ஆளுங்கட்சியாக இருப்பதாலோ என்னவோ திமுகவினர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக பிஸியாக இருக்கின்றனர். ஊரக நகர்புற தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்க, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தில் உடன்பிறப்புகள் இருவர் நகரமன்ற தலைவர் வேட்பாளர், கவுன்சிலர் வேட்பாளர்களை விரல் நுனியில வச்சிகிட்டு, தேர்தல் வேலையில பிஸியாகிட்டாங்க, ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகமும், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமுவேல் செல்லபாண்டியனும்தான் அந்த இரட்டையர்கள், வேலூர் திமுக எம்பி கதிர்ஆனந்தின் தீவிர ஆதரவாளர்கள், நகரத்தில் இவர்கள் வைத்ததுதான் சட்டம். வில்வநாதன் எம்எல்ஏவை இந்த பக்கம் வராதீங்க, எல்லாம் நாங்களே பார்த்துக்கறோம் என்று தடுப்பணை கட்டிவிட்டனர். வில்வநாதனோ ஆர்.எஸ்.ஆனந்தனை கூட்டிகிட்டு மாவட்ட செயலாளர் தேவராஜை தேடி போயிடறார். எம்.ஆர்.ஆறுமுகமும், சாமுவேல் செல்லபாண்டியனும் சுதந்திரமா அரசியல் பண்றாங்க, கவுன்சிலர் வேட்பாளர்களை ரெடி பண்ண கையோடு தலைவர் வேட்பாளரையும் தேடி கண்டுபிடிச்சிட்டாங்க நூறு லாரிகளுக்குமேல் வைத்திருக்கும் பெரிய தொழிலதிபர் எம்.ஏ.ஆர்.சபீர்அகமது, வைஸ் சேர்மன் எம்.ஆர்.ஆறுமுகம் என்பதையும் முடிவு பண்ணிட்டாங்க, சபீர் அகமதுவை பார்த்து முதல்ல கையில ஒரு கோடியை எடுத்துகிட்டு ஓடியாங்க பாய் உங்களை சேர்மன் சீட்ல உட்கார வைக்கிறது எங்க பொறுப்பு என்று உடன்பிறப்புகள் ஒய்யாரமா கூப்பாடு போட்டு ஆம்பூர் நகரத்தையே அலறவிட்டுகிட்டு இருக்காங்க அதெல்லாம் சரி உங்க மாவட்ட செயலாளர் தேவராஜிக்கு இதெல்லாம் தெரியுமா? இதை நாம் கேட்டோம். இதற்கு பதிலில்லை.
அதிமுக தரப்புல, சேர்மன் வேட்பாளர், கவுன்சிலர் வேட்பாளர்களை வாக்காளர் பட்டியலை கையில வச்சிகிட்டு, தேட ஆரம்பிச்சவங்க நீண்ட தேடலுக்கு பிறகு கவுன்சிலர் வேட்பாளர்களை அடையாளம் காண குறுக்கால புகுந்த பாஜக தங்களுடைய வார்டுகளை தேர்வு செய்து இதெல்லாம் எங்களுக்கு என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த நஜீர்முகம்மதுவை சேர்மன் வேட்பாளராக்க பேசி சம்மதம் வாங்கிட்டாங்களாம். தொழிலதிபர் பெரியதாக செலவு செய்வார் என்பது அதிமுகவினரின் கனவு. வைஸ் சேர்மனாக பாமக விலிருந்து வந்த கருணா ஸ்வீட்ஸ் தமிழருவியை திமுக எம்.ஆர்.ஆறுமுகத்தோடு மோதவிட்டு, ஜெயித்தால் வைஸ் சேர்மன் என்று சொல்லிவிட்டார்களாம். தமிழருவியும் வார்டுல இனிஷியலா வாக்காளர்களுக்கு இனிப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆம்பூர் நகரத்தில் அதிமுக ரொம்பவும் பலவீனமாக இருப்பதாக சொல்லும் அதிமுகவினர், நகர செயலாளர் மதியழகன் டாமினேஷனை யாரும் விரும்பவில்லை. தேர்தலில் தொடரும் தோல்விகளை, கண்காணித்தால் பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் வெறும் இருபது ஓட்டு, முப்பது ஓட்டு வாங்கி இருக்கும் இப்படி இருந்தா கட்சி எப்படி உருப்படும்? என்று நம்மை கேள்வி கேட்கின்றனர். கூட்டி கழித்து பார்த்தாலும், கூட்டாம கழித்து பார்த்தாலும் நகராட்சி திமுக வசமாகும் என்பதில் சந்தேகமில்லை கோடிகள் புரளப்போவதை தெருக்கோடியில் இருக்கும் வாக்காளர்களும் பார்க்க ஆவலாய் இருக்கின்றனர்.
– இரா.இமயவரம்பன்
Leave a Reply