பதவி புகழ் பணம் வரும்போது…
தன்னடக்கம் வேண்டும்
– திருச்சி கல்யாணராமன்
பதவி பணம் புகழ் வரும் போது தன்னடக்கம் வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு
மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ராதா தியாகராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது
மாயமான் என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு ஆற்றினார்.
ராமன் கானகம் சென்று முனிவர்களை நமஸ்கரித்து அவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு வணங்கினார்.
அகஸ்தியர் ராமனுக்கு தமிழ் மொழியில் வரவேற்பு கொடுத்தார். அகஸ்தியர் ராமனை எட்டு குணம் சொல்லி போற்றினார். நல்ல மாணவனாக இருந்தால் குருவும் போற்றுவார் என்பதற்கு ராமன் உதாரணம். நாராயணனே அவதரித்திருக்கிறார் என்று ராமனை முனிவர்கள் போற்றியபோது நான் தசரதன் மகன் அவ்வளவுதான் என்று தன்னடக்கத்தோடு ராமர் சொன்னார்.
பணம் புகழ் பதவி வரும்போது நாம் தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும். அதன்படி வாழ்ந்து காட்டியவர் ராமன். அதனால்தான் நாம் அவரை தெய்வமாக வணங்குகிறோம். ராவணன் பொன்மானை அனுப்பி ஏமாற்றி சீதையை கடத்திச் சென்றான். ஜடாயு இராவணனை எதிர்த்து உயிரை விட்டான். இறந்த ஜடாயு உடலை தகனம் செய்து ராமர் கர்மா செய்தார்.
மனிதன், பட்சி, மிருகம் யாருக்கு வேண்டுமானாலும் நாம் இறுதி கர்மா செய்யலாம் என்பதே நம் பெரியோர்கள் வேதத்தில் உணர்த்தி இருக்கிறார்கள். சபரி தந்த பழத்தை ராமர் சாப்பிட்டு வேடர் குலத்தைச் சேர்ந்த அவளுக்கு மோட்சம் கொடுத்தார்.
பக்தி தான் முக்கியம் என்பதை ராமர் காட்டினார். நாமும் ராமனை போல் எல்லோருக்கும் இனியவனாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply