கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி நடந்தது. கட்சிக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. அதனால் தேர்தலில் படு தோல்வி அடைந்தது. இந்த நேரத்தில் திமுக மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. சொன்னபடி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. தொடக்கத்தில் கொரோனா, மழை வெள்ளம் என்று சவாலான நேரத்தில் முதல்வர் சாதுரியமாக நிலைமையை சமாளித்தார்.பிறகு ஒவ்வொரு திட்டங்களாக செயல்படுத்தி வருகிறார். இந்த நேரத்தில் ஏழைகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்கவில்லை, பொங்கல் பரிசு வழங்கவில்லை, ரேஷனில் பொருள்கள் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது. தொடர்ந்து பெண்களுக்கு மதம் 1000 வழங்கவில்லை என அதிமுக புகார் கூறி திமுக ஆட்சி மீது சேற்றை வாரி வீசி வருகிறது. இருக்கற குறைகளை களைய வேண்டியது முதல்வரின் கடமை . இந்த நேரத்தில் ஆட்சிக்கும். மக்களுக்கும் இடையில் பாலமாக இருப்பது ஊடகம் .எனவே பத்திரிகையாளர்களை மதிக்கும் முதல்வரின் கவனத்துக்கு சில கேள்விகளை முன் வைக்க கடமை பட்டுள்ளோம்.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கோரிக்கை நிறைவேற்றப்படும். அதனால் தான் தலைவரின் கோபாலபுரம் வீட்டைத் தேர்வு செய்தேன். சொல்வதைச் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன். கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற எனது நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும் என்று முதலவராக உள்ள ஸ்டாலின் தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார். தற்போது நாட்கள் கடந்து விட்டது.பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு என்ற இலக்கில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இது கடந்த ஆகஸ்ட் மாத நிலவரம்! அதற்பிறகு இந்த திட்டத்தின் நிலை என்ன ?இதற்க்காக் தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டார். இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது , சார் 100 நாள் மனு கொடுத்தோம். பெற்றுக்கொண்டோம் என்று மட்டும்தான் பதில் வந்தது. அதன்பிறகு அது குறித்த நடவடிக்கை என்ன என்று இதுவரை தெரியவில்லை.. என்றார். தமிழகம் முழுதும் இதுவரை எத்தனை பேர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று தெரியவில்லை . இது ஒருபுறம் இருக்க மக்கள் குறைகளை களைய பொதுவாக இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று இன்னும் புலப்படவில்லை. தமிழகத்தில் அரசியல்வாதிகள் மீதான புகார்கள் என்ன? அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுவரை திமுக அரசின் நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக பத்திரிகைகள், அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மறுக்கவில்லை. ஆனால் மக்கள் மனதில் உள்ள குறைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் . ஆரம்பத்தில் ஜெட் வேகத்தில் இருந்த நடவடிக்கை இன்று ஆமை வேகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.அதிலும் அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் இன்னும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் நிலை தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் இன்னும் காட்சிகள் மாறவில்லை. அதிக பணம் இருந்தால் மட்டுமே அரசு காரியங்கள் நடக்கின்றன. இதை அப்பாவி மக்கள் வெறுக்கின்றனர். அரசின் திருமண உதவி, கர்ப்பிணிகளுக்கு உதவி, முதியோர் உதவி, இன்னும் ஏராளமான அரசுத் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது..
இதை பெற அதிகாரிகள் மட்டத்தில் குறைந்த பட்சம் குறிப்பிட்ட தொகை கொடுத்தால் மட்டுமே அந்த சலுகையை பெற முடிகிறது. இதை யாரும் மறுக்க முடியாது. நேரில் நிரூபிக்க முடியும். இதுபோலவே வருவாய்த்துறை அலுவலகங்களில் அனைத்து பணிகளுக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே தீர்வு எட்டப்படுகிறது. என்னதான் முதல்வர் நேர்மையாக ஆட்சி நடத்தினாலும், அதிகாரிகள் திருந்தியப்பாடில்லை .எனவே அரசு பணிகளே வேண்டாம். தனியாரிடம் கூட கொடுத்துவிடலாம். தமிழகத்தில் இந்த நிலை மாற முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும்.
– மூத்த பத்திரிகையாளர் எஸ்.ரவீந்திரன்
Leave a Reply