நிறுவனரும் நானே… தலைவரும் நானே… ராமதாஸ் -அன்புமணி மோதல்..?பாமகவில் குழப்பம்…

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் சூடு பிடிக்க தொடங்கியது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் உட்கட்சி மோதலால் தொண்டர்கள் குழப்பமடைந்து வருகின்றனர். காரணம் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட செய்தி.

‘இனி நானே நிறுவனர் நானே தலைவர்’ என் அறிவித்து பாமகவின் அதிரடி ஆட்டம் ஆடியுள்ளார் ராமதாஸ். மகன் அன்புமணி இடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம் இல்லாத தலைவராக, அதாவது செயல் தலைவராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் அவர்.

பாமகவின் குழப்பம் அதிமுக, திமுக, பாஜகவினருக்கு ஒரே கொண்டாட்டம். இனி 2026 தேர்தலில் கொடுக்கிற சீட்டை வாங்கிக் கொள்ளுகிற நிலைக்கு பாமகவை தள்ளிவிட்டார்கள் என்பதைவிட பாழும் கிணத்திற்குள் அவர்களே விழுந்து விட்டார்கள் என்பது சரியாக இருக்கும்.சமுதாயத்தைப் பிடித்த அறியாமையை விளக்க மா மருந்து அரசியல் அதிகாரம் என்பதை உணர்ந்து 1989இல் பாமகவை துவக்கினார் ராமதாஸ் இப்பொழுது கேட்டாலும் தன் தடம் படாத கிராமங்களே இல்லை என்பார். அரசியல் ஆட்டங்களுக்காக தான் சந்திக்காத மத்திய சிறைகளே இல்லை என்பார். 

இதில் எது உண்மை என்பது பாமக தொண்டர்களுக்கும் அரசியலை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும்.

2022 ஆம் ஆண்டு கட்சி தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவி வந்தாலும் தனித்து செயல்பட முடியவில்லை என்ற மன கஷ்டம் அவரிடம் இருந்து வந்தது. ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை கூட டாக்டர் ராமதாசே  நியமனம் செய்கிறார். அப்புறம் நான் எதற்கு தலைவர் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே பணிப்போர் நீடித்தது.

அன்புமணிக்கு யாருடன் கூட்டணி வைப்பது என்று அரசியல் தெரியவில்லை. என்கிற முக்கிய காரணம் தான் இந்த பதவி மாற்றம் என்கின்றனர் ராமதாஸ் தரப்பினர். கடந்த லோக்சபா தேர்தலில் நேரத்தில் கூட்டணி தொடர்பாக அதிமுகவினரை ராமதாஸ் அணுகி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் ஆனால் அமித்ஷா  இடம் பேசிய அண்ணாமலையை விடியற்காலை வர வைத்து பாமக பாஜக கூட்டணி ஏற்படுத்தினார். 

அன்புமணி. அதிலிருந்து ராமதாஸ் அன்புமணி இடையே முட்டல் மோதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

என்னதான் டாக்டர் ராமதாஸ் நிறுவனத் தலைவர் ஆக இருந்தாலும் கூட, ஒற்றை வரியில் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி ஒரு தலைவர் பதவி பறிக்க முடியும், அதற்கு செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட வேண்டாமா? என்கிற கேள்வி அன்புமணி தரப்பில் இருந்து காட்டமாக கேட்கப்படுகிறது. அதுவும் சரிதானே என்கின்றனர் பாமக தொண்டர்கள். இந்த நிலையில் விரைவில் செயற்குழு குழுவை கூட்டி இந்த அறிவிப்பிற்கு ஆதரவளிக்குமாறு ராமதாஸ் கோரிக்கை விடுவார். அதற்குள்ளாக தன் ஆதரவாளருடன் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருகிறார் அன்புமணி. எப்படியோ தேர்தலுக்குள்ளாக பாமக இரண்டு பட போவது உறுதி. கட்சி யார் தலைமையில் இயங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– பா.ஜோதி நரசிம்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *