Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சிவப்பு கொடியை உயர்த்தி பிடிக்கும் சி.ஐ.டி.யூ!.-சாம்சங் நிறுவனம் தாக்கு பிடிக்குமா?-தொழிலாளர்கள் வேலை நீடிக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் பன்னாட்டு நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு செல்போன், லேப்டாப், டீவி, குளிர் சாதன பெட்டி உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தொழிற்சாலையில் 1,800 நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் தலையிட்டு போராட்டம் நடத்தி சில நேரங்களில் அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளன.

இதனால் தொழிலாளர்கள் அவர்கள் குரலுக்கு செவி சாய்த்து மற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போது சிவப்பு கொடியை பிடிப்பதற்கு முன் வருகின்றனர். இவ்வாறான செயல்பாட்டில் மீது ஆர்வம் கொண்ட தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இருந்தாலும் கூட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடந்த பல வேலை நிறுத்த போராட்டங்களால் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்து நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் அந் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்து ஆயிரக்கணக்கானோர் வருமானம் இன்றி பெரும் சிரமங்களை சந்திக்க  நேர்ந்தது. அதில் பாதிக்கப்பட்ட மக்கள் தேவையில்லாத போராட்டத்தில் கலந்து கொண்டு வேலை இழந்து விட்டோமே  என புலம்பல் குரல் இன்னும் அவர்கள் குடும்பத்தில் ஒலித்துகொண்டுதான் இருக்கிறது.

தொழிர்களுக்காக குரல் கொடுக்கும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை வரவேற்கலாம். அதே நேரத்தில் தொடர் போராட்டத்தால் தொழிற்சாலை மூடும் நிலை ஏற்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் போது அவர்களுக்கு மாற்று வேலை வாங்கி கொடுக்க முடியுமா? என்ற கேள்வி பொது
மக்களிடம் எழுகிறது.

அந்த வகையில் ஸ்டாண்டர்டு வாகன உற்பத்தி தொழிற்சாலை, நோக்கியா செல்போன் தொழிற்சாலை, சென்னை  பி.அன்.சி. மில் ஆகியவை மூடும் நிலை ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிலை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் 9 ம் தேதி சாம்சங் தொழிற்சாலையில் போராட்டம் துவங்கியது. சி.ஐ.டியூ. தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தராஜன், மாவட்ட செயலாளர் முத்துகுமார் ஆகியோர் இப்போராட்டத்தை வழிநடத்தி செல்கின்றனர்.

தொழிலாளர்கள் நியாயமான ஊதிய உயர்வு குளிர் சாதன பேருந்து வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு சாம்சங் நிறுவனம் பச்சை கொடி காட்டியது.
அதை தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டனர்.

தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் மூன்று அமைச்சர்களை நியமித்தார். அதில் சிறு, குறு தொழில்துறை அமச்சர் அன்பரசன், தொழிலாளர் நல துறை அமைச்சர் கணேசன், தொழில் துறை அமைச்சர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிற்சாலை அதிகாரிகளுடன்  பேச்சு வார்த்தை நடத்தினர். இருந்தும் தொழிற்சங்கம் போராட்டத்தை கைவிட வில்லை.

இதனால் தி.மு.க.  கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது .

இந்நிலையில் வேலைக்கு செல்லாதவர்களுக்கு ஊதியம் கிடையாது என சாம்சங் நிர்வாகம் கூறிவிட்டது.

தொழிலாளர்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டாலும் அரசியல் சார்ந்த  சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அனுமதிக்க முடியாது என நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஆனால் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என சங்கம் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

வரும் 21 ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்ட தொழிற்சாலைகளில்  சி.ஐ.டி.யூ. சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.

இதே நிலை நீடித்தால் உற்பத்தி பாதிப்பைத் கருத்தில் கொண்டு சாம்சங் தொழிற்சாலை தன் நிலைப்பாட்டை மாற்ற நேர்ந்தால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். அந்த நிலை ஏற்படுவதற்கு முன் அரசு சுமூக தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது

– எம்.மாசிலாமணி