தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில்நேற்று நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்க்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில் 29 நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர்.இந்த நம்பிக்கை இல்லா தீர்மான ஓட்டெடுப்பில் 28 ஆதரவு ஓட்டுகள் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். இந்த வாக்கெடுப்பில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கலந்து கொள்ளவில்லை இதனால் சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்
சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக.வை சேர்ந்த 9 பேர், அதிமுக வை சேர்ந்த 12 பேர், மதிமுகவை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மதிமுக., காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் திமுகவுக்கு ஆதரவளித்தனர்.
இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4-ந் தேதி நடந்த நகர்மன்ற சேர்மன் தேர்தலில் திமுக., அதிமுக. ஆகிய 2 கட்சிகளும் தலா 15 வாக்குகளை பெற்று சமநிலை வகித்தது. தொடர்ந்து தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மனாக தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கண்ணன் என்ற ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக சங்கரன்கோவில் நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என கூறி பொதுமக்கள் மத்தியில் சங்கரன்கோவில் நகராட்சி மீதும், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி மீதும், அதிருப்தி நிலவி வந்தது. அதுமட்டுமின்றி அதிமுக மட்டுமில்லாது திமுக உறுப்பினர்களுக்கும் நகர்மன்ற தலைவிக்கும் இடையே பனிப்போரும் நிலவி வந்தது.
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை, டெண்டர் முறைகேட்டில் ஈடுபடுவது, அதிகப்படியான கமிஷன் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து சங்கரன்கோவில் நகராட்சி கூட்டங்களில் உறுப்பினர்கள் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுவதும், வெளிநடப்பு செய்வதும் வாடிக்கையாக இருந்தது.இந்தநிலையில் கடந்த மாதம் சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரிக்கு எதிராக, அவரை பதவி நீக்கம் செய்யம் வகையில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ சுயேட்சைகள் உள்ளிட்ட சுமார் 26 நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆனையாளரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று சேர்மன் உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.இந்நிலையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். 30 கவுன்சிலர்களில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் சேர்மன் உமா மகேஸ்வரி சேர்மன் பதவி பறிபோனது.
மேலும் இது குறித்து நகராட்சி ஆணையாளர் நாகராஜன் கூறுகையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்து உள்ளதால் சேர்மன் உமா மகேஸ்வரி பதவி இழந்தார் . இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதிய சேர்மன் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.தி.மு.க.வை சேர்ந்த சேர்மன் பதவி பறிபோன சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் உள்ள ஒரே தொகுதி சங்கரன் கோவில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அதிகாரம் மிக்க தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார்.
மேலும் தமிழகத்தின் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் இருந்து வருகிறார் இவர்கள் இருவரும் நினைத்திருந்தால் சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவருக்கு இந்த அவமானகரமான நிலைமை ஏற்பட்டு இருக்காது.
இது பற்றி சங்கரன்கோவில் திமுக முன்னோடிகளிடம் கேட்டபோது இதுவரை சங்கரன்கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் அனைவரும் ராஜலட்சுமி கருப்பசாமி ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருந்தவர்கள் அவர்கள் இதுவரை சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டதும் இல்லை.
இப்போது இருக்கும் சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா சங்கரன்கோவில் நகராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கான கமிஷனில் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறார் அதனை நகராட்சி தலைவர் கொடுக்காததால் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் தூண்டுதலின் பேரிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்று இருப்பதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி பலமுறை நகர்மன்ற தலைவர் பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இடம் முறையிட்டபோது நகராட்சியில் கிடைக்கும் பணத்தை நீங்கள் மட்டுமே பங்கு வைக்க கூடாது தொகுதி எம்எல்ஏவுக்கும் பொறுப்பு அமைச்சருக்கும் கொடுத்தால்தான் உங்கள் பதவி நீண்ட காலம் நீடிக்கும் இல்லையேல் உங்களை காப்பாற்ற எங்களால் முடியாது என்று கூறியதாக சேர்மனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் ஆளும் கட்சியின் நகராட்சி சேர்மன் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் படுதோல்வி அடைந்தது பதவியை பறி கொடுத்த சம்பவம் 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிற பயம் திமுகவின் உண்மை தொண்டர்கள் பேச்சில் தெரிய வருகிறது.
இது பற்றி திமுக தலைமை உடனடியாக உரிய விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் 2026 சட்டமன்ற தேர்தல் சங்கரன்கோவில் தொகுதிக்கு மட்டுமல்ல தென்காசி மாவட்டத்திலேயே திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்று திமுகவினரே வாய்விட்டு சொல்கின்றனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போலவே நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற பெயரில் நகர்மன்ற தலைவரை மிரட்டிய போது நகர்மன்ற தலைவர் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 2 லட்சம் வீதம் 60 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்து தனது பதவியை காப்பாற்றி இருக்கிறார்.
இப்போதும் ஒவ்வொருவருக்கும் ரெண்டு லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாயை செலவு செய்திருந்தால் இந்த நகர்மன்ற தலைவரின் பதவி பறிபோய் இருக்காது என்பது கூடுதல் தகவல்.
திமுக நகர்மன்ற தலைவரை நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற பெயரில் வீழ்த்திய கருப்பு ஆடுகள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்று திமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
- எம்.மு.சாமி