தமிழக அரசியல் களத்தில் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என திமுக நிர்பந்திக்கப்படுகிறது என்ற விசயமும்… அதிமுகவில் எடப்பாடியின் தலைமைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற விசயமும்... எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறும் பொது தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைப்பதற்கான முயற்சியை பெரும் தொழிலதிபர்கள் மறைமுகமாக மேற்கொண்டு வருகிறார்கள் என்ற விசயமும்.. எந்த அளவிற்கு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறதோ… அந்தப் பரபரப்பிற்கு குறையாமல் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும் அரசியல் பார்வையாளர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் சாதகமான அம்சங்கள் குறித்து அரசியல் பார்வையாளர்கள் விவரிக்கையில்… தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் சார்பில் பதிவு செய்யப்பட்டது. இதனையே தமிழகம் முழுவதும் பெரும் செய்தியாக்கி விஜயின் அரசியலுக்கு அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் பிள்ளையார் சுழி போட்டனர். அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் தமிழக முழுவதும் இளைய தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது புதிதாக வாக்களிக்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள் இடத்தில் நேர் நிலையான அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் தமிழக முழுவதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து, அவர்களுக்கு சான்றிதழ் + ஊக்கத்தொகை ஆகியவற்றை அளித்து அந்த குடும்பத்தினரின் வாக்குகளை எளிதாக கவர்ந்து வருகிறது.
அதே தருணத்தில் மாணவர்களிடத்திலும் அவர்களது பெற்றோர்களிடத்திலும் இந்த சமுதாயத்தில் எதிர்மறையான விசயங்கள் நிறைய இருக்கும். இருக்கிறது. அதற்கு கஷ்டப்பட்டு பதில் அளிப்பதை விட.. நேர் நிலையான விசயங்களுக்கு மனம் உவந்த ஆதரவை அளிக்க வேண்டும் என்பதுதான் விஜயின் நோக்கமாகவும், லட்சியமாகவும் இருக்கிறது இதனை அவரது உரையும் பறைசாற்றுகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிய இந்தக் கட்சியில் இதுவரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்த துல்லியமான தரவுகள் முழுமையாக சேகரிக்கப்படாததால்.. இவர்கள் தேர்தல் அரசியல் களத்தில் எத்தனை சதவீத வாக்குகளை பெறுவார்கள் என்பதனை அவதானிக்க முடியவில்லை. இருந்தாலும் அண்மையில் தமிழ் திரையுலகிலிருந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கிய மறைந்த தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஏற்படுத்திய தேர்தல் அரசியல் அதிர்வை விட… விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் அரசியலில் ஈடுபடும்போது அந்தக் கட்சியின் அதிர்வலை அதிகமாக இருக்கும் என்பதை மட்டும் அரசியல் பார்வையாளர்கள் துல்லியமாக அவதானித்திருக்கிறார்கள். ஏனெனில் விஜய்க்கு திரையுலக பிரபலம் என்ற நட்சத்திர முகம் இருந்தாலும், அவருடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அவர் காட்டிய திசையில் தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் களத்தில் பணியாற்றி வருவதால் அதற்கான அறுவடை அவர்களுக்கு கிடைக்கும்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியை தொடங்கினாலும்… நடிகர் விஜய் கட்சிக்காக புதிய கொடியை அறிமுகப்படுத்தினாலும்… களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்தாலும்.. தற்போதைய நாற்பது வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் மனதை விஜயால் துல்லியமாக அவதானிக்க இயலாது என்றும், அவர்களின் தேவையை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை ருசித்த இரண்டு கழகங்களால் தான் பூர்த்தி செய்ய முடியும் என்பதாலும், அதையும் கடந்து விஜயின் தமிழக வெற்றிக்கழகம்.. தேமுதிகவை போன்றும் பாமகவை போன்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் போன்றும் ஓர் எல்லைக்கு மேல் வளர்ச்சி அடையாது என்கிறார்கள் அனுபவமிக்க அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக வெற்றி கழகத்தை பற்றி அரசியல் பார்வையாளர்களிடையே இரு வேறு பார்வைகள் இருந்தாலும்… அக்கட்சியின் யதார்த்த நிலை என்ன? எனக் குறித்து அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசத் தொடங்கினோம்.
”தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை தலைவர் விஜயின் சொல் தான் மந்திரச்சொல். அவரது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் இருக்கிறது. தலைவரைப் பொறுத்தவரை அவர் பொதுச் செயலாளரை மட்டும் நம்புவதில்லை. அவருக்காக மெத்த படித்த ஒரு குழுவினர் பின்னணியில் இருக்கிறார்கள். இவர்கள் சென்னை- கோவை- தூத்துக்குடி -திருநெல்வேலி, பெங்களூரூ- மும்பை- சிங்கப்பூர் – லண்டன் – கனடா – ஆகிய இடங்களில் பணியாற்றிக் கொண்டே அவரது குழுவில் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தலைவர் டெய்லி அப்டேடட்டுடன் தொடர்பில் இருக்கிறார்.
மேலும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்காக மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டனர். இதற்காக பொதுச்செயலாளரிடம் பொருத்தமான இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார். முதலில் மதுரை என்றார்கள். பிறகு திருச்சிக்கு மாற்றினார்கள். திருச்சியில் தனியாருக்கு சொந்தமான பிரம்மாண்டமான இடத்தில் பத்து லட்சம் பேர் வருகை தரும் அளவிற்கு மாநாட்டை நடத்த இடத்தை தேர்வு செய்தனர். அந்த மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான அதற்காக உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரோ மாநாடு நடத்துவதற்கான தேதிக்கு முன்னரும் பின்னரும் என மூன்று வார காலத்திற்கு நாளொன்றுக்கு எட்டு லட்ச ரூபாய் வீதம் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை கட்டணமாக கேட்டிருக்கிறார். அத்துடன் மாநாடு தொடர்பாக திருச்சி மாநகராட்சியை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர்கள் ஒரு கோடி ரூபாயை வைப்பு தொகையாக கட்ட வேண்டும். அதற்குப் பிறகுதான் அனுமதி தொடர்பான விசயங்களை பரிசீலிக்க முடியும் என்று சொல்லிவிட்டனர். மாநாட்டிற்காக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளரிடம் தெரிவித்துள்ளனர். அவரும் தலைவரிடம் இந்த செய்தியை கொண்டு போக.. முதலில் தலையாட்டி விட்டு, பிறகு வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
உடனடியாக பொதுச் செயலாளர் பாண்டிச்சேரியில் மாநாட்டை நடத்தலாம். செலவு அவ்வளவு ஆகாது என்று சொல்லி இருக்கிறார். பாண்டிச்சேரியில் மாநாட்டை நடத்தினால் உங்களுடைய செல்வாக்கு தான் உயருமே தவிர தமிழகத்தில் கட்சியை தொடங்கியிருக்கும் எனக்கு என்ன லாபம் கிடைக்கும்? என நேரடியாகவே தலைவர் கேட்டிருக்கிறார். இதனால் பொதுச்செயலாளர் கப்சிப் ஆகிவிட்டார். பிறகு திருநெல்வேலி- தூத்துக்குடி என்று தென்பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் அங்கு நடத்த இடம் தேர்வு செய்ய விரும்பினார். ஆனால் அங்கு இடம் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருந்தது. குறிப்பாக போக்குவரத்து வசதி மற்றும் மாநாட்டிற்காக வருகை தருபவர்களுக்கான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுப்பதில் ஏராளமான இடையூறுகள் இருப்பதை நிர்வாகிகள் எடுத்துரைத்திருக்கிறார்கள். இதனால் மாநாட்டை நடத்துவதற்குள் பெரும் மன உளைச்சலுக்கு தலைவர் ஆளானார்.
இந்நிலையில் இந்த விசயத்தை கேள்விப்பட்ட திமுகவிற்கு எதிரான அரசியல் செய்யும் நபர்கள் .. தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை நடத்துவதற்கு ஆளும் கட்சியான திமுக நெருக்கடிகளையும், குறிக்கீடுகளையும் செய்து வருகிறது என்ற ரீதியில் செய்தியை கசிய விட்டனர். இதற்கு தமிழக வெற்றி கழகத்திற்கு அரசியல் ரீதியான ஆலோசனையை இலவசமாக வழங்கி வரும் சீமானின் அன்புத் தம்பிகளும் அடக்கம்.
இது தொடர்பாக கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் பேசுகையில், ” கட்சியை மாவட்ட அளவில் தொடங்கி விட்டோமேத் தவிர கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. குறிப்பாக திருச்சியில் மாநாடு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான கட்டணத்தை கட்சி சார்பில் வழங்க வேண்டும் அல்லது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அவர்களுடைய சொந்த பணத்திலிருந்து வழங்க வேண்டும். குறிப்பிட்ட அந்த மாவட்ட நிர்வாகி பெரும் செல்வந்தர் அல்ல. இது தொடர்பாக அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி கட்டணத்தினை வெள்ளையாக செலுத்தும் படி கேட்க.. திருச்சி மாநகராட்சியும் ஒரு கோடி ரூபாயிற்கான வைப்புத் தொகையை காசோலையாக கேட்க.. நிர்வாகிகள் கட்சிப் பெயரில் வங்கி கணக்கு இல்லை என்பதை சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக பொதுச் செயலாளரிடம் விசயத்தை கொண்டு செல்ல.. அவர் தலைவருக்கு விசயத்தை சொல்லி இருக்கிறார். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டு தலையை மட்டும் ஆட்டிவிட்டு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாராம்.
அப்போது கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர், ‘:தலைவரே மாநாடு நடத்துங்கள். ஆனால் அதற்கு முன் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் மாநாட்டில் கட்சி கொடியை ரசிகர்கள் தொண்டர்கள் அணிந்து வர முடியும். பிரபலப்படுத்த முடியும்” என்ற யோசனையை முன் வைத்திருக்கிறார். உடனடியாக ஒப்புக்கொண்ட தலைவர் 22 ஆம் தேதி அன்று இதற்காக கட்சியின் தலைமை நிலையத்திற்கு வருகை தந்து கொடியை அறிமுகப்படுத்தி கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கழகத்தின் கிளைகள் சார்பாக கிராமந்தோறும் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
தற்போது விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி எனும் இடத்தில் விஜயின் விசுவாசி ஒருவருக்கு சொந்த இடத்தில் கட்சியின் முதல் மாநாட்டினை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த இடமாவது உறுதி செய்யப்பட்டு மாநாடு செப்டம்பருக்குள் நடத்துவார்களா..’ என்பது கேள்வி குறித்தான் என்கிறார்.
நாற்பது லட்சம் உறுப்பினர்களை கொண்டிருக்கும் தமிழக வெற்றி கழகம் இன்னும் ஒரு மாநாட்டை கூட முழுமையாக நடத்துவதற்கு போதிய அனுபவம் இல்லாததால் திணறி வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இது தொடர்பாக ஆலோசனை சொல்ல வரும் நபர்கள் அனைவரும் பணத்தில் மட்டுமே குறியாக இருப்பதால்.. விஜய் இது தொடர்பாக யாராவது விசுவாசி என்கிற பெயரில் கோடீஸ்வர இளிச்சவாயன் கிடைப்பார் என காத்திருக்கிறார். தற்போது செப்டம்பரில் மாநாடு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் விக்கிரவாண்டி எனும் இடத்தில் மாநாடு நடைபெற்ற பிறகு தான் அல்லது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பின்னர் தான் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணம் தமிழகத்தில் தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதுவரை தமிழக வெற்றி கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத பதிவிற்காக விண்ணப்பித்திருக்கும் ஒரு மாநில அளவிலான அரசியல் கட்சி என்பது மட்டும் தான் நிஜம்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் முன்னெடுக்கும் நேர் நிலையான அணுகு முறையுடன் கூடிய அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லையா? என்பதை காலம் தான் உணர்த்தும் அதைவிட அவர்கள் நடத்தும் முதல் மாநாட்டின் லட்சணத்திலேயே தெரிந்து விடும்.
– கே.வி.ஆர்.கோபி.
Leave a Reply