Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சரித்திரம் படைக்கப் போகிறதா நாம் தமிழர் கட்சி

அரசியல் இல்லாமல் நாட்டில் எதுவும் இல்லை எல்லா பிரச்சினைகளுக்கும் பின்னே ஒரு அரசியல் இருந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பல கட்சிகளுக்கு புதிய பாடங்களை கற்பித்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரத்தை வழங்கி இருப்பது மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும்  அங்கீகாரம் வழங்கியிருப்பது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி இருக்கிறது எனலாம். அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில கட்சியின் அந்தஸ்தை பறித்திருப்பதும் இந்த தேர்தலில் தான் நடந்திருக்கிறது.
நாம் தமிழர் என்ற கட்சியை சி.பா. ஆதித்தனார் தொடங்கி அதன் நீட்சியாக அதனை வழிநடத்திச் செல்லக் கூடியவர் சீமான். திரைப்பட இயக்குனராக வேண்டும் என்கிற நோக்கத்தோடு சென்னைக்கு பயணம் செய்து திரைப்படங்களை எடுத்து மக்களை அரசியல் படுத்த வேண்டும் என நினைத்திருந்தாலும் கூட, அது முடியாமல் தோல்வியை தழுவி நேரடியாகவே ஒரு அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்து சீமான் நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து கொண்டு செல்வது அதுவும் புரட்சிகர அரசியலாக தன் அரசியலை கட்டமைத்துக் கொள்வது என்ற நோக்கத்தோடு பயணிக்கிற சீமானுக்கு இந்த அங்கீகாரம் ஒரு வளர்ச்சி பாதியை தடையில்லாமல் தொடர வழி வகுத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை  எல்லோரையும் போல சீமானிடத்திலும் அந்த தாக்கத்தை ஏற்படுத்தியது இதுவும் ஒரு வகையில் சீமானை அரசியலுக்கு கொண்டுவர அடித்தளம் விட்டது என்று சொல்லலாம். இலங்கை இனப்படுகொலையை எதிர்க்கிற எல்லோரையும் தீவிரவாதிகளாகவே பார்க்கிற ஒரு பார்வை இந்திய தமிழக அரசியல் தலைவர்களிடம் இருந்தாலும் மக்களிடம் அந்தப் பார்வை இருப்பதில்லை. அந்த வகையில் இலங்கை இனப்படுகொலையை அம்பலப்படுத்துகிற அவர்களை மக்கள் ஆதரிக்கவில்லை என்றாலும் கூட எதிர்க்க மாட்டார்கள் என்பது தமிழர்களை பொருத்தவரை உண்மை. வைகோ, நெடுமாறன், கொளத்தூர் மணி என பலரும் இலங்கை தமிழர் அரசியலை நீண்ட காலமாக இன்று வரை பேசி வந்தாலும் கூட சீமானின் மொழி எல்லோருக்கும் புரிந்தது. அதே வேகத்தோடு தமிழகத்தில் சீமானின் செயல்பாடு இருக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் எந்த சின்னத்தில் சீமான் நின்றாலும் வாக்களிக்க தயங்கவில்லை என்பதற்கு இந்த தேர்தல் ஒரு உதாரணம்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் விடா முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பயணிக்கிற தலைவர்களில் சீமான் இடம் பிடித்திருப்பது சீமானின் தம்பிகளுக்கு மேலும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். தொடக்க காலத்தில் இந்திய அரசியலில் கோலோச்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போயின தொழிலாளிகளின் உரிமைகளுக்காக தொடங்கப்பட்ட அந்தக் கட்சி சிறு முதலாளிகளுக்கு கூட எதிராக இயங்கியதை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டு முதலாளி கட்சிகளுக்கு ஆதரவளித்து கொஞ்சம் கொஞ்சமாக கம்யூனிஸ்ட் கட்சிகளை காணாமல் போக செய்தனர். அந்த நேரத்தில் முதலாளி, தொழிலாளி எல்லோருக்கும் பொதுவான பிரச்சனையான மொழிப் பிரச்சினையை கையில் எடுத்து திமுக வளர்ந்து வந்ததை யாரும் மறுக்க முடியாது. திமுகவின் அபார வளர்ச்சி நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.
மொழி, இனம் என தனது பயணத்தை தொடங்கிய சீமான் பொருளியல், வரலாறு, அரசியல், அறிவியல், உலக அரசியல் என தனது விரிந்த பார்வையை தமிழ்நாட்டு அரசியல் மீது கொண்டு வந்திருப்பது ஒரு நல்ல முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.”அவ கூட போகாதே அவன் ஒரு பைத்தியம்”என்று ஊருக்குள் சிலரை சொல்லுவார்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த பைத்தியம் என்று சொன்னவன் இயங்கிக் கொண்டே தான் இருப்பான். அவனுக்கு என ஒரு நியாயம் இருக்கும் அதை நோக்கிய தான் அவனது பயணம் அமையும் அதைப் போல தான் முதிர்ந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் கூட சீமானை கண்டு இப்போது அச்சப்படுகிற நேரம் வந்துவிட்டது. இந்த வாக்கு வங்கியை சீமான் எப்படி பயன்படுத்த போகிறார் என்பதுதான் நம் முன்னே நிற்கிற கேள்வி. 2024 எப்படி சில கட்சிகளை புரட்டிப் போட்டதோ அதேபோன்று 2026 சட்டமன்றத் தேர்தல் பல கட்சிகளை புரட்டிப் போடப் போகிறது. சில கட்சிகள் சரித்திரம் படைக்கப் போகிறது. அப்படியான கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் ஒன்று என்பதுதான் உண்மை. இது மட்டும் போதாது சீமான் போன்ற அரசியல் தலைவர்களுக்கு இரண்டாம் கட்ட தலைவர்களையும், அணிகளையும் உருவாக்க வேண்டும் அவர்களை ஜனநாயக முறைப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்கிற அறிவுரையும் சீமானுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. கட்சியை சர்வாதிகாரி போன்று தான் வழி நடத்துவேன் என்று சீமான் அவ்வப்போது சொல்லுவதை கேட்டு இருக்கிறோம் இருக்கட்டும் இல்லையென்றால் கட்டுப்பாட்டை இழந்த கைவண்டி போல ஆகிவிடும் கட்சி என்பதில் மாற்று கருத்து இல்லை. இப்போது கட்சிகள் மட்டும் அல்ல மக்களும் சீமானை கூர்ந்து கவனிக்கிறார்கள். 8.19 சதவீதம் அபார வளர்ச்சி தான் இப்படியே கொண்டு போனால் எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் நிலை நிறுத்த முடியும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. சீமான் முன்னேற்றம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-பா.ஜோதி நரசிம்மன்