வயலூர் முருகன் கோயில்…
சேதாரமான அமைச்சர் சேகர்பாபு உத்தரவு?
– பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு
திருச்சி அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயில். வயல்கள் சூழ்ந்து இருப்பதால் வயலூர் என பெயர் பெற்றது.
கிருபானந்த வாரியாருக்கு மிகவும் பிடித்த கோயிலாகும் இது. 40 ஆண்டுகளுக்கு முன் அவரது முயற்சியால் இக்கோயில் புனரமைக்கப்பட்டது. கடந்த 19ம் தேதி இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.
முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இதனால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இது தற்போது பழங்கதையாகி விட்டது.
குடமுழுக்கு பணிகளால் பல ஆண்டுகளாக கோயில் வளாகத்தில் திருமணங்கள் நடைபெறவில்லை. மேலும் கோயிலுக்கு சொந்தமாக வள்ளி மற்றும் வாரியார் என இரண்டு திருமண மண்டபங்கள் இருக்கின்றன. இவை சேதமடைந்த நிலையில் இருப்பதால் இவற்றில் திருமணங்கள் நடைபெறுவதில்லை.
இந்திலையில் கடந்த 2021ம் ஆண்டு அமைச்சர் சேகர்பாபு இக்கோயிலில் ஆய்வு செய்தார். அப்போது வள்ளி மற்றும் தேவசேனா (வாரியார்) திருமண மண்டபங்களை புனரமைத்து நவீனமயமாக்க உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.44 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
டெண்டர் விடப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்தவர் இதுவரை சுமார் ரூ.20 லட்சம் பணம் பெற்றும் அதற்கான பணிகளை செய்யாமல், மேலும் கூடுதலாக ரூ.18 லட்சம் கேட்டு பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். டெண்டர் காலம் நிறைவடைந்தும் பணிகள் நடக்காததால் வள்ளி, வாரியார் மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.
ஒரு முகூர்த்தத்திற்கு ரூ.15 ஆயிரம் வாடகை என ஆண்டுக்கு குறைந்தது 80 முகூர்த்தம் என்றால் 2 மண்டபத்திற்கு 173 முகூர்த்தம் என ரூ.25.90 லட்சமும், 3 ஆண்டுக்கு ரூ.1 கோடி கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாக்ஸ்
வள்ளி திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த மண்டபம் செடி, கொடிகள்மண்டி போய் காடாக காட்சியளிக்கிறது. வயலூரில் 15க்கும் அதிகமான தனியார் திருமண மண்டபங்கள் இருக்கின்றன. அவற்றில வாடகை அதிகம். இந்த வாடகையை தர வசதியில்லாத பொதுமக்கள் வள்ளி, தேவசேனா (வாரியார்) திருமண மண்டபங்களை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் ஏழைகள் தற்போது வயலூரில் திருமணங்களை நடத்துவதே இல்லை. எனவே
புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி ஏழை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸ்
20 ஆண்டாக “பேஸ் கார்” இல்லை.
கோயில் கட்டண ரசீது கியூ ஆர் கோட் ஸ்கேனர் இயந்திரம் மூலம் பரிசோதனை செய்யப்படாத நிலை உள்ளது. இது போன்ற, கோயில் நடைமுறைகளையும், வளர்ச்சி பணிகளையும் கண்காணிக்கும் பேஸ்கார் பதவி கடந்த 20 ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால் கோயில் வளர்ச்சி பணிகளை கண்காணித்து கோயிலுக்கு வருவாய் ஈட்டும் பணிகள் முடங்கிக் கிடக்கிறது என்று பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாக்ஸ்
அட்ரா சிட்டி காட்டும்
கோயில் ரைட்டர்
–
வயலூர் அருகேயுள்ள அல்லித்துறையை சேர்ந்தவர் சுந்தர். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் வயலூர் கோயில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.
2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தனது தாய் ராஜேஸ்வரியை மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடச் செய்து வெற்றி பெற்றார். அதன் பின் சுந்தர் கோயில் பணிக்கு செல்லாமல் தாய்க்கு பதிலாக கவுன்சிலர் வேலையை 5 வருடமாக பார்த்து வந்தார். தற்போது கவுன்சிலர் பதவிக்காலம் முடிந்து விட்டது. இவர் கடந்த 7 ஆண்டாக கோயில் பணியை செய்யாமலும், அந்த பணியை வேறு ஒருவரை கொண்டு நிரப்ப விடாமல் செய்து வருகிறார்.
, நான் எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு வருவேன், அதுவரை இந்த பதவியை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று அமைச்சர் கே.என்.நேரு பெயரை சொல்லி கோயில் நிர்வாகத்தை மிரட்டி வருகிறார்.
அரசு ஊழியரான இவர் அல்லித்துறையில் 4 ஆண்டாக வடமஞ்சு விரட்டு விழாவை நடத்தி வருகிறார்.
எனவே கோயிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் சுந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்
-மகேந்திரன்
Leave a Reply