Save 20% off! Join our newsletter and get 20% off right away!

வசூல் ராஜா பராக்.. பராக்…நடுங்கும் குடியாத்தம் அரசியல் வாதிகள்…

எங்கே கமிஷன் வரும்- கட்டிங் வருமுன்னு கவுன்சிலர்கள்தான் வசூல் பண்ணப் பார்ப்பார்கள். ஆனால், அந்த கவுன்சிலர்களிடமே வசூலித்த வசூல் ராஜாவும் வந்துவிட்டார். எத்தனுக்கு எத்தன் இருக்கத்தானே செய்வார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சியான குடியாத்தத்தில்தான் இந்த கூத்து. கடந்த வாரத்தில் நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாறி, மாறி பேசிக் கொண்டிருந்தனர். உனக்கு போன் வந்ததா, எனக்கு வந்திடுச்சி என்று ரகசியமாய் பேசினர். குடியாத்தம் நகராட்சி முன்னாள் சேர்மனும், சிட்டிங் கவுன்சிலருமான த.புவியரசி பேஸ்புக்கில், சில வி.ஐ.பி.க்கள் பெயரை சொல்லி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு போன் செய்து ஒருவன் (யாரென்று தெரியவில்லை) பணம் கேட்டுக் கொண்டிருக்கிறான். யாரும் ஏமாறாதீர்கள் என்று பதிவு செய்தார். இதையடுத்து, போலீஸாரும் விசாரிக்கத் தொடங்கினர்.

தொடர்ந்து, மதிமுக நகர செயலாளரும் கவுன்சிலருமான ஆட்டோ மோகன் தன்னிடம் ஒருவன் பேசியதாகவும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் என்றும் தான் வரும்போது கார் பஞ்சராகிவிட்டதால் சில ஆயிரம் அனுப்புமாறும், வேண்டுமானால் துரைவைகோவை பேச சொல்லட்டுமா என்று சொன்னதாகவும் ஆடியோவையும், மெசேஜையும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்தார். உடனே பரபரப்பு தொற்றியது. நகராட்சி துணை சேர்மனும் அதிமுக பிரமுகருமான பூங்கொடி மூர்த்தி உட்பட அதிமுக கவுன்சிலர்களுக்கு, மாஜி அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணியின் பெயர்களைச் சொல்லி பணம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதேபோல், பாஜக கவுன்சிலர் சீதாலட்சுமிக்கும் போன் செய்து பணம் கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இவ்வாறாக, யார் ஏமாந்தது, யாரெல்லாம் பணம் தந்தார்கள் என்று பட்டிமன்றமே குடியாத்தத்தில் அரங்கேறி வருகிறது. ஆனால், பப்ளிசிட்டி பிரியரும் பந்தா பார்ட்டியுமான நகராட்சி சேர்மன் எஸ்.செளந்தரராஜன் குரூப்பில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை என்கின்றனர் கவுன்சிலர்கள். அந்த வட்டாரத்தில் இருந்து பணம் இழந்திருக்கிறா்களா என்றும் அவர்கள் பறிப்பவர்கள் போய் கொடுப்பார்களா என்றும் பேச்சு அடிபடுகிறது. திமுக கவுன்சிலர்கள் என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், கே.எம்.ஏகாம்பரம், சி.என்.பாபு, மதிமுக கவுன்சிலர் ஆட்டோ மோகன், காங்கிரஸ் கவுன்சிலர் கே.விஜயன் ஆகியோருடன் அதிமுக கவுன்சிலர் ஏ.தண்டபாணியும் நகர போலீஸில் புகார் மனு அளித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். பல லட்சம் செலவு செய்துவிட்டு இரண்டரை ஆண்டுகளில் வட்டிக்குக் கூட சம்பாதிக்காத நகராட்சியில் நாங்கள் நூறு ரூபாயைகூட விடமாட்டோம்– நாங்க போய் தருவோமா என்று வீராப்பு பேசுகின்றனர் கவுன்சிலர்கள்.  அட அப்படியா…?

– ஆலவாயர்