மஸ்தானுக்கு பதவி
அன்சாரியின் ஆன்மீக சுற்றுலா…
விழுப்புரம் மாவட்ட விவகாரம்!
பொது வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த செஞ்சி மஸ்தான் ஒவ்வொரு பதவியாக இழந்து தனிமரமானார் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் மஸ்தானால் பதவி பெற்றவர்கள் பெரும்பான்மையானவர்கள் அமைச்சர் பொன்முடிக்கு சால்வை போர்த்தி அணி மாறிவிட்டனர் ஒருசிலர் மட்டும் நம்ம அரசியல் வாழ்க்கை அவ்வளவுதானா? என்று புலம்பிக்கொண்டு அமைதியாக இருந்தனர் இன்னொரு பக்கம் மாஜி மஸ்தான் இழந்த பதவிகளை பெற எல்லா வழிகளையும் கையாண்டுகொண்டு இருந்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் கூட்டேரிப்பட்டு அன்சாரி மாஜி மஸ்தானின் தீவிர ஆதரவாளர், இவரை மஸ்தானின் பினாமி என்று கூட விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவினர் மத்தியில் பேசுகின்றனர். பதவிகளை இழந்ததில் மஸ்தான் வருத்தப்பட்டாரோ இல்லையோ… கூட்டேரிப்பட்டு அன்சாரி போன்றவர்களுக்கு ரொம்பவே வருத்தம்
சமூக வளைதளங்களில் மஸ்தானுக்கு ஆதரவாக பதிவுகளை எழுதுவதில் வேகம் காட்டினார். அறிவாலயமும் ஆளுங்கட்சியினரும் தான் பதிவிடும் கருத்துக்களை பார்க்க வேண்டும் என்று தீவிர முனைப்பு காட்டினார். திமுக நிர்வாகிகளிடம், மஸ்தான் மீண்டும் மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆகப்போகிறார் என்று வலுக்கட்டாயமாக சொல்லிக்கொண்டு இருந்தார். இந்த வாரத்தில் நல்ல செய்தி வரும் என்று மஸ்தானின் அரசியல் எதிரிகளுக்கு பீதியை கிளப்பிக்கொண்டிருந்தார். அன்சாரியின் சமூக வளைதள பதிவுகள் இன்னொரு பக்கம் சூட்டை கிளப்பிக்கொண்டு இருந்தது.
எட்டு மாதங்களுக்கு இழந்த பதவிகளில் ஒன்றான மாவட்ட செயலாளர் பதவியை அறிவாலயம் கூப்பிட்டு கொடுக்க, மஸ்தானின் எதிர்ப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சி, ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி! அதில கூட்டேரிப்பட்டு அன்சாரிக்கு பெரிய மகிழ்ச்சி மஸ்தானை போய் நேரில் வாழ்த்தியவர் ஐந்து நாட்கள், நாகூர், திருநெல்வேலி ஆத்தங்கரை முத்துப்பேட்டை, இராமநாதபுரம் ஏர்வாடி, செங்கல்பட்டு, கோவளம், சென்னை மவுண்ட் ரோடு தர்கா, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினாராம். மீண்டும் மஸ்தானுக்க பதவி கிடைத்தால் வருவதாக வேண்டிக் கொண்டாராம். அதனால தன்னுடைய ஆன்மீக சுற்றுலா மூலம் நன்றி தெரிவித்தாராம். அதுசரி அன்சாரி மட்டும் மகிழ்ச்சி அடைந்தால் போதாது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினர் அனைவரும் மஸ்தானுக்கு பதவி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைய வேண்டும் அது மஸ்தான் கைகளில்தான் இருக்கிறது.
– ஆலவாயர்