தனிமை, ஆதரவுயின்றி,மனநல நோயாளிகள்…அரசு நடவடிக்கை உண்டா?

மனநோயாளிகள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். நினைத்தது நடக்காமல், எதிர்பார்த்து கிடக்காமல், குடும்பம், மற்றும் உறவினர்களால் பாதிக்கப்படும் போதும், காதல் மற்றும் விவஸீகரத்தால் பாதிக்கப்படும் போது உலகில் 97 கோடி மக்கள் மனநல பாதிப்புடன் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பினும் இன்றைய சூழலில் இதனை பற்றி நாம் சிந்திக்க மறந்து போகிறோம். வறுமை, வேலை இன்மை, கல்வி நிலையங்கள், வேலை பணித்தளத்தில் அளிக்கப்படும் அழுத்தம். கலவரம், போர் சூழல். இயற்கை சீற்றம், போதை பழக்க வழக்கம், , கும்மாளம், மது, மாது, இயற்கை சீற்றம், குடும்ப சூழல், நோய் பாதிப்பு, என இதற்கான காரணங்கள் எல்லையின்றி தொடர்கிறது.
உடல்நலனைப் போலவே மனநலமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இதனை கண்டுகொள்ள தவறியதின் விளைவாக நம்மில் 8 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு மனக்கோளாருடன் வாழும் நிலை உள்ளது. இது ஒருவரோடு சம்பந்தபட்டது என நாம் ஒதுங்க இயலாது.2016ம் ஆண்டின் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி மனநல பாதிப்பும் ஒருவகை ஊனமாகவே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 2017ல் மனநல பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதனை செயல்படுத்த உரிய திட்டமும். நிதியும் ஒதுக்காதது கவலை தருவதாகவே உள்ளது.
மனநலப் பாதிப்புகளால் மனித சமூகத்தில் பெருகிவரும் ஆபத்துகளை அநேக நாடுகள் கண்டுகொள்ளாத நிலையில் இதுபற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் அக்டோபர் 10ந்தேதி உலக மனநல நாளாக ஐ.நா சபை அறிவித்து அதனை கடைபிடித்து வருகிறது. மனநல பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது. மனநலக் கல்வி, மனநலம் பேணுவதற்கான ஆதரவை திரட்டுவதே இந்நாளின் நோக்கம் என ஐ.நா தெரிவித்து உள்ளது.
ஆனால் இவ்விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எவ்வித அக்கறையும் செலுத்தாத நிலையில் குறிப்பிட்ட நாளை கண்டுகொள்வதில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மையங்கள் சரிவர இல்லாததால் தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டிய நிலையில் விளிம்புநிலையில் வாழும் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையே உள்ளது.
தீவிர பாதிப்புக்கு உள்ளான நபர்களை சரிவர பாதுகாக்கவோ, சிகிச்சை அளிக்கவோ முடியாததால் சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், தெருக்களில் விடும் நிலை உள்ளது.சமூகத்தின் எதிர்காலம் ஒவ்வொரு தனி மனித ஆரோக்கியத்தில் அடங்கி இருக்கிறது. எனவே ஒவ்வொருவரின் மனநலப் பாதுகாப்பை உறுதிபடுத்திடும் வகையில் தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநலத்திற்கான சிறப்பு மையத்தினை ஏற்படுத்திடுவதோடு குறிப்பிட்ட நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

– பா.மனோகரன்