மதுரை, உசிலம்பட்டி அருகே, பள்ளி கட்டிடம் இல்லாததால், மரத்தடியில் மாணவ மாணவிகள் கல்வி பயிலும் அவல நிலை நீடித்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட, மெய்ணுத்துபட்டி சங்கரலிங்காபுரம் கிராமத்தில், கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக அரசு ஆதிதிராவிட நல ஆரம்ப்பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளியின் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால், ஓர் ஆண்டுக்கு முன் இந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓர் ஆண்டு ஆகியும் மீண்டும் புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட வில்லை என, கூறப்படுகிறது.
இதனால், இப்பள்ளியில் பயிலும் சுமார் 66 மாணவ மாணவிகள் மரத்தடியில் கல்வி பயிலும் அவல நிலை நீடித்து வருகிறது. புதிய கட்டிடம் கட்டித் தர பலமுறை ஆதிதிராவிட நலத்துறையிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கைகளும் இல்லை.
மழைக் காலங்களில், மாணவ மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் பள்ளிக் கட்டிடம் கட்டித் தர நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
– நா.ரவிச்சந்திரன்
உசிலம்பட்டி-பள்ளி கட்டிடம் இல்லை,மரத்தடியில் கல்வி பயிலும் அவலம்?
