“உங்கள் நண்பன் யாரென்று சொல்லுங்கள் நான் உங்களைப் பற்றி சொல்கிறேன்” என்று ஒரு பழமொழி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் .
அதை கொஞ்சம் மாற்றி இப்படிக் கூட சொல்லலாம்.
“உங்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் யார் என்று சொல்லுங்கள் உங்களைப் பற்றி நான் சொல்கிறேன்”
என்று கூட சொல்லலாம்.
அப்படி பழமொழியை நிஜமாக்கியவர்
மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறையில் எனக்கு பாடம் சொல்லித் தந்தவர்.
பாடம் மட்டுமா சொல்லித்தந்தார்.
நல்ல வாழ்க்கை படிப்பினையை சொல்லித்தந்தார்.
படிப்போ ,படிப்பினையோ நமக்கு முன்னால் வந்து சந்திக்கும் நேரங்களும் அந்த சந்திப்பில் கிடைக்கும் நபர்களையும் வைத்துதான் என்பது 100% உண்மை .
எனக்கு அப்படி வந்து சேர்ந்தவர் தான்
முனைவர் சரளா ராஜகோபாலன்.
அம்மா என்ற சொல்லின் வடிவம்.
எங்கோ கேள்விப் பட்ட பெயர் தான் என்று நீங்கள் நினைக்கக் கூடும்.
ஆமாம் அவர் நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ் இலக்கியத்திற்கு எழுதியிருக்கிறார்.
40 ஆண்டுகள் தமிழ்ப்பணி
50க்கும் மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும்.
நான் பார்க்கச் செல்கையில்’ நற்றிணை ஓவியங்கள்’, ‘தமிழ்ப் பெருவானில் ஒளிமீன் காட்சிகள் ‘ என்ற இரு நூலைத் தந்தார்.
நான் படிக்கிற போது அவர் அருமையாக தமிழ் இலக்கியத்தை பாடம் நடத்துவார்.
நான் கேட்டால்தானே?
அரட்டை அடிப்பதும், கவனத்தை சிதறடிப்பதும் மட்டுமே வேலை.
கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும் அ்அம்மா சாக்பீசயும் டஸ்டரையும் என் மேல் வீசி எறிவார்.
” ஏன்டா இன்னைக்கு ஒன்னும்
வேற காலேஜ்ல பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி , கட்டுரைப் போட்டி ஒன்னும் இல்லையா ?
தினமும் ஏதாவது சொல்லி விட்டு கிளம்பி போவியே அது மாதிரி நீ முதல்ல கிளம்பு .
நான் கிளாஸ் நடத்தணும். “
என்று கோபத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லுவார்.
நான் இதற்கெல்லாம் அசறுகிற ஆளா என்ன?
அம்மா காலேஜ் பேர காப்பாத்தறதே நான்தான் என்று கெத்து காட்டுவேன்.
உண்மையில் அப்போது நானும் எனது மூத்த மாணவர் புகழேந்தியும் அனைத்துக்கல்லூரிப் போட்டிகளுக்கு அசராமல் செல்வோம்.
அப்போது ஆர் என் ஆர் மனோகர், எழிலரசு , மஞ்சுளா ரமேஷ் , ஆகியோரும் இந்த பட்டியலில் உண்டு.
எங்கள் வகுப்பில் மொத்தம் 7 பேர் தான்.
அந்த ஏழு பேரில் 4 பேர் பெண்கள்.
எங்களுக்கு முன்னால் பெஞ்சில் அமர்ந்து கொண்டு இருப்பார்கள் .
அவர்களின் முதுகுக்குப் பின்னால் நாங்கள் மூன்று பேர் அமர்ந்திருப்போம் .
அருணகிரி நான் இன்னொரு நண்பர்.
பேர் மறந்து போச்சு.
ஒரு சம்பவம்.
ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர், உயர்ந்த குலத்துப் பெண் இருவரும் கேலி செய்துகொண்டே இருந்தார்கள் .
அவர்களைப் பற்றி முதல்வரிடம் போய் ஒரு பேராசிரியர் கம்ப்ளெய்ண்டாக சொல்ல அவர்கள் அடுத்த நாளே திருமணம் செய்து கொண்டு வந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள்.
அப்புறம் என்ன?
வகுப்பில் கேலி கிண்டல் குறைந்து போய் விட்டது.
நான்கு பெண்களில் ஒருவர் இப்படியாக இன்னொருவர் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டு வந்த சீதாலட்சுமி.
சேத்துப்பட்டு பிரிட்ஜ் பக்கம் சொந்த வீடு.
மாமி வேற..
கதையெல்லாம் ்அப்பவே பிரபல அவர் இதழ்களில் எழுதுவாங்க.
மீதி இருப்பது இரண்டு பெண்கள் .
முன் பெஞ்ச் இரண்டு பெண்கள்
பின்னால் இரண்டு ஆண்கள் நாங்கள் .
என்ன செய்வது ?
வேற வழியில்லாமல்
அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டியதாப் போச்சு.
அந்த வகுப்பில் படித்த ஒரு பெண் தோழி பல ஆண்டுகளுக்குப் பின் தி நகர் போஸ்ட் ஆபீஸில் கணினி முன்னால் அமர்ந்து இருந்தார் .சந்தித்தேன் .
மற்றவர் எனக்கு நினைவில்லை.
நீங்காத நினைவு இன்றும் என்று சொன்னால் குடியேற்றம் சிகாமணி .
பொறுப்பான நண்பர். சீனியர்.
எம் ஏ மாணவர்.
ஆனால் நண்பர்.
அவரோடு சேர்ந்து நான் சரளா ராஜகோபாலன் இல்லத்திற்குச் சென்று உரிமையோடு சாப்பிடுவதும் , பேசுவதும், அரட்டை அடிப்பதும் ,வருகிறபோது செலவுக்கு பணம் வாங்கிக் கொண்டு வருவதும் வழக்கம்.
இதில் அம்மாவை மிரட்டி ஆர்லம் போடச் சொல்லி சாப்பிடுவோம்.
சைவத்தை உடைப்பது உணவில் நானே தான்.
வேறு வழியில்லாமல் செய்து தருவார்கள்.
இரண்டு வாரத்துக்கு முன்பாக சரளா ராஜகோபாலன் அம்மாவை வீட்டுக்கு போய் சந்தித்துப் பேசினேன் .
அதிர்ச்சியாக சொன்னார். குடியேற்றம் சிகாமணி சமீபத்தில் இறந்து விட்டார் என்று .
எனக்கு அதிர்ச்சியாகவும் சங்கடமாகவும் இருந்தது .
சிகாமணி என்னை வழிநடத்திய மிகச் சிறந்த விடுதி நண்பர்.
வேடிக்கையான உலகமாய் இருக்கிறது பள்ளித் தோழர்கள் கூட தொடர்ந்து வருகிறார்கள்.
ஆனால் கல்லூரி யில் அப்படி இல்லை .
படிக்கிறபோது உயிர் நண்பனாக இருந்து விட்டு பிற்பாடு வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் போது சிலர் ஓய்வுபெற்ற அதிகாரிகளாகவும் சிலர் இறந்து விட்ட செய்தியாகவும் மாறியிருப்பது காலத்தின் கோலம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இப்போதும் பசுமையாக ஒரு நினைவு.
அம்மாவை எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் .
அதனால் ஒரு காரியம் செய்தோம்.
கவியரங்க மேடைகளில் அவர்களை ஏற்றி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம் .
நான் அப்போது சோவியத் கலாசாரக் கழகத்திலும் ,புஷ்கின் இலக்கியப் பேரவையிலும் தொடர்பு வைத்திருந்ததால் அம்மாவை கேட்காமலேயே கவியரங்கத்தில் கவிதை பாடுகிறார்கள் என்று பெயர் கொடுத்து விட்டோம்.
வீட்டுக்குப் போய்
“நீங்கள் கலந்து கொள்ளப்போகும் கவியரங்கம் “
என்று சொல்லி அழைப்பிதழை தந்தோம் .
அம்மா அதிர்ந்து விட்டார்.'”என்ன நான் கவிதை எழுதுவதா?!’ அதெல்லாம் சரிப்பட்டு வராது “என்று கோபமாய் எங்களை திட்ட ஆரம்பித்து விட்டார் .
நாங்கள் விடுவதாக இல்லை.
“அம்மா எங்களை நீங்கள் உங்களால் எல்லாம் முடியும் செய் என்று எவ்வளவு மிரட்டுகிறார்கள் .நீங்கள் முடியாது என்றால் எப்படி?”
என்று பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொடுத்து கோபமாக நாங்கள் நிர்பந்தம் செய்தோம் .
வேறுவழி இல்லாமல் எழுத ஆரம்பித்து அதை படியுங்கள் என்று நாங்கள் கட்டளையிட
இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது .
ஒரு பள்ளிக்கூட மாணவி போல் பதட்டத்தோடு படித்துக் காண்பித்தார். ஆனால் மேடையில் பிரமாதமாக செய்துவிட்டார் .
எல்லோரும் பாராட்டினார்கள் .
எங்களை திட்டிய அம்மாவின் முகம் -எங்களைப் பார்த்து சிரித்தது .
“நல்ல பிள்ளைகள் போங்கள். நினைத்ததை சாதித்து விட்டீர்கள் “என்று சொன்னார்.
ஆனால் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறோம் .
அம்மா நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி வெளியிட்டார் .
நூற்றுக்கணக்கான மேடைகளைப் பார்த்துவிட்டார் .
பிறகு மாநிலக் கல்லூரி யை விட்டு ராணிமேரி கல்லூரியில் தமிழ்த்துறையில் சேர்ந்தார் .
நாங்களா விடுவோம் ?
அங்கு சென்று அவர்களைப் பார்த்து பேசிவிட்டு வருவதும்,
கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வதும்
என்று எங்கள் பழக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அம்மா தொடர்பு பழக்கம், அன்பு எனது திருமண நேரத்திலும் வெளிப்பட்டது.
சென்னையிலிருந்து கணவர் கவிஞர் மலையமான் அவர்களோடு திண்டிவனம் வந்து ஆங்கிலம் தமிழ் பல்கலைக்கழக அகராதி வாழ்த்தி கொடுத்துவிட்டுச் சென்றார் .
அந்த இரண்டு தடியான நூல்கள் இன்றும் கூட நாங்கள் புரட்டிப் பார்க்கும் அகராதியாக இருக்கிறது .
தாயில்லாப் பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய் தான் என்று சொல்வதுபோல் ,
எனக்குத் தாய் சரளா ராஜகோபாலன் ஆக மாறியது இப்பொழுது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.
அவருக்கு இது தெரியுமா என்றெனக்குத் தெரியாது.
கவிதை எழுத வராது என்று சொன்னவர் பின்னாளில் மேகத்தின் தாகம், நெஞ்சக்கனல்கள்,என்ற இரு நூல்களை எழுதி விட்டார்.
ஆய்வு நூல்கள் சொல்லவே வேண்டாம் .எக்கச்சக்கம் .
அதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் திருவள்ளுவர் வழியில் இளங்கோவடிகள் ,குறுந்தொகையும் திருக்குறளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கட்டுரை தொகுதிகளும் நிறைய .
அதில் ‘இன்சுவைக் காட்சிகள் , உலகம் புகழும் பெண்கள் -குறிப்பாக சிறப்பானவை.
நாடகம் பாரி மகளிர் .
சிறுகதை அம்மா அம்மா ,
குழந்தைகளுக்காக சில நூல்கள் –
‘பாப்பா பாப்பா கதை கேளு ‘ ‘தாத்தா சொன்ன கதைகள் ‘எல்லோரையும் கவர்ந்தவை.
இரண்டு வாரத்திற்கு முன்பு நான் அம்மா சரளா ராஜகோபாலன் அவர்களைச் சந்தித்தேன் .
புத்தகங்களுக்கு இடையே இரண்டு குழந்தைகள் வாழ்க்கையை நடத்துவது போல் இருந்தது .
பாரதிதாசன் எழுதிய முதியோர் காதல் சட்டென பளிச்சிட்டது.
“வாப்பா ராசி வளந்துட்டே “என்று அன்போடு அழைத்து தேநீர் கொடுத்தார்கள் .
பேசிக்கொண்டிருந்தேன்.
ஒரு ஆண் ஒரு பெண் பெற்றெடுத்து இருவரும் தனித்தனியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அம்மாவும் தனது கணவர் எழுத்தாளர் மலையமானும் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு போல் குழந்தை மனதோடு புத்தகங்களுக்கு நடுவே பிரசன்னமாகி என்னோடு பேசிக் கொண்டிருந்தார்கள் .
எனக்கு சிரிப்புதான் வந்தது.
இப்படியும் வாழமுடியும் என்பதற்கு கலிகால சாட்சியங்கள் இவர்கள் .
திருமண அழைப்பிதழ் அச்சிட்டு ஈரம் காய்வதற்கு முன்பாகவே விவாகரத்து என்று கோரிக்கை விடுக்கிற காலம் இது .
நான் பலபேரை பார்க்கிறேன் .
படித்தவர்கள் இரண்டு பேர் ஒத்து வாழ்வது அரிதான காலமாகிவிட்டது .
ஆண் ஆதிக்கம் பெண்ணியம் என்று பேசி பிரிந்துவிட்ட பலரை நான் பார்த்திருக்கிறேன்.
குறை சொல்வதற்காக இல்லை. வாழ்வின் போக்கு அவ்வாறு மாறிவிட்டது.
சேர்ந்து வாழ்கிற எண்ணம் , விட்டுக் கொடுக்கிற குணம் இல்லாது தன்னைப் பற்றி மட்டுமே அதிகமாக யோசித்து நுகரும் குடும்ப காலகட்டம் இது .
“இந்த காலகட்டத்திலும் இப்படி ஒரு காட்சி த் தம்பதிகள் நீங்கள் “என்று சொன்னேன்.
சொல்வது என்ன நிஜமும் அதுகூடத் தான் .
ஒரு வேண்டுகோள்.
சொல்லலாமா என்று தெரியவில்லை.
சரி சொல்லி விடுவோம்.
“எல்லோரும் தன்னைப் பற்றி யோசிக்காமல் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து யோசித்து வாழ்வதே நல்லது “
என்று இந்த நேரத்தில் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
என்னவோ தெரியவில்லை .
இந்த நேரத்தில் ஒரு பாடல் தானாகவே நினைவிற்கு வருகிறது .
“தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்”
தாய் கூடவே வருபவர் மட்டுமல்ல கூடவே சிந்தனையில் வருபவரும்.
சொற்களில் தாயாக இன்றும் இருப்பவர் சரளா ராஜகோபாலன் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை.
நான் வியந்து பார்த்த வண்ணம் குழந்தையின் சிரிப்போடு இன்றும் இலக்கணம் மாறா தமிழ்ப்பண்பாடோடு வாருங்கள் என்று அழைத்து
உபசரித்து அனுப்பும் பண்பை கண்டு கற்கிறேன்.
அம்மா உங்களின் சொற்களில் கசியும் அன்பை அடுத்த தலைமுறைக்கும் நான் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
( தொடரும்)
– ராசி அழகப்பன்
Leave a Reply