Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பதவி விலகும் மாவட்ட செயலாளர்கள் உடைகிறதா கோகுலம் மக்கள் கட்சி?

கட்சி ஆரம்பிச்சி எட்டு வருஷமாச்சி கட்சியின் மாநில பொறுப்புல தலைவர் சேகரை தாண்டி யாருமில்லை, நிர்வாகிகளை நியமிச்சி முறையா கட்சியை கட்டமைக்கல கட்சிக்கு இதுவரை தனியாக அலுவலகம் இல்லை பொதுச் செயலாளர், பொருளாளர், இளைஞரணி தலைவர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை தன்னுடைய உறவுகளுக்கு கொடுத்து இருக்கிறார் கேட்டால், அவங்க வேலை செய்யமாட்டாங்க நான்தான் வேலை செய்வேன், கட்சியை நான்தான் பதிவு பண்ணி இருக்கேன், விருப்பம் உள்ளவங்க கட்சியில இருக்கலாம் மற்றவங்க வெளியே போகலாம் என்று சொல்ல, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட பதினோரு மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய பதவி விலகலை வாட்ஸ் அப்ல வெளியிட்டு சோஷியல் மீடியா மூலமா வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தி இருக்காங்க, என்ன நடக்குது கோகுலம் மக்கள் கட்சியில்? விசாரித்தோம்.., முதல்ல ஒரு விஷயத்தை சொல்லிடறோம் தலைவர் சேகர் வாட்ஸ்அப்லதான் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்தார், அவர் வழியிலேயே வாட்ஸ்அப் மூலமா எங்களோட பதவி விலகலை அறிவிச்சிட்டோம். இப்ப விஷயத்துக்கு வருவோம்.

சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் ஓட்டல்ல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எட்டு வருடங்களுக்கு முன்பு கோகுலம் மக்கள் கட்சியை துவக்கி வைத்தார் அப்பவே நாங்க எதிர்த்தோம், யாதவர்கள் நிறைந்திருக்கும் கட்சியை, இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் மாதிரி யாதவ சமுதாயத்து தலைவர்களை கொண்டு தொடங்கி இருக்கனும். நாடாளுமன்ற தேர்தல்ல சீட்டு வாங்கி தருவதாகச் சொல்லி எங்களோடு சேர்த்து எட்டு சாதிய அமைப்புகள் ஜி.கே.நாகராஜ் – கொங்குநாடு கட்சி, ராஜ்குமார்- தெலுங்கு தேசம் கட்சி, பி.டி.அரசகுமார் – தேவர் அமைப்பு, ஏ.கே.ராஜன் – அகமுடையர் சங்கம், தாம்பரம் நாராயணன்- பிராமணர் அமைப்பு, முனுசாமி – வேட்டுவர் படை என உருவாக்கி கட்சி துவங்க வைத்தார் டாக்டர் ராமதாஸ்! சாதி கட்சிகள் கூட்டமைப்போட பாஜகவோட கூட்டணி வச்சிக்கலாம்னு சொல்லிட்டு, டாக்டர் ராமதாஸ் மட்டும் சத்தமில்லாம பாஜக கூட போயிட்டார் நாங்களெல்லாம் வேற வழியில்லாம வலுக்கட்டாயமா ஆதரவு கொடுத்தோம்.

சின்னதா ஒரு இடைவெளி விட்டு சென்னையில கூப்பிட்டு, எங்களோடு சேர்த்து எட்டு சாதிய அமைப்புகளையும் கூப்பிட்டு மீட்டிங் போட்ட இராமதாஸ், அன்புமணி முதல்வர், கூட்டணியில் உள்ள அனைத்து சமுதாய கட்சிகளும் மந்திரி பதவிகளை பங்கிட்டு கொள்ளலாம் என்று எங்கள் நாக்கில் தேன் தடவினார். சட்டமன்ற தேர்தலில் எல்லா அமைப்புகளும் மாம்பழ சின்னத்தில் போட்டியிடலாம்னு ஆசைகாட்டினார் நாங்க ஒத்துக்கல, லெட்டர்பேடு கட்சிகளை ஒருங்கிணைத்து புது கூட்டணி ஏற்படுத்தி, இருபத்தி ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் தலைவர் சேகர், அதில பாருங்க இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டது. அதோட சரி! அவ்வளவுதான் தொடர்பு எல்லைக்கு அப்பால போன சேகர், ஒரு வருடத்திற்கு பிறகு மாநில மாநாடு நடத்தலாம்னு சென்னையில மீட்டிங் போட்டார் சமுதாய பிரபலங்களிடம் வசூல் நடந்தது. மாநாடும் மூவாயிரம் பேரோடு நடந்து முடிந்தது. 2021 தேர்தல் நெருக்கத்தில் திருவண்ணாமலையில் மாநாடு நடத்தனும்னு சொன்னார் நாங்க முடியாதுன்னு சொன்னோம் செலவுக்கு பணம் தர்றதா சொல்லிவிட்டு இவர் மட்டும் சென்னையில வசூலை முடிச்சிகிட்டு எங்க தலையில செலவை கட்டிட்டாரு, ஒரு வழியாக மாநாடும் முடிந்தது. தேர்தல் நெருங்க, நெருங்க, திமுகவோட பேசிட்டேன், அதிமுகவோட பேசிட்டேன்னு வாயால வடைசுட்டுகிட்டு இருந்தாரே ஒழிய எந்த கட்சியிலிருந்தும் எங்களை கூப்பிடல, அப்புறம் மாநில இளைஞரணி செயலாளர் செங்கம் ராஜாராம் தலைமையில் அவசர ஏற்பாடாக டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியோடு பேசினோம், இறுதியில் என்ட்ரி கொடுத்த தலைவர் சேகர் கட்சிக்கு அடித்தளமே இல்லாத ஓசூர் தொகுதியை மட்டும் வாங்கி தேர்தலில் 349 ஓட்டு வாங்கி கோகுல மக்கள் கட்சியின் வளர்ச்சியை நிரூபித்தார். மேற்படி ஓட்டுகள் குக்கர் சின்னத்திற்காக விழுந்தவை என்பது வேறு விஷயம்! அப்போதே தேர்தல் தோல்விக்கு முழு காரணம் தலைவர் சேகர்தான் என்று மாவட்ட செயலாளர்கள் கோபப்பட்டனர்.

யாதவர் சமுதாயத்து தொண்டர்களால் உருவான கோகுலம் மக்கள் கட்சியை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாகவும், குடும்ப கட்சியாகவும் நினைக்கிறார். இது யாதவர்களுக்கான கட்சி இல்லை, பொதுவான கட்சி என்கிறார். இவரோட எப்படி நாங்க யாதவர் சமுதாயத்தை மையப்படுத்தி பொதுவாழ்க்கை பயணத்தை தொடர முடியும்?

ஏற்கனவே மாநில மகளிரணி செயலாளர் நடிகை ரஜினி நிவேதா கட்சியிலிருந்து விலகி அதிமுகவுக்கு போய்விட்டார். அவரை தொடர்ந்து மாநில கொள்கை பரப்பு செயலாளர் நடிகர் ஆதவன் நான் கட்சியிலே இல்லனு சொல்லி இரண்டு வருஷமாச்சி, இப்ப, பதினோரு மாவட்ட செயலாளர்கள் இதுவரை பதவி விலகிட்டாங்க, இன்னும் பத்து மாவட்ட செயலாளர்களோட பேசிகிட்டு இருக்கோம் விரைவில் அரசியல் சார்பற்ற புதிய அமைப்பை உருவாக்குவோம் என்கின்றனர். நாம் கோகுலம் மக்கள் கட்சி மாநில தலைவர் சேகரிடம் பேசினோம், கட்சி நல்லா இருக்கு, சிறப்பா செயல்பட்டுகிட்டு இருக்கு, சாதி பெயரைச்சொல்லி நிறைய கட்சிகள் தினமும் உருவாகிகிட்டு இருக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி விலகிய விஷயம் எதுவும் எனக்கு தெரியாது. இதுவரை தகவல் இல்லை என் கவனத்துக்கு வராம கட்சி கூட்டம் நடந்தா… சொல்லுங்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்கிறார். ஆக கோகுலம் மக்கள் கட்சி உடைவதை தடுக்க முடியாது போல நிலவரம் அப்படித்தான் இருக்கு.

– துலாம் இராசிக்காரன்