தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத் தொகுதி திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 20 கிராமங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்த நிதியுமே ஒதுக்கப்படவில்லை ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் புலம்பல் புகார்..
அமைச்சர் பொன்முடி, திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் இடையே உள்ள கோஷ்டி பூசல் காரணமா ? பரிதவிக்கும் 20 கிராமம் மக்கள்.. கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் பிரிக்கப்பட்டு மாலா துயரத்தில் மாட்டி தவிக்கும் மக்கள்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளார். இந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி வருவாய்த்துறை மாவட்ட அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்படி விழுப்புரம் மாவட்டத்திலும் குழப்பமான நிலையில் உள்ளது. இதனிடையே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 20 கிராமங்களும், மேலும் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. மேலும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகையூர் ஒன்றியத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் திருக்கோவிலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்ட அளவில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் ஒன்றியத்தில் உள்ள 40 கிராமங்கள் ரிஷிவந்தியம் தொகுதிகளும், 20 கிராமங்கள் மட்டும் தனித்தீவை போல் திருக்கோவிலூர் ஒன்றிய மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டு உள்ளது. இந்த 20 கிராமங்களில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து 3 ஆண்டுகளில் எந்த நிதியும் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக கிராம ஊராட்சிகளில் புலம்பலாக இருந்து வருகிறது.
இதுகுறித்து அந்த 20 கிராமங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அமைச்சர் பொன்முடியிடம் தங்கள் கிராமத்திற்கு வேண்டிய நிதி ஒதுக்கீடு முறையாக செய்ய வேண்டும் என பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால் அது கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டம் என்பதால் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை என கூறிவருகின்றனர். மேலும் அந்த 20 கிராமங்களும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அவரிடமும் தெரிவித்துள்ளனர் அவர் அமைச்சர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவரும் நமக்கு எதற்கு என கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதாக கூறிவருகின்றனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாத அந்த 20 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கிராமத்திற்கு தேவையான பல்வேறு வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் கூட செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளித்து வருகின்றனர் ஆனால் அந்த 20 கிராமங்களுக்கு தேவையான எந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் விரக்தி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இந்த 20 கிராமங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம் அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகையில் எம்எல்ஏ ஆகியோர் இடையே உள்ள கோஷ்டி பூசல் காரணம் என பலர் கூறுகின்றனர். திமுக எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் கோஷ்டி பூசல் காரணமாக 20 கிராமங்களுக்கு உரிய நிதி பங்கீடு நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த 20 கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்க வேண்டிய அனைத்து நிதிகளையும் முறையாக ஒதுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தங்கள் கிராமத்திற்கு நிதி ஒதுக்காத காரணம் என்னவென்று தெரியவில்லை இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை என விழி பிதிங்கி நின்றனர்.. மேலும் செய்தியாளர்கள் அவர்களை வளைத்து வளைத்து கேள்வி கேட்ட போதும் இது சம்பந்தமாக அமைச்சர் பொன்முடி மற்றும் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனைத் தான் கேட்க வேண்டும் என குழப்பத்துடன் பதில் அளித்து சென்றனர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி பாதி விழுப்புரம் மாவட்டத்திலும், பாதி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராமங்கள் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியிலும், 20 கிராமங்கள் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் சிக்கி திமுக அமைச்சர், எம்எல்ஏ கோஷ்டி பூசலால் மதில் மேல் பூனையாக உள்ளது வெளிச்சமாக தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களை முறையாக வரையறை செய்து அந்த மக்களுக்கு தேவையான நிதி பங்கீடு நிதி ஒதுக்கீடு செய்து கிராம மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
– இரா.நந்தகோபால கிருஷ்ணன்
Leave a Reply