Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தமிழ்கத்தில் பாஜக வளர்வதால் ஆபத்து திமுகவுக்கு..? அதிமுகவுக்கா?

பாரதிய ஜனதா கட்சிஇந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது.  இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று.சியாமா பிரசாத் முகர்ஜியால் இந்து தேசியவாத கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங் நிறுவப்பட்டது. பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர்
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ஜ.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி  தலைமையில் ஆட்சி அமைத்தது.காங்கிரசுக்கு மாற்றாக மக்கள் மத்தியில் பாஜக வளர்ந்தது. தற்போது மோடி தலைமையில் இரண்டாம் முறையாக ஆட்சி கட்டிலில் உள்ளது. பாஜகவை பொறுத்தவரை மதவாத கட்சி என்ற முத்திரை இன்னும் நிலவுகிறது. எத்தனை சமாதானம் செய்ய முயன்றாலும், அந்த பெயரை இன்னும் அழிக்க முடியவில்லை. இந்தியாவின் முக்கால் பங்கு மாநிலங்களில் ஏறுகொண்டாலும், தமிழகத்தில் மட்டும் இன்னும் பாஜக முழுதும் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக திராவிடக்கொள்கைகள் நிறைந்த தமிழக மக்களிடம் இந்துத்வாவை ஏற்கும் பக்குவம் வரவில்லை. அதே நேரத்தில் சாதுரியமாக தனது இருப்பை காட்ட கடும் போராட்டங்களை சந்திக்கவேண்டியுள்ளது .முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே தங்களின் அரசியல் பகையை வைத்தே பாஜக
மீது தொடர்பு வைத்துக்கொண்டனர்.
தமிழ்கத்தில் பாஜக வளர்வதால் ஆபத்து திமுகவுக்கு..அதிமுகவுக்கா ?
என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. முதன்முதலில் தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்களாக இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், லட்சுமணன், பொன் .ராதாகிருஷ்ணன்,எச்.ராஜா, இப்படி பலரும்  பதவிகளில்  இருந்தனர். ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு  கடும் ஆதரவு அளித்தார். உயர் சாதிகளின் கட்சி என்பதால், பிராமண சமுதாய தலைவர்கள் அதில் இனைந்தனர். இப்படி அவர்களுக்கான கட்சி என்ற முத்திரை இன்னும் உள்ளது. அதே சமயத்தில் தென் மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்கள் பலர் பாஜகவில் இணைத்துள்ளனர். காரணம், இந்துமத ஆதரவு, கடவுள் ஆதரவு  அதிகம் இருப்பதுதான். இப்படி  வளர்ந்த காலத்தில் பெரியார் மண்ணில் இவர்களுக்கு இடமில்லை என திராவிட இயக்கங்கள் கூறி வந்தன. அதை முறியடித்த பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதியை சாரும். ஜெயலலிதா நம்ப வைத்து வாஜ்பாய் அரசை கவிழ்த்தார். அப்போது திமுக ஆதரவு அளித்த காரணத்தால்,  மீண்டும் பாஜக ஆட்சி வந்தது. தமிழகத்தில் மத்திய அமைச்சராக முரசொலி மாறன், டி .ஆர்.பாலு இருந்தனர். சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என திமுக கூறினாலும், ஒரு அஜெண்டா வடிவமைத்து அதன் அடிப்படையில் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததாக கருணாநிதி விளக்கம் அளித்தார். அப்படி காப்பற்றிய கருணாநிதியை பாஜக ஒரு கால கட்டத்தில் வெறுத்தது .மீண்டும் ஜெயலலிதாவை ஆதரித்தது. இப்படி திராவிட இயக்க ஆதரவுகளை பெற்று மாறி மாறி பாஜக சவாரி செய்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்னும் வசதியாக போய் விட்டது .மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதும் தமிழகத்தில் அக்கட்சிக்கு ஒரு பலம் எனலாம். பாஜக இந்த அள்வுக்கு வளர்ந்துள்ளது என்றால்  இயக்கங்கள்  தங்களை காப்பற்றிக்கொள்ள அவர்களாகவே அளித்த வாய்ப்பு. தமிழகத்தில் பாஜக  நெடுங்காலம் பயணம் செய்தாலும் பெரிதான வளர்ச்சி இல்லை. ஆனால்  முதல்முதலாக குமரி மாவட்டத்தில் மட்டும் வேலாயுதம் என்பவர் பாஜக எம் எல் ஏ வாக வெற்றிபெற்று அதிர்ச்சி அளித்தார். மேலும் கோவை மாவட்டமும் அக்கட்சிக்கு கூடுதல் ஆதரவை அளித்துள்ளது .எனவே பல்வேறு தலைவர்கள் பொறுப்பு வகித்தாலும் வளர்ச்சி பெரிதாக இல்லை. அந்த நேரத்தில்தான் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மகள் தமிழிசை பாஜக மாநில தலைவராக  நியமிக்கப்பட்டார்.தென்மாவட்ட நாடார் சமுதாய மக்களை குறிவைத்து அவர் கட்சியில் பொறுப்புக்கு வந்தார். காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் தெரிந்தே வேண்டுமென்றே  தமிழகத்தில் பாஜகவை வளர்த்தனர் .இவர்கள் இரட்டைவேடம்  அம்பலமானது. தமிழிசை தினம் ஒரு பேட்டி ,பேச்சு என்று மீடியாவில் அடிக்கடி  தோன்றினார். இதை பலரும் கிண்டல் செய்தனர் . ஆனால்  அவர் அதை கண்டுகொள்ளாமல் அரசியல்  செய்தார்.ஓரளவுக்கு நல்ல பெயரை டெல்லியில் பெற்றார். தற்போது அவருக்கு கௌரவமான பதவியை அக்கட்சி அளித்தது. இந்த நேரத்தில் அருந்ததியர்கள் வாக்குகளை குறி வைத்து எல்,முருகனை தலைவராக பாஜக நியமனம் செய்தது.
இவர் திமுக மீது கடும் வசவுகளை விடாமல் பேசி வந்தார். அண்ணா அறிவாலய நில விவகாரத்தில் இவர் பாஜக மேலிட நம்பிக்கையை பெற்றார். அப்புறம் வேல்யாத்திரை ,திராவிட இயக்கத்தை வம்புக்கு இழுப்பது என்று செய்து வந்தார். இதனால் அவருக்கு பெயரும், கட்சி வளரவும் உதவியது. வானதி சீனிவாசன் போன்ற நல்ல தலைவர்கள் இருந்தும் அவரை பாஜக புறக்கணித்தது. இப்படி செயல்பட்ட முருகன் மீது டெல்லியின் கருணை பார்வைபட்டது. அவர் மத்திய அமைச்சராகி விட்டார். அவரைத் தொடர்ந்து அண்ணாமலை தற்போது தலைவராக இருக்கிறார். இவரும்  ஓரளவுக்கு பேசுகிறார். ஆனால்,  மக்களை பெரிதாக கவர முடியவில்லை. எனவே இவருக்கும் மத்தியில் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம் பாஜக கூட்டம் என்றால் 10 பேர்தான் வருவார்கள். இபோது 200 பேருக்கு மேலாவது வருகிறார்கள். அத்தத்துடன் கொடி  கட்ட ஆளும் உள்ளனர். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்களை திரட்டி கூட்டம் கூட்டும் வித்தையை கற்றுக்கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் அவர்களுக்கு வளர்ச்சி உள்ளது. இதற்கு முழு காரணம் அதிமுக எனலாம். ஜெயா மறைவுக்கு பின் நடந்த கூத்துக்களை அறிவோம். ஓபிஎஸ் ,இ பி எஸ் அனா இருவரும் வசமாக பாஜகவின் வலையில் விழுந்து தவித்தனர். அதை பாஜக நன்கு பயன்படுத்திக்கொண்டது.
எந்த மண்ணில் பெரியார் பிறந்தாரோ அதேமண்னில் பாஜக வளர இரு திராவிட இயக்கங்களும் உதவி இருப்பது கண்கூடு. வளர விடமாட்டோம், வளராது என சொல்லி சொல்லியே இன்று 4 எம் எல் ஏ க்கள் வெற்றிபெற்று சட்டசபைக்கு சென்றும் விட்டனர். அதிமுகவில் இருந்து ஒரு குழு பாஜகவில் இணைந்துள்ளது.விரைவில் மிச்சம் சொச்சம் உள்ளவர்களும் அங்கு சென்று விடுவார்கள். அந்த கட்சி கதி அதோகதிதான். சரி அதிமுக இப்படி சிக்கியுள்ள நிலையில் திமுக நிலை எப்படியென பார்க்க  வேண்டும்.ஆட்சியில் இருப்பதால் திமுக தப்பித்து வருகிறது. இல்லாவிட்டால் அவர்களையும் பாஜக உண்டு இல்லை என செய்து விடும் அபாயம் உள்ளது. எனவே பாஜக வளர்ச்சியால் இரு கட்சிகளுமே பாதிக்கும். இதில் முதலிடம் அதிமுகவுக்கு. எனவேதிமுக் கவனமாக காய் நகர்த்திவருகிறது.அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு பாஜகவில் உள்ளது. எப்படியோ தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற பாஜக எதுவும் செய்யும். திராவிட இயக்கங்கள் என்ன செய்யபோகின்றன என பார்ப்போம்.
————–
– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்