கொடிக்கம்ப உரிமையும் நீதிமன்றமும்

அடிப்படை உரிமைகளில் – சுதந்திரம் சார்ந்த உரிமைகளில் முதன்மை உரிமையாக பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 19(1)(a) வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது உரிமையாக சங்கம் அல்லது யூனியன் அமைத்து இயங்கும் உரிமை 19(1)(c) ன் மூலம் இந்திய மக்களுக்கு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு உரிமைகள் உள்ளிட்ட மற்ற அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, இந்திய குடிமக்கள் எவரும் நேரடியாக உயர் நீதிமன்றத்தை உறுப்பு 226ன் கீழ், உச்ச நீதிமன்றத்தை உறுப்பு 32ன் கீழ் நேரடியாக அணுகலாம் என்று இந்திய அரசமைப்பு சட்டம் வழி வகுத்ததால்தான் அதனை இந்திய அர சமைப்பு சட்டத்தின் ஆன்மா என டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறிப்பிட்டார்.

முகப்புரை – ஜனநாயகம்

இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக ஜனநாயகத்தை முன்னி றுத்தி இந்திய மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டம் தான் இந்திய அரசமைப்பு என முகப்புரை விளக்குகிறது. அப்படிப்பட்ட ஜனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு ஒருவர் தான் நினைக்கிற கருத்தை, எண்ணத்தை சுதந்திரமாக, எழுத்து (அ) செய்கை (அ) பதாகைகள் (அ) கொடிகளின் மூலமாகவோ வெளிப்படுத்துகிற செயல்பாடு ஆகும். அடிப்படை உரிமைகளை உறுப்பு 19(2) to (6)ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின் பேரில் கட்டுப்பாடு விதித்து வரையறுக்கலாம் ஆனால் ஒருபோதும் முழுமையாக தடை செய்ய முடியாது என முன்னுதாரண தீர்ப்புகள் உள்ளன.

முன்னுதாரண தீர்ப்புகள்

கொடிக்கம்ப வழக்கும், நீதிபதி தீர்ப்பும்

இந்நிலையில் அரசியல் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கட்சி கொடிக் கம்பத்தினை மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பழங்காநத்தம் ஜெயம் தியேட்டருக்கு எதிரில் வைக்க அனுமதி கேட்டு அது நிராகரிக்கப்பட்டு அதனை எதிர்த்து ஒரு நீதிப்பேராணை வழக்கும் அதேபோல் மதுரையில் விளாங்குடி காமாட்சி நகர் எம்ஜிஆர் மன்றம் அருகில் அ. இ. அ.தி.மு.க கட்சிக் கொடி கம்பம் வைக்க அனுமதி கேட்டு அளித்த விண்ணப்பத்தின் மீது அனுமதி கொடுக்க வேண்டுமென உத்தரவு கேட்டு ஒரு நீதிப் பேராணை வழக்கும் வி.சி.க சார்பில் மதுரை அத்திபட்டு கிராமத்தில் வி.சி.க கொடிக்கம்பத்தை மீண்டும் நிறுவ உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மற்று மொரு நீதிப் பேராணை என மூன்று வழக்குகளை யும் ஒன்றாக சேர்த்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி கடந்த 7/1/2025 அன்று தீர்ப்புக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து, 27/1/2025 அன்று தீர்ப்பு அளித்தார். அதில் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், மற்ற அரசு இடங்களில் வைக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி, இயக்கங்கள், அமைப்புகள் தங்களது கொடிக்கம்பங்களை, உத்தரவிட்ட நாளான 27/1/2025ல் இருந்து 12 வாரங்களுக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் இரண்டு வார கால அவகாச அறிவிப்பு கொடுத்து அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்களை அகற்றிக்கொள்ள உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதே போல் அகற்றுவதற்கு உண்டான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். மேலும் உத்தரவில்

(i) அரசு நிர்வாகம், கட்சி கொடிக்கம்பங்களை வைக்க எந்த அனுமதியும் கொடுக்க கூடாது;

(ii) அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள் அவர்களின் சொந்த நிலத்தில் சம்பந்தப்பட்ட துறையிடம் முறையான அனுமதி வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் அது குறித்து அரசு உரிய விதிகளை இயற்ற வேண்டுமெனவும்;

(III). பொதுக்கூட்டம், தர்ணா, ஆர்ப்பாட்டம், தேர்தல் நேரங்கள் ஆகிய தருணங்களில், அரசியல் கட்சிகள் தற்காலிகமாக தங்களது கட்சி கொடிக்கம்பங்கள் வைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகினால், அனுமதி வழங்கலாம் எனவும் அதற்கு உரிய கட்டணம் வசூலித்து கொள்ளலாம் எனவும்;

(IV). அப்படி தற்காலிக அனுமதி வழங்கி வைக்கப்பட்ட கட்சி கொடிக்கம்பங்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட கட்சிகள், கொடிக் கம்பங்களை அகற்றி கொள்ள வேண்டும், அந்த இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும், ஒரு வேளை கொடிக்கம்பம் நடுவதால் ஏதேனும் பொது இடத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டி ருந்தால் அதனை சரி செய்து அதற்குண்டான தொகையை செலுத்த வேண்டுமெனவும்;

(V) அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மேற்கண்ட அனைத்து உத்தரவுகளையும் பின்பற்ற உத்திரவாதப்படுத்த வேண்டுமெனவும் கட்டளை பிறப்பித்துள்ளார். பொதுவாக ஒரு உத்தரவு போடப்பட்டால், அந்த உத்தரவு அமுல்படுத்தபடவில்லையென நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால், அந்த உத்தரவினை வழங்கிய நீதிபதி ஓய்வு அல்லது வேறு மாநிலத்திற்கு பணி மாறுதல் செய்யப்படாமல் இருந்தால் அவர் முன்பே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பட்டியிலடப்படும். ஆனால் கட்சி கொடிக்கம்ப விவகார வழக்கில் குறிப்பிட்ட நீதிபதி மதுரை கிளையில் இருந்து சென்னைக்கு மாறுதல் ஆகி குற்றவியல் மேல் முறையீடு வழக்குகளை விசாரிக்க நிர்வாக உத்தரவால் அனுப்பப்பட்டுள்ளார்.

மதுரையில் இருந்து சென்னைக்கு மாறுதலாகி வந்த பிறகும், கொடிக்கம்ப வழக்கு அதே நீதிபதியிடம் ‘For Clarification’ என்ற தலைப்பில் பட்டியிலிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, ஏன் இதுவரை தீர்ப்பு 100 சதவீதம் அமுல்படுத்தபடவில்லை என்றும், ஏன் அரசியல் கட்சிகளிடம் கூட்டம் நடத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், வருகிற 02.07.2025 க்குள் தமிழகம் முழு வது உள்ள கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வில்லையென்றால், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என தொடர்ச்சியாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மேற்கண்ட வழக்குகள் பொதுநல வழக்கல்ல, தனி நீதிபதி பொதுநல வழக்கு போல உத்தரவு பிறப்பித்திருப்பது ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு

இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பெ. சண்முகம் அவர்கள் மேற்கண்ட தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராகவும், அதேபோல் ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க கட்சியை சார்ந்த அம்மாசை என்பவர் தாக்கல் செய்த மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த உத்தரவுக்கு எதிராகவும் முறையாக தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. மே மாதம் உயர் நீதிமன்றம் விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே இதைக் காரணமாக வைத்து வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே தமிழகத்தின் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை அகற்ற அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டியதால் மதுரை மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்றக் கூடாதென தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டுமென ஒரு நீதிப் பேரணை வழக்கு 20.06.2025 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு ஏற்கனவே கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டிருப்பதால், அதனைக் காரணம் காட்டி 20.06.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவு 24.06.2025 அன்று வழங்கப்பட்டது. பின்பு உடனே அவசர மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 26.06.2025 அன்று விசாரணைக்கு வந்தது.

இரு நீதிபதிகள் அமர்வின் முக்கிய கருத்துக்கள்

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கினை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரிக்க ஆணையிட்டனர். மேலும், கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் கொண்ட வெவ்வேறு அமர்வு மாறுபட்ட உத்தர வை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கட்சிக் கொடிகம்ப வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் உத்தர வில் தமிழகம் முழுவதிலும் இருக்கிற அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் வைத்துள்ள கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கா மல் பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும், தனியார் இடங்களில் கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென போடப்பட்ட உத்தரவு ஏற்கத்தக்கது தானா என்பதனையும், தனி நீதிபதி ஒரு பொது நல வழக்கு போல இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது சரி தானா என்பதையும் இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். எனவே கட்சி கொடிக் கம்ப வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். தற்போதைய சூழலில், ஏற்கனவே அகற்றப்பட்ட அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை மீண்டும் வைத்துக் கொள்ளலாமா, மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டதால் இது மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பொருந்துமா, அதேபோல் இனி கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற தடை உள்ளதா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. பொதுவாக ஒரு சட்டப் பிரச்சினை குறித்து சம எண்ணிக்கையிலான நீதிபதிகள் மாறுபட்ட முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்ட நீதிபதிகள் அது குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுரை வழங்கியுள்ளது. எனவே இரண்டிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் அமர்வு கட்சிக் கொடிக்கம்ப வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை கொடிக் கம்பங்களை அகற்றாமல் இருப்பது தான் நீதிக்கு உகந்ததாக இருக்கும்.

நீதிமன்றங்கள் அரசுக்கு சட்டம் இயற்ற உத்தரவிடலாமா?

அதோடு மட்டுமல்லாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அரசு மற்றும் தனியர் இடங்களில் அரசியல் கட்சிகள் தங்களது கொடிக்கம்பங்களை வைத்துக் கொள்ள அனுமதி வழங்குவதற்கு புதிய விதிகள் அரசால் வகுக்கப்பட வேண்டுமென கூறியிருப்பது, நீதி மன்றங்கள் சட்டம் இயற்றுங்கள் என நிர்வாகத் துறைக்கு கட்டளையிட முடியாது என பல்வேறு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதால், தனி நீதிபதியின் உத்தரவு கேள்விக்குள்ளாகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள் தமிழகத்தின் பல இடங்களில் கொடிக் கம்பங்களை நிறுவியுள்ளனர். சுதந்திரத்தின் அடையாளம் கொடி, கட்சிகளின் கொள்கை முழக்கங்களை வெளிபடுத்துவது கொடி, எனவே கொடி கம்பங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாமே தவிர தடை விதிக்க முடியாது.

  • பெரணமல்லூர் சேகரன்