அந்த வரிசையில்தான் எடப்பாடிக்கு இப்படி ஒரு அவமானம். அதைவிட அவமான செயல் என்னவென்றால் அனைத்து ஊடகங்களும் திரும்பத் திரும்ப அதே நிகழ்வை படம் பிடித்துக் காட்டியது. இன்னும் சொல்லப்போனால் அவரை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்கள். பொதுவாக வெளிநாடுகளில் இப்ப்ட நடப்பது வாடிக்கை .அதில் சில சம்பவங்கள் மறக்க முடியாதவை. கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ள சில செருப்பு வீச்சுகள் பற்றிப் பார்க்கலாம். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பிரஸ் மீட்டில் பேசியபோது ஜர்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் தனது ஷூவை எடுத்து சிதம்பரத்தை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை.
கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு படித்து வந்த மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பரின் அறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரின் சடலம் சொந்த ஊரான சேலத்துக்கு வந்தபோது அன்று மத்திய அமைச்சராக இருந்த பொ ன் ராதா கிருஷ்ணன் வந்தார்.அந்த சமயத்தில் ஒருவர் செருப்பை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2009ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அன்றைய பிரதமர் மன்மோகன்
மன்மோகன் சிங் மீது ஷூ வீசப்பட்டது. அதேபோல் எடியூரப்பா பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது செருப்பு வீசப்பட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2012ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி டேராடூனில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. ஆனால் அது அவர் மீது படவில்லை.
கடந்த அக்டோபர் 6ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கத்காரி புனே வந்திருந்தபோது, அவர் மீது ஒரு நபர் ஷூவை வீச அவரை மடக்கிப் பிடித்து விட்டனர்.
இதேபோல பீகார் முதல்வர், நிதிஷ் குமார் பாட்னாவில் மக்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சியான ஜனதா தர்பாரில் கலந்து கொண்டார். அப்போது இளைஞர் தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அவர் மீது வீசினார். இதைவிட அடிக்கடி இந்த அவமானங்களைச் சம்பாதித்தவர் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் என்றால் மிகையில்லை. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி லக்னோவில் அவர் மீது ஷூ வீசப்பட்டது. மை வீசப்பட்டது. .இதெல்லாம் நம்ம ஊர் கலாச்சாரம் ஆகிவிட்டது.
ஆனால் வெளிநாட்டில் இது சர்வ சாதாரணம் எனலாம். கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 14 அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், ஈராக்கில் ஒரு பிரஸ் மீட்டில் பேசியபோது ஒரு தனியார் டிவி நிருபர் , தனது ஷூவை எடுத்து புஷ் மீது வீசினார். அது புஷ் மீது படவில்லை .ஈராக் மீதான தாக்குதலுக்கு எதிராக இந்த சம்பவம் நடந்தது .
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு வந்திருந்தபோது, அவரை நோக்கி ஷூக்கள் வீசப்பட்டன. இப்படிப் பல சம்பவங்களை பட்டியல் போடலாம். இதுவா அரசியல் நாகரீகம் என்று கேட்கத்தோன்றுகிறது. எனவே செருப்பு வீச்சு ஒன்றும் இப்போது நடந்ததாகக் கூற முடியாது. அதற்காக வெட்கப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் .இதழ் ஆரம்பத்தில் தடுத்து நிறுத்த வேண்டியதுதான் மீண்டும் இதுபோல நிகழக்கூடாது என்பதே நம் கருத்து.
– எஸ்.ரவீந்திரன்
Leave a Reply