அதிமுகவில் நிலவும் குழப்பத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டதில் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆன கதையாக இருக்கிறது. என்று இரட்டை தலைமை வந்ததோ அன்று முதல் இன்று வரை சர்ச்சையாகத்தான் இருக்கிறது. ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருந்தால் ஆபத்துதான். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.திமுகவில் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு இரண்டு பேர் தோல்வி அடைந்தனர். முதலில் .எம்ஜிஆர் . அடுத்து வைகோ. இருவரும் திமுகவை அசைக்க முடியவில்லை. அதே போல எம்ஜிஆரை எஸ்.டி.எஸ். உள்ளிட்டோர் அசைத்தும் ஒன்றுமே நடக்கவில்லை.
இன்று அதே பாணியில் சசிகலா எவ்வளவுதான் தனியாக முயற்சி செய்தாலும் தொண்டர்களைத் திரட்ட முடியவில்லை.ஒரு விதத்தில் இவரும் நெடுஞ்செழியனும் ஒன்றுதான். மௌனமாகவே இருந்து போக வேண்டியதுதான். இப்போது விஷயத்துக்கு வருவோம்.
அதிமுகவில் ஆள்ஆளுக்குக் கருத்து தெரிவிப்பது தேவையில்லாத விவாதத்தை ஏற்படுத்தும். அந்த வினை இப்போது நடக்கிறது யார் எந்த அணி என்றே புரியாமல் தொண்டர்கள் தலையைப் பிய்த்துக்கொள்கின்றனர். செய்தி தொடர்பாளர் ஜெயக்குமாருக்கும் ,சி.வி.சண்முகத்துக்கும் உள்ள ஒரே கவலை எப்படியாவது சசிகலா உள்ளே .வந்துவிடக்கூடாது என்பதே அவர்கள் வாங்கியது அவர்களுத்தானே தெரியும் இந்த நேரத்தில் ஓ.பி.எஸ். அவ்வப்போது அடிக்கும் காமெடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
இப்படித்தான் கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசியதும், குட்டிக்கதை சொன்னதும். பெருத்த விவாத பொருளாகி விட்டது. குட்டிக்கதை என்றால் ஜெயலலிதா மட்டுமே .அவ்வப்போது கதை விடுவார். அதே போல ஓ.பி.எஸ். சொன்ன கதை இப்போது பெரும்கதையாகி விட்டது .சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், ஓபிஎஸ், இபிஎஸ் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், ‘பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்’ என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி குட்டிக்கதை ஒன்று கூறினார். அதில், தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று தெரிவித்தார்.
பார்த்தார் ஜெயக்குமார், திருந்தி வாழுவது மனிதக் குலத்தின் சிறப்பு. சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது. ஓபிஎஸ் கூறிய கதைக்குக் கண், காது, மூக்கு வைத்து உருவம் கொடுக்காதீர். அந்த கதை பாமரர்களுக்கே பொருந்தும், சசிகலாவுக்குப் பொருந்தாது. சசிகலா விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் உறுதியாகவே இருக்கிறார். சசிகலா இணைப்பு குறித்த அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை கருத்து கூறக்கூடாது, கருத்து கூறினால் அது தவறு என்றார்.எதற்கு இப்படி அவர் பதற வேண்டும் என நெட்டிசன்கள் கிழி கிழி என்று கிழிக்கின்றனர். ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசனை செய்யப்படும் எனக் கூறினார். இது அப்போது சர்ச்சையான நிலையில் இப்போது அவரின் குட்டிக்கதை தொடர் விவாதமாகி உள்ளது. பொதுவாக எதையும் ஓ பி எஸ் பேசினால் அதற்குப் பின்புலம் நிச்சயமாக இருக்கும் . அவரின் கதை அப்படித்தான் பார்க்கப்படுகிறது.அண்ணா சொன்னது போல மறப்போம் மன்னிப்போம் என ஏறக்குறைய அனைவருமே ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.. ஏனென்றால் இப்படியே [போனால் கட்சி காணாமல் போய்விடும் . கட்டையோ நெட்டையோ கழுதை போகட்டும். கட்சியாவது நிலைக்கட்டும் என ஓ பி எஸ் நினைக்கிறார். மிஞ்சிப் போனால் சின்னம்மா காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பாவ மன்னிப்பு கேட்டுவிடுவார்கள் போல் தெரிகிறது. தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போன்று பாஜக, இருக்கிறது. யாராலும் எதிர்த்துக் கருது சொல்ல முடியாத நிலை . இருக்கும் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி அனைவரும் ஒன்றாகி விடுவது என முக்கால்வாசி பேர் இணைகிறார்கள் . இல்லாவிட்டால் ஆளும் திமுக ஆக்டோபஸ் மாதிரி அதிமுகவைச் சுருட்டிக் கொள்ளும். எனவே மன்னிப்பே இப்போது சிறந்த மருந்து .மத்தியில், மாநிலத்தில் எதிரிகள் காத்துக் கிடப்பது கண்கூடு. சசிகலா விஷயத்தில் டெல்லியின் சிக்கினால் கிடைத்த காரணத்தால் ஓ பி எஸ் இப்படிப் பேசுகிறார் என்பது மட்டும் நிஜம். ஏற்கனவே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அன்வர்ராஜா போன்ற மூத்த தலைவர்களை வெளியேற்றிய எடப்பாடி இப்போது என்ன செய்யப்போகிறார் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.அதனால் மன்னிக்க மாட்டாயா என்று சிந்தையில் உதித்ததை யாரிடம் கேட்கிறார் ஓ பி எஸ். என்பது அனைவருக்குமே தெரியும்.
– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்
Leave a Reply