புளோரன்ஸ் நைடிங்கேல்
குடியரசுத் தலைவர் விருது பெற்ற குமரிப்பெண்
மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலஸ் புளோரா
இந்திய இராணுவத்தின் செவிலியர் சேவைப் பிரிவில் தமிழகத்திலிருந்து முதன் முறையாக மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று டெல்லி தலைமையகத்தில் கூடுதல் டைரைக்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் இக்னேசியஸ் டெலஸ் புளோரா அவர்களுக்கு சிறந்த செவிலியர்களுக்கு, மேதகு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது 11 செப்டெம்பர் 2024 அன்று வழங்கப்பட இருக்கிறது.
இக்னேசியஸ் டெலஸ் புளோரா, கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு ராஜாவூரில் 05-01-1965 அன்று பிறந்தார். தந்தை பெயர் லூர்துசாமிப் பிள்ளை, தாயார் பெயர் தெரசம்மாள். ராஜாவூர் மிக்கேல் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய புளோரா அவர்கள் அதன் பின்னர் குமாரபுரம் தோப்பூர் அரசு மேல் நிலைப் பள்ளி மற்றும் நாகர்கோவில் சிறுமலர் மேல் நிலைப்பள்ளிகளிலும் கல்வி பயின்றவர். மூத்த சகோதரர் அந்தோனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்திய இராணுவ செவிலியர் பணிக்கு விண்ணப்பித்து தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று தனது பதினேழாவது வயதிலேயே டெல்லி கமேண்ட் மருத்துவமனையில் அமைந்துள்ள இராணுவ செவிலியர் பள்ளியில் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மூன்று ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர் 27-12-85 முதல் இராணுவ செவிலிய அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.
டெல்லி ஆர்மி மருத்துவமனை(ஆர்&ஆர்) மருத்துவமனையில் வார்டு சிஸ்டராகப் பணியைத் தொடங்கிய புளோரா அவர்கள் பின்னர் பயிற்சி அதிகாரியாக, செவிலியர் பள்ளி பயிற்றுனராக, மாணவிகளின் ஒருங்கிணைப்பாளராக, ஜி. டி மேட்ரனாக, பிரின்சிபல் மேட்ரனாக என பல் வேறு பதவிகளில் பெங்களூரு, ஊட்டி வெலிங்டன், பேரேலி, கல்கத்தா. செகந்தராபாத், சண்டிகர், ஜபல்பூர், சென்னை, குவாலியர்,
மும்பை. புனே மற்றும் ஜம்மு கஷ்மீரின் உதம்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் பணியாற்றியவர்.
புனே பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற புனே இராணுவ செவிலியர் கல்லூரியில் பி.சி.பிஸ்சி பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வியின் மூலம் சமூகவியலில் எம். ஏ பட்டமும். முதுகலை பட்டயப் படிப்பில் மருத்துவமனை மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார். பல்வேறு பயிற்சிப் பட்டறைகள், தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்று கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். பல்வேறு கருந்தரங்கு, மாநாடுகள், அமர்வுகள்,பயிற்சிப் பட்டறைகள் மற்றும் உயர்மட்டக் குழுக்களிலும் சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்றுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு
கடந்த முப்பத்தொன்பது ஆண்டுகளாக அவர் செய்துவரும் சிறப்பான, அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளைப் பாராட்டி இந்திய இராணுவ தலைமையகம் மற்றும் மத்திய அரசு இவ் உயரிய பொறுப்புமிக்க பதவியை வழங்கியுள்ளார்கள். இவர் தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் குமரி மாவட்ட முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழக சுற்றுலா துறை அமைச்சருமான ழி.சுரேஷ் ராஜன், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய இராணுவத்தின் செவிலியர் சேவைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் புளோரா அவர்கள் அனைத்து செவிலியர்களின் ஆட் சேர்ப்பு. பணியிட மாறுதல்கள் வழங்குவது, பயிற்சிகள் வழங்குவது, திட்டமிடுதல் மற்றும் மேம்பாடு, கொள்கை முடிவெடுத்தல், இராணுவ தலைமையகத்தின் இதர பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்கும் உயர் மட்ட அளவிலான கூட்டங்களில்
பங்கேற்று தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற முக்கிய பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
புளோரா அவர்களின் மூன்று மூத்த சகோதரர்களும் இரணுவம் மற்றும் இராணுவ சார்ந்த துறைகளில் பணியாற்றியவர்கள். மூத்த சகோதரரான அந்தோனிசாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையிலும் அதன் பின்னர் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது சகோதரரான ஜார்ஜ் ராஜாவும் இராணுவத்தில் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திவிட்டார். இரண்டு மூத்த சகோதரிகள், இல்லத்தரசிகளான அன்னம் ஜோசப் மற்றும் டெய்சி மனோகர்.
புளோரா அவர்களது கணவர் இக்னேசியஸ் ஜோசப் ஜாண் சென்னை, நந்தனம், அரசினர் கலைக் கல்லூரி பொருளியல் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு மைக்கேல் ஜிகன், லூர்து ஜேசன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
– மனோ
Leave a Reply