இருபத்தி ஏழு கவுன்சிலர்களை கொண்ட நகராட்சியில இருபது கவுன்சிலர்கள் எதிர்ப்பு! நகரமன்ற தலைவரை மாத்து, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போறோம்னு மாவட்ட செயலாளரிடமும் அமைச்சரிடமும் முறையிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நான்கு நகராட்சிகளில் ஒன்று செய்யார் திருவண்ணாமலை சமீபத்தில் மாநகராட்சி ஆகிவிட்டது. இப்பொழுது பிரளையம் செய்யார் நகராட்சியில்தான் பத்தொன்பது திமுக, இரண்டு பாமக, இரண்டு அதிமுக, இரண்டு சுயேட்சைகள் மொத்தம் இருப்பத்தி ஏழு கவுன்சிலர்கள் மொத்த மக்கள் பிரதிநிதிகள் நிலவரம் இதுதான்.
தேர்தலின்போது நகரமன்ற தலைவர் வேட்பாளராக நகர செயலாளர் வழக்கறிஞர் விஸ்வநாதனை செய்யார் திமுக எம்எல்ஏ ஜோதி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு இவர்களுடைய ஒப்புதலோடு நிறுத்தினர். குறுக்கு வழியில் பணமூட்டைகளோடு பாய்ந்த மோகனவேல் அறிவாலயம் அறிவித்த வேட்பாளரை தோற்கடித்துவிட்டு நகரமன்ற தலைவரானார். இதனால் வழக்கறிஞர் விஸ்வநாதனை முன்னிலைப்படுத்திய திமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி அவமானம் வருத்தம்.
நகரமன்ற தலைவரானவுடன் மோகனவேல் தனக்கு ஓட்டு போட்ட கவுன்சிலர்களுக்கு தன்னுடைய உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்தார். முதல் வேலையா துணைத் தலைவர் பதவியை ஏலம் விட்டார். மோகனவேலின் ஏலத்தில் சிக்கி சீரழிந்தவர்கள் தீபாவளி பண்டிகை சீட்டு நடத்திய எஸ்.எஸ்.ஏபிஆர், உரிமையாளர்களிடம் சௌந்திரபாண்டியன் என்கிற திமுக கவுன்சிலரிடமும் துணைத் தலைவர் பதவி உனக்குத்தான் என்று தலா ஒரு கோடி, எழுபது லட்சம் என வியாபாரம் பேசிய விஷயங்கள் செய்யார் நகரத்தில் எல்லா திசைகளிலும் முக்கியத்துவம் கொடுத்து பேசக்கூடிய விஷயமாக இருக்கிறது. கடைசியில இப்பொழுது துணைத் தலைவராக இருக்கும் பேபிபாபு ஏறக்குறைய முக்கால் கோடியை இழந்துதான் இந்த பதவியை இழந்திருக்கிறார்.
மோகனவேல் நகரமன்ற தலைவரானவுடன் அரை கோடியில வீடு வாங்கியதையும் அதன்பிறகு அரைகுறை ஒப்பந்த பணிகள், செய்யாத வேலையை செய்ததாக, உயர்ந்து நிற்கும் இருபது சதவித கமிஷன் (உதாரணத்திற்கு எல்இடி பல்பு நாற்பது சதவிதம் கமிஷன்) என பணம் தாராளமாய் புழங்க, சில கோடிகள் வீடுகள் நிலங்களாக அடையாளமாகி இருப்பதாக மோகனவேலின் நண்பர் ஒருவர் கிசுசிசுத்தார். அவரே மேலும் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த பதவிக்கு வர நான் நிறைய செலவு பண்ணிட்டேன். இரண்டு பைசா வட்டி போட்டு மொத்த பணத்தையும் சம்பாதித்த பிறகுதான் உங்களை கவனிப்பேன் அதாகப்பட்டது பங்கு தருவேன்னு சொல்லி திமுக கவுன்சிலர்களை தூரமா தள்ளி வச்சிட்டார். நகராட்சியில எல்லா வகையிலும் வரும் வருமானத்தை அதிகாரிகளோடு பங்கிட்டுக்கொள்வதோடு ஏழு கவுன்சிலர்களுக்கு மட்டும் நாக்குல கொஞ்சம் தேன் தடவிடறார். மோகனவேலோடு ஒத்துவராத கமிஷ்னர் ரகுராமனை டிரான்ஸ்பர் செய்துவிட்டார். இப்போதைய கமிஷ்னர் குமார் எல்லா வகையிலும் ஒத்துப்போகிறார். நகராட்சியில் செக்ஷன் வாரியாக நடக்கிற முறைகேடுகளை கூட கண்டுகொள்வதில்லை. அவ்வளவு நல்லவர்.
ஆளும்கட்சியாக இருந்தும் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாமல் வேடிக்கை பார்க்க வேண்டியதா இருக்கேன்னு பதினைந்துக்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள், ஜோதி எம்எல்ஏ, மாவட்டம் தரணிவேந்தன், அமைச்சர் எ.வ.வேலு வரை ஆறு மாதத்திற்கு ஒருமுறை பஞ்சாயத்தை கூட்டி புகார் வாசிக்க, கவுன்சிலர்களை அனுசரிச்சி போங்கனு சமரசம் பண்ணி அனுப்பறாங்க அவங்க சமரசம் சாம்பார் ரசம் வைக்கறதுக்குகூட லாயக்கில்ல என்பது அப்புறம்தான் தெரியுது. நகரமன்ற கூட்டத்தில முறைகேடுகள் ஊழல்களை பற்றி சுட்டிகாட்டி கேள்வி கேட்டால் வெளியே போன்னு சொல்லிடறார் காஞ்சனா, ஆத்விக்னு இரண்டு புதிய பினாமி ஒப்பந்தக்காரர்களை உருவாக்கி இருக்கிறார்.
கடைசியாக டென்ஷனான நகரமன்ற தலைவர் மோகனவேல், முக்கியமானவர்களுக்கு போக வேண்டியது தவறாம போயிடுது அதனால உங்களுக்கு (பங்கு) தரவேண்டிய அவசியமில்லை என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார். வேற வழியில்லாமல் திமுக கவுன்சிலர்கள் மாவட்டம் தரணிவேந்தனிடம் நகரமன்ற தலைவரை மாத்துங்கன்னு சவுண்டு விட்டிருக்காங்க டெல்லிக்கு போய் வந்திடறேன் எல்லோரையும் உட்கார வச்சி பேசிடலாம்னு உறுதி கொடுத்திருக்கிறார். என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
– வில்வன் வேம்பன் அரசன்
Leave a Reply