Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கடந்த 5 ஆண்டுகளாக,வரவு செலவு தீர்மான புத்தகத்தை காட்டாமல்…கோடிகளில் ஊழல் செய்த மாவட்ட ஊராட்சி?

கடந்த ஐந்து ஆண்டுகளாக வரவு செலவு கணக்கு தீர்மான புத்தகம்  காண்பிக்காமல், தீர்மானங்களை நிறைவேற்றாமல் நடந்து முடிந்துள்ளது திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்.  இதில் கோடி கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் மேல்நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அமைச்சர் சாமு நாசர் தயவை நாடி தங்களை பாதுகாத்துக்கொண்டதாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட சேர்மன் உமா மகேஸ்வரி துணை சேர்மன் தேசிங்கு மற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தலிலேயே திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு  இவ்வாறு மாறுபட்ட சரித்திரம் படைத்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஸ்வரி பதவி ஏற்றார். அதேபோன்று துணைத் தலைவராக தேசிங்கு வாகை சூடினார்.

 ஊராட்சி குழு தலைவி உமா மகேஸ்வரி மறைந்த முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான வேணுவின் செல்ல மகள். தற்போது அவர் செல்வ மகளாக மாறியுள்ளார் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 24 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கவுன்சர்களும் உண்டு.

மக்களின் அடிப்படை பிரசனைகளுக்காக மத்திய, மாநில அரசுகள்  வளர்ச்சிக்காக ஊராட்சிக்கு நிதி ஒதுக்கி உள்ளது. இந் நிதியை அனைவருக்கும் சரிசமமாக பங்கு போட்டு கொடுப்பது தான் மாவட்ட ஊராட்சி குழு தலைவி மற்றும் துணைத் தலைவரின் கடமை. ஆனால் அப்படி நடந்ததா? என்று கேட்டால் இல்லை என்று உறுதியாக கூறலாம்.

 மாவட்ட ஊராட்சிக்கு எவ்வளவு நிதி வந்துள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் செயல்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தெளிவு ஏதும் இல்லை.  ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்று பங்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவிக்கும், இரண்டு பங்கு ஊராட்சி குழு துணை தலைவருக்கும் ஒதுக்கி விட்டு தான் இதர கவுன்சிலர்களுக்கு அதிலும் குறிப்பாக திமுக கவுன்சிலர்களுக்கு சற்று அதிகமாகவும், இதர கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு சொற்ப அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் சமமாக பிரித்து தர வேண்டும் என்பதே பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் விதி.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற திட்டங்களுக்கான ஒதுக்கீட்டுக்கான வரவு, செலவு கணக்கு காண்பிக்கப்படவில்லை. மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  அதேபோன்று தீர்மான புத்தகமும் கண்ணில் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இம் மாவட்ட ஊராட்சிக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது என்ற விவரமும் இதுவரை எடுத்து கூறப்படவில்லை.

நிதி எல்லாம் மக்கள் வரிப்பணம் என்று சற்று கூட சிந்திக்காத மாவட்ட ஊராட்சி குழு தலைவி மற்றும் துணைத் தலைவர் இருவரும் தங்கள் விருப்பம் போல நிதியை கையாண்டுள்ளனர்..

மாவட்ட கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்பட்ட திட்ட பணிகள் அவரவர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தான் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி கண்காணிப்பு செய்ய வேண்டியது அவசியம்.

 அதிகாரிகளான ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பொறியாளர்களும் இதை ஆய்வு செய்தார்களா?  கண்காணித்தார்கள்? எனில் கேள்விக்குறியே!

 ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அந்த திட்டத்திற்கான மதிப்பீடு தொகை எவ்வளவு ? என்ன திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பலகை ஓர் இடத்திலும் வைக்கப்படவில்லை.

மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் அமைச்சர் சாமு நாசருக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவி மற்றும்  பொது நிதி ரூபாய் 3 கோடியை வழங்கியதாக துணைத் தலைவர் மாவட்ட கவுன்சிலர்களிடம் புலம்பி தீர்த்துள்ளனர்.

இப்படியாக தனது பங்குக்கு அமைச்சர் சாமு நாசரும் ரூ. 5 கோடிக்கு மேல் பெற்றுள்ளார். இது அரசு கொள்கைக்கு எதிரானது.

 அதேபோன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் மாவட்ட கவுன்சிலரிடம் வலியுறுத்தி சில திட்டங்களை வேலைகளை பறித்து நிறைவேற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மாவட்ட ஊராட்சி நிதி யிலிருந்து பெருந்தொகையை பெற்று கும்மிடிப் பூண்டி ஊராட்சியில் திட்டங்களை செயல்படுத்தியதாக கூறி பல கோடிகளை சுருட்டியுள்ளார் உமா மகேஸ்வரி.

அதேபோன்று துணைத் தலைவரும் தனது பங்குக்கான நிதியைப் பெற்று அவர் பகுதிக்கு ஒன்றும் செய்யாமல்  பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த  அதிமுக கவுன்சிலர் பாண்டுரங்கனுக்கு 20 சதவீதம் கமிஷன் பெற்றுக் கொண்டு அனைத்து வேலைகளையும் தாரை வார்த்து கொடுத்துள்ளார்.

 அந்த பாண்டுரங்கன் ஆவது வேலை செய்தாரா என்று பார்த்தால் அவரும் வேலை செய்யாமல்  கொடுத்த 20 சதவீதத்தை விட மேற்கொண்டு 10 சதவீதம் வைத்து பிறருக்கு விற்று சிறந்த அரசியல்வாதியாக பெயரெடுத்துள்ளார் பெயர் எடுத்துள்ளார்..

மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு திமுகவை சேர்ந்தவர். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி அதிமுக கவுன்சிலரான பாண்டுரங்கனுக்கு விற்று பணம் சம்பாதித்திருப்பது மிகவும் கேவலமாக உள்ளது என திமுகவினரே விமர்சனம் செய்து வருகின்றனர்.

பூண்டி, கடம்பத்தூர், திருவாலங்காடு, திருத்தணி, ஒன்றியங்களில் வரும் திருவள்ளூர்- திருப்பதி (என்.எச்.205 ) தேசிய நெடுஞ்சாலையில் அந்தந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் ரூ.1.50  கோடிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் என தெரிந்திருந்தும், அறிந்திருந்தும் அந்த நிலங்களில் 20 பேருந்து நிழற் கூடங்களை கட்டி முடித்துள்ளனர்.

தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அனைத்து பேருந்து நிழல் கூடங்களும் ஜேசிபி வைத்து சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.

 தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்படுகிறது என்று அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் கட்ட அனுமதித்தது கமகஷன்தான் என்ற பதில்  அவர்களுக்கே தெரியும்.

 பணம் அதிகாரிகள் வரை  பாய்ந்துள்ளது. .

பள்ளிக் கூடங்களகல் மாணவர்கள் அமர்ந்து படிக்க மேசை, பெஞ்ச் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மர்மமாகவே உள்ளது.

வருகின்ற நிதியில் நிர்வாக செலவுக்கு 5 சதவீதம் ஒதுக்குவதற்கு பதில் 20% ஒதுக்கி அதிலும் 15 சதவீதம் பணம்  எடுத்து இப்படியாக பல லட்சங்களை கையாடல் செய்துள்ளார் உமா மகேஸ்வரி.

அவரது ஊழலுக்கு, அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதிமுக, பாமக கவுன்சிலர்கள் பலமுறை வெளிநடப்பு செய்துள்ளனர்.

 மேலும் அமைச்சர் சாமு. நாசரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது  திமுக, கவுன்சிலர்கள் இதர கட்சி கவுன்சிர்களுடன் கூட்டு சேர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஸ்வரியை எதிர்க்கிறீர்களா என்று தாட், பூட், தஞ்சாவூர் என உடம்பை குலுக்கி உருட்டி அசைத்து மிரட்டி அனுப்பியுள்ளார் சாமு. நாசர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நிதி ஒதுக்கீடு குறித்து பலமுறை கேட்டும் பதில் ஏதும் இல்லை.

இந்த மாத ஆரம்பத்தில் மாவட்ட கவுன்சில் கூட்டத்தின் கடைசி கூட்டம்.  இந்தக் கூட்டம் காலையிலேயே மன்ற கூடத்தில் கூட்டப்பட்டது.

இதுவரை நடந்த 23 கூட்டங்களிலும் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யவில்லை. தீர்மானங்கள் என்னென்ன என்று நிறைவேற்றவில்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணம் ஒதுக்கி கொண்டீர்கள். சரிசமமாக பிரித்து தரப்படவில்லை என திமுக கவுன்சிலர்களே கேள்விகளை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். கோஷம் போட்டுக் கொண்டனர் கூச்சல் குழப்பம் நிலவியது.

 இதனை அடுத்து மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி குறுக்கீடு செய்து ரூ. 15 கோடி நிதி மீதம் உள்ளது அதில் அனைத்து கவுன்சிலருக்கும் தலா ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து தருகிறோம்.

 மீதமுள்ள 10 கோடி மாவட்ட ஊராட்சி குழு அலுவலக காம்பவுண்ட் சுவர் கட்ட, காம்பவுண்டுக்குள் முன்னாள் முதல்வர் முகருணாநிதியின்  திருஉருவச் கிலையை திறந்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 எனவே அனைத்து கவுன்சிலர்களும் அமைதியாக இருந்து வேற எதுவும் பேசாமல் நன்றி மட்டும் தெரிவித்து விடை பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

 அதன்படியே பிற்பகல் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தொடங்கியது. 5 ஆண்டுகளாக செய்தியாளர்களை அனுமதிக்காத இந்த கூட்டம் தற்போது அனைத்து செய்தியாளர்களையும் உள்ளே அனுமதித்தது.

 காரசார விவாதம் நடைபெறும் என்று செய்தியாளர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர். ஆனால் அனைத்து  கவுன்சிலர்களும் தான் போட்டியிட வாய்ப்பு கொடுத்த அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை மட்டும் தெரிவித்து பிரியாணியை சாப்பிட்டு விட்டு சென்றனர். ஆனால் ரூ.15 கோடி நிதியை மீதியை பின்னர் ரகசிய கூட்டம் நடத்தி நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஸ்வரி, அனைத்து கவுன்சிலர்களடம் கூறி சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளார்.

வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்யாமல் தீர்மான புத்தகத்தை காட்டாமல், முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாதது தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தான் ஜனநாயக படுகொலையை செய்துள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மெகா ஊழல் நடந்திருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் சமூக  ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஊராட்சி குழுவில் நடந்துள்ள முறைகேடுகளை உள்ளாட்சி துறையின் உயர் அதிகாரிகள்,  அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

– ரவிசந்திரன்