பாஜவை விரும்பும் அன்புமணி…அதிமுகவை விரும்பும் ராமதாஸ்…உட்கட்சி பூசலின் பின்னணியில் பாஜக…!!?

வட தமிழகத்தில் ஓரளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸிற்கும்,  கட்சியின் தற்போதைய தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கட்சி பதவியை ஒதுக்கீடு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் வார்த்தை போரும் ஏற்பட்டது. இதனால் தமிழக அரசியலில் இந்த விசயம் பேசு பொருளாகவும், விவாத பொருளாகவும் மாறியது.  ஒட்டுமொத்த வன்னிய மக்களின் பார்வையும் அக்கட்சி மீது திரும்பியது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடமும், பாட்டாளி சொந்தங்களிடமும் விசாரிக்கத் தொடங்கினோம்.

” கட்சியின் பொதுக்குழுவில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்புதான். கடந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த களேபரங்களை அனைவரும் அறிவார்கள். பாமகவின் வாக்கு வங்கி வீழ்ச்சி அடைந்துள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஆளுங்கட்சியும், ஏனைய மாநிலக் கட்சிகளும், ஊடகங்களும் மறைமுகமாக கூட்டணி அமைத்து உருவாக்குகின்றன. ஆனால் அப்படி ஒரு நிலை இல்லை என்பதை வெளிப்படுத்தவே பொதுக்குழு கூட்டத்திற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டது. அதனால் தான் கட்சியில் ஜனநாயக ரீதியில் பகிரங்கமாக நடைபெற்ற பேச்சு வார்த்தை… விவாதத்திற்கு உள்ளானது. உண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி தன் வழக்கமான வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனையில் தான் தற்போது தற்போதைய தலைவர் சின்ன அய்யா அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டிருக்கிறார்.” என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கட்சியின் நிறுவனரான ராமதாஸின் தீவிர ஆதரவாளர்கள் பேசுகையில், ” கட்சியை உருவாக்கி, எம்ஜிஆர்- கருணாநிதி- ஜெயலலிதா -போன்ற அரசியல் ஆளுமை மிக்க ஜாம்பவான்கள் அரசியலில் கோலோச்சும் போதே வன்னிய மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து பாட்டாளி மக்கள் கட்சியை அரசியல் ரீதியாக வலிமையான அரசியல் கட்சியாக உருவாக்கியவர் தலைவர் ராமதாஸ். அவர் நிறுவனராக இருந்தாலும்… கட்சியின் தலைவராக இல்லை என்றாலும்… அவரின் வார்த்தை தான் கட்சியினருக்கு வேதவாக்கு. அதை மீறுவதற்கு இக்கட்சியில் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அதிகாரம் இல்லை. அன்புமணி ராமதாஸ் கட்சியை வளர்த்தெடுப்பதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதால்… கட்சியை இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் வளர்க்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் முகுந்தன். விடுதலை சிறுத்தை கட்சியை வளர்ப்பதற்காக ஆதவ் அர்ஜுனா எப்படி கடுமையாக உழைத்தாரோ… அதேபோல் வன்னிய இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியை வளர்க்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் முகுந்தன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கைகளை அவதானித்த பிறகே ஐயா அவருக்கு இளைஞர் அணி பதவியை வழங்கினார். இதனை அன்புமணி ஏற்றுக் கொள்ளாததற்கு வேறு காரணமும் இருக்கிறது. அதற்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்ட பேரவை தேர்தல் தான் பதிலளிக்கும் ” என்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்ந்து கட்சியின் தீவிரமாக பணியாற்றி வரும் பாட்டாளி சொந்தங்களிடம் பேச்சு கொடுத்த போது, ” கட்சிக்கு அன்புமணி தலைவராக இருந்தாலும், ஐயாவின் பேச்சுக்கு தான் அதிக மதிப்பு. ஜி கே மணியிடம் இருந்த கட்சித் தலைவர் பதவியை அன்புமணி தான் விருப்பப்பட்டு ( பலவந்தமாக நிர்பந்தித்து) வாங்கிக் கொண்டார். இதன் பின்னணி என்னவென்றால் தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு தலைவருக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்பதால் அந்தப் பதவியை அன்பாக (!?) கேட்டு வாங்கிக் கொண்டார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் காரணமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவிற்கு கிடைத்தது. பாமக உடன் கூட்டணி சேர வேண்டும் என்றால் வன்னியர்களுக்கு 10 . 5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையும் அதிமுக ஏற்றுக் கொண்டு, தீர்மானம் நிறைவேற்றி, அரசாணையும் வெளியிட்டது. இதனால் ராமதாஸ் -ஜிகே மணி -வடிவேல் ராவணன் -போன்ற கட்சியின் சீனியர்கள் தொடர்ந்து அதிமுகவுடன் பயணிக்கலாம் என தீர்மானித்தனர். ஆனால் அன்புமணி இதற்கு எதிராக காய் நகர்த்தி .. நடைபெறுவது நாடாளுமன்றத் தேர்தல் தான். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஐந்து தொகுதி தான் கிடைக்கும். அதே பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஏழு தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைக்கும் என்று பேராசை பட்டு அதிமுகவின் உறவை துண்டித்து, பாஜகவிடம் நட்பு பாராட்டினார். இறுதியில் பாமக மண்ணை கவ்வியது அனைவருக்கும் தெரியும். தர்மபுரியில் கூட பாஜகவினர் யாரும் பாமகவிற்கு வாக்களிக்கவில்லை. இதனை கட்சியின் கிளை நிர்வாகிகளும், வாக்குச்சாவடி பிரதிநிதிகளும் தலைமைக்கும்.. தலைவர் ராமதாஸுக்கும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினர். ஆனால் அன்புமணி தொடர்ந்து பாஜகவின் கூட்டணிக்கு தான் ஆசைப்படுகிறார். ஆனால் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு ஓரளவு உதவி செய்த அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கிறார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே அரசியல் ரீதியான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதன் வெளிப்பாடு தான் பொதுக்குழுவில் வெடித்தது. கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார். பனையூரில் அவருடைய கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கூட்டினார் அதில் ஒன்பது மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி ராமதாஸ் வேறு வழி இல்லாமல் தந்தையிடம் சரண்டர் ஆனார்.‌ அதன் பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இருவரும் முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும் .. எங்களுக்குள் விரிசல் இல்லை என்ற தோற்றத்தை அன்புமணி ராமதாஸ் பாஜகவின் அழுத்தத்தால் உருவாக்கி இருக்கிறார். ” என்றனர்

அன்புமணி ராமதாஸிற்கு நெருக்கமான ஆதரவாளர்கள் சிலர் பேசுகையில், ” பாஜகவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றால் மத்தியில் இருந்து அமலாக்கத்துறை… வருமான வரித்துறை… சோதனைக்கு ஆளாக நேரிடும். இதனை தவிர்க்கவே அன்புமணி ..பாஜகவிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்.

அத்துடன் அவருடைய தந்தையும், கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் இந்த வயதிலும் தனியார்  மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் நெருக்கம் காட்டுகிறார். இதனால் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்து கை மாறி விடுமோ…!? என்ற அச்சமும் அண்ணனுக்கு உண்டு. அதனால் தான் அவருக்கு எதிரான போக்கில் அன்புமணி பயணிக்கிறார்” என்றனர்.

இது தொடர்பாக பாமகவின் அரசியல் உதயத்தையும், எழுச்சியையும் , வரலாற்றையும் உன்னித்து கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் பேசுகையில், ” வட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு பெற்ற நான்கு வன்னிய தலைவர்களின் உதவியுடன் பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. சிறிது சிறிதாக கட்சி வலிமை பெறும் போது இக்கட்சிக்காக தன்னுயிர் நீத்த பாட்டாளி சொந்தங்களை புறக்கணிக்கும் போக்கினை ராமதாஸ் பின்பற்றினார் அதே தருணத்தில் அவர்களின் வளர்ச்சியை விரும்பாமல் கட்டம் கட்டி அவதூறு சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றினார். கட்சி கூட்டங்களில் வீரமாக முழக்கமிடும் வேல்முருகன் – கூட்டங்களுக்கு ஆள் திரட்டும் படைபலம் கொண்ட காடுவெட்டி குரு- போன்ற முக்கிய நிர்வாகிகள் கட்சியில் செல்வாக்கு பெறக் கூடாது என்பதற்காகவும், தனக்குப் பிறகு தன் மகன் அன்புமணி தலைவராக வேண்டும் என்பதற்காகவும், அவரால் இவர்களை எதிர்த்து அரசியல் செய்ய இயலாது என்பதனை துல்லியமாக கணித்ததாலும்.. அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கியவர் ராமதாஸ். எம்ஜிஆர் – கருணாநிதி இடையேயான அரசியலை அவருடைய உதவியாளர்கள் மூலம் தெரிந்து கொண்டு இருவரிடமும் மென்மையான அணுகுமுறையையும் காரியம் சாதிக்கும் சாதுரியமான போக்கினையும் கடைப்பிடித்தார்.  அதே போக்கினை இன்று அன்புமணி பின்பற்றும்போது ராமதாஸிற்கு எரிச்சல் ஏற்படுகிறது. ராமதாசிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் பிளவு ஏற்படுவதையும் , அக்கட்சி பலவீனம் அடைவதையும் யாராலும் தடுக்க இயலாது.  ஏனெனில் அன்புமணி ராமதாஸிடம் கட்சியை அடித்தட்டு மக்களிடமிருந்து எடுத்துச் செல்வதற்கான பேச்சாற்றலோ… செயலாற்றுலோ .. இல்லை என்பதுதான் அனைத்து பாட்டாளி சொந்தங்களும் ஒப்புக் கொள்ளும் உண்மை. ” என குறிப்பிடுகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸிற்கும் அன்புமணிக்கும் இடையேயான பிணக்கு என்பது கூட்டணி கணக்கின் அழுத்தம் தான் என்பதும், இதன் பின்னணியில் தமிழக பாஜக கட்சியின் தலைவரான அண்ணாமலையின் அழுத்தமும், நெருக்கடியும் அதிகம் என்றும் பட்டவர்த்தனமாக தெரிகிறது.  

இதனிடையே கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் 50 சதவீதம் சின்ன அய்யாவிற்கும், ஏனைய ஐம்பது சதவீதம் பெரிய ஐயாவிற்கும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதும், கட்சியைப் பொறுத்தவரை ராமதாஸின் கண்ணசைவிற்கு தான் வீரியம் அதிகம் என்றும் நிர்வாகிகள் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– கேவிஆர்.கோபி.