Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சோளிங்கரை நாறடிக்கும்மூவர் கூட்டணியின் முறைகேடுகள்…- நடவடிக்கை எடுப்பார்களா…?

உள்ளாட்சி அமைப்புகளால் ஆளுங்கட்சிக்கு தீராத அவப்பெயர்தான் போல, அதிலும் பெண் பிரநிதிகள் கோலோச்சும் ஊர்களில் அதிகமான அவப்பெயர்தான் உதாரணத்திற்கு சோளிங்கர் நகராட்சி! இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நகராட்சிகளுள் ஒன்று சோளிங்கர், இருபத்தேழு கவுன்சிலர்களை கொண்ட நகராட்சிக்கு திமுகவைச் சேர்ந்த தமிழ்செல்வன் தலைவர் இவருடைய கணவர் அசோகன் திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். துணைத் தலைவர் வேண்டா பழனி பழனிநாதன் துணைத் தலைவர் வேண்டா என்பது அவருடைய மனைவி பெயர் வேண்டா பெயரைச் சொன்னால்தான் பழனி பெயரே உள்ளூரில் தெரியுது. கன்னியப்பன் என்பவர்தான் கமிஷ்னர், வழக்கம்போல தமிழ்செல்வி டம்மி தலைவர் ஆக்டிங் தலைவர் அசோகன்தான் தமிழ்செல்வி கவுன்சில் மீட்டிங் நடக்கும் போது வருவார். கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அசோகன் பதில் சொல்லுவார் அல்லது துணைத் தலைவர் பதில் சொல்லுவார் அமமுக கவுன்சிலர்கள் எப்பவும் கேள்வி கேட்பாங்க மற்றபடி காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா கோபால் கேள்வி கேட்பார். அமமுக கவுன்சிலர்களை மட்டும் அடிக்கடி கவர் பண்ணிடறாங்க போல, அமுதா கோபாலை எதிலும கண்டு கொள்வதில்லையாம்.

நகராட்சியிலும் சரி சோளிங்கர் நகரத்திலும் சரி அசோகன், கன்னியப்பன், வேண்டாபழனி மூவரும் வலுவான கூட்டணி! மேற்படி கூட்டணிக்கு உள்ளூரில் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும்போதெல்லாம் முகம் சுளிக்கும் அளவுக்கு ராஜமரியாதை! அசோகனும், வேண்டாபழனியும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் யாரையும் கடுகளவும் மதிப்பதில்லை. கமிஷ்னர் கன்னியப்பன் முரட்டு ஆசாமி நகர மக்களிடம் சவுண்டு விடறது, சவால் விடறது, மிரட்டுவது, எல்லா வழியிலும் பணம் பண்ணுவது இவருடைய பிரதான பொழுது போக்கு இதுதான்! சின்ன சின்ன சந்தோஷங்களில் அதிகம் நாட்டம் உடையவரான கமிஷ்னர் கன்னியப்பன் அதற்கு நகராட்சியில் வேலை பார்க்கும் டிரைவர்களை மிரட்டி செய்யச் சொல்லுகிறார் ஒத்துவரவில்லை என்றால் சஸ்பெண்ட் பண்ணிவிடுகிறார் லேட்டஸ்ட் நிலவரப்படி இரண்டு டிரைவர்கள் சஸ்பெண்ட்ல இருக்காங்க, பில்லாந்தி காமாட்சி நகர் வீட்டு பக்கம் முக்கல் முனகல் சத்தம் கேட்குதுன்னு நகராட்சி துப்புறவு பணியாளர்கள் துப்புறவு பணியின்போது சத்தமாகவே பேசறாங்க.

சோளிங்கர் நகரத்தில எந்த டெண்டர் வேலையா இருந்தாலும் அசோகனும், வேண்டாபழனியும்தான் பினாமி பெயர்களில் எடுத்து செய்யறாங்க, வேலைகளில் தரம் இருக்கிறதா என்று கேட்கக்கூடாது பங்கு பரிவர்த்தனைகள் சரியாக நடப்பதால், அசோகன், கன்னியப்பன், வேண்டா பழனி மூவருக்கும்  இதுவரை எந்த மனவருத்தங்களும் ஏற்பட்டதில்லை என்று ஆச்சரியமூட்டுகிறார் நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவர். பேரூராட்சியாக இருந்தபோது குப்பை அள்ளுவதற்கு இருந்த டிராக்டர்கள் திடீரென மாயமாகிவிட்டது. இப்பொழுது அசோகன், வேண்டாபழனி இருவருக்கும் சொந்தமான டிராக்டர்கள் குப்பை அள்ளுது. சும்மா இல்லிங்க எல்லாம் பில்தான்.

வருமான விஷயத்தில் மூவரும் ஒருவருக்கொருவர் ஜென்டில்மேன் பாலிசியை கடைபிடிக்கின்றனர். அதாவது, உனக்கு உண்டானது உனக்கு எனக்கு உண்டானது எனக்கு, கட்சியா முக்கியம் கரன்சிகட்டுதான் முக்கியம் ஆட்சியா முக்கியம் ஆக்கிரமிப்புகள்தான் முக்கியம். இப்படி ரைமிங்கா இருக்குது இவர்கள் செயல்பாடுகள்… அசோகன் வேண்டாபழனி கூட்டணியின் வேலைபாடுகளுக்கு பல விஷயங்கள் சோளிங்கர் நகரில் சாட்சியாக நிற்குது… பஜார் வீதி உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட வீதிகளில் சிமெண்ட் ரோடு போட்டாங்க, பெருக்கினால் புகை மண்டலமாக பவுடர் கிளம்ப அவசரம் அவசரமா சிமெண்ட் சாலைக்கு பெயிண்ட் அடிச்சிட்டாங்க, இந்தவிஷயம் சின்ன பசங்களுக்கு கூட தெரியும்.

நகராட்சி புது பில்டிங்கட்ட சட்ட விரோதமா மின் இணைப்பு எடுக்க, ஷாக் டிப்பார்ட்மெண்ட் ஷாக் ஆயிட்டாங்க. பஜார் பக்கத்தில் தினசரி மார்க்கெட் மாட்டு தொழுவம் டைப்ல கட்டி முடிச்சிட்டாங்க ஒரு மாசம் கூட ஆகல, பூசிய சுவர் உதிறுது. பணம் கொடுத்தவங்களுக்கு மூன்று, நான்கு கடைகளை கொடுத்திட்டாங்க மொத்த கடைகளையும் நான்கு பேர் மட்டுமே எடுத்துட்டாங்க. மார்க்கெட் ஐயப்பன் நகர்ல பார்க் இரண்டு இடத்தில கழிப்பறை கட்டினாங்க, இருபது லட்சத்துக்கு மேல பில்லை போட்டு தீட்டிட்டாங்க, நகரத்தில குப்பை அள்ற டெண்டரை பினாமி பெயர்ல எடுத்து… எடுத்துட்டாங்க. குப்பை கொட்ட இடமில்லை என்று கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை வைக்க, ஐயப்பன் நகர் மலைப்பகுதியில குப்பை கொட்டிக்கச் சொல்லி வாய்மொழி அனுமதி கொடுத்தாங்க, அங்கிருந்த மண்ணை அள்ளி தண்ணி தேங்கற பள்ளத்தில கொட்றோம்னு சொல்லி தனிநபர்களுக்கு வித்து பணம் பண்ணிட்டாங்க. நகராட்சி கடைக்காரர்களிடம் திடீர்ன்னு இருபதாயிரம் வீதம் வசூல் பண்ணி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்காங்க.

துணைத் தலைவர் வேண்டாபழனி தன்னுடைய வருமானத்தை பினாமி பெயர்களில் ரியல் எஸ்டேட்ல முதலீடு செய்ய, அசோகன் ஆந்திரா பக்கம் திருப்பி விட்டிருக்கிறார். பாட்டிகுளம் ஏரியாவுல காம்ப்ளக்ஸ், பழைய போலீஸ் லைன் ஏரியாவுல கட்சி அலுவலகம் என்கிற பெயரில், பஸ் நிலையம் அருகாமையில் சுமதி தியேட்டர் எதிரில் நீர்வரத்து கால்வாய் மீது இரண்டு பிராந்திகடை ஒரு ஓட்டல் உருவாக்கி வாடகைக்கு விட்டிருக்கிறார். மேற்படி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. தக்கான்குளம் அருகில் முப்பது அறைகள் கொண்ட பெரிய லாட்ஜ் கட்ட உள்ளூரில் இருந்து சமூக ஆர்வலர்கள் ஆர்.டி.ஒவு.க்கு புகார் அனுப்ப, அசோகன் உட்பட பனிரெண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் கொடுத்திட்டாங்க, வருவாய்த்துறை  நடவடிக்கை எடுக்கவந்தால் கமிஷ்னர் கன்னியப்பன் முட்டுக்கட்டை போடுகிறார். மேற்படி கட்டுமானப்பணி பாட்டை புறம்போக்கு நீர்வரத்து கால்வாய் இரண்டையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை கட்டுமானப்பணி வேகமாக நடக்குது. என்ன பெட்டி பெட்டியா கட்றாங்க இது எதுக்கும் உதவாது என்று மருத்துவர்கள் புலம்பறாங்க.

நந்தி ஆற்றில் (மதகு) இருபது வருஷமா நகராட்சி குப்பைகளை கொட்றாங்க மலைபோல குவிந்த குப்பைகளை எரிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்பாட்டுக்கு வந்து முறைக்க, குப்பை மேல மண்ணை கொட்டி  மூடிட்டாங்க, இப்படி சோளிங்கர் நகராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகள் திரும்பிய திசையெல்லாம் அடையாளமாய் நிற்குது. நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் குறை சொன்னால் சம்பந்தப்பட்டவர்களை நேரிடையாக பழி வாங்குகிறார் கமிஷ்னர் கன்னியப்பன் ஒரு சைக்கோ போல நடந்துகொள்கிறார் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்தினம் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர், வசதி படைத்தவர். லஞ்சம் வாங்கமாட்டார். தொகுதி நிதியானாலும் சிறப்பு நிதியானாலும் முனிரத்தினம் கமிஷன் வாங்குவதில்லை. அவருக்கு பதிலாக அசோகன் நாங்க ஆளுங்கட்சி அரசியல் பண்ணனும் அதனால கமிஷனை எங்கிட்ட கொடுங்க என்று மிரட்டி வாங்கிவிடுகிறார்.
அசோகன், கன்னியப்பன், வேண்டாபழனி மூவர் கூட்டணியின் முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் போல, துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட அமைச்சர் காந்தி, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் தனலட்சுமி, இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா ஐஏஎஸ் உள்ளிட்டவர்கள் உறக்கம் களைந்தால், மூவர் கூட்டணி முறைகேடுகள் வரம்பு மீறல்கள் மீது நடவடிக்கை வரலாம். உறக்கம் களைவார்களா… நடவடிக்கை வருமா? சோளிங்கர் நகர மக்கள் காத்திருக்கிறார்கள் நாமும் காத்திருப்போம்.

– ஆலவாயர்